''செய்து முடிக்கப்பட்ட பணிக்கு டெண்டர் கோரும் அதிசயம் எங்கேயாவது நடந்திருக்கிறதா?'': கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

Karunanidhi's question and answers
சென்னை: செய்து முடிக்கப்பட்ட பணிக்கு டெண்டர் கோரும் அதிசயம் எங்கேயாவது நடந்திருக்கிறதா என்ற கேள்விக்கு திமுக தலைவர் கருணாநிதி பதிலளித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள கேள்வி பதில் அறிக்கை...

கேள்வி: செய்து முடிக்கப்பட்ட பணிக்கு டெண்டர் கோரும் அதிசயம் எங்கேயாவது நடந்திருக்கிறதா?

பதில்:- ஏன், இந்த அ.தி.மு.க. ஆட்சியிலேயே நடைபெற்றதாக என் கவனத்திற்கு ஒன்றைக் கொண்டு வந்தார்கள். அது தவறு என்றால், அரசு மறுக்கட்டும், ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறேன்.

கடந்த மார்ச் திங்கள் 9ஆம் தேதியன்று தஞ்சையிலே மிகப் பெரிய விழா ஒன்றை முதல்வர் காவேரித் தண்ணீரைப் பெற்றுத் தந்து விட்டார் என்பதற்காக ஏற்பாடு செய்து பாராட்டோ பாராட்டு என்று பாராட்டியதை யாரும் மறந்திருக்க முடியாது. அந்த நிகழ்ச்சியின்போது தஞ்சை நகராட்சி சார்பில் மட்டும் முதல்வர் வருகைக்காக ஒன்றரைக் கோடி ரூபாய் அளவிற்குச் செலவு செய்திருக்கிறார்கள். அப்படி என்ன செலவு? எதற்கான செலவு?
ஒருசிலவற்றை மட்டும் குறிப்பிடுகிறேன்!

வாகன நிறுத்துமிடம் சுத்தம் செய்ய 8 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய். மைதானத்தில் வாகன நிறுத்த இடத்தைச் சுத்தம் செய்ய 2 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய். மணிமண்டபம் சாலையைச் சுத்தம் செய்ய 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய். பேருந்து வளாகத் தடுப்பு வேலிக்கு வர்ணம் பூச 17 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய். ஆணையர் அறைக்கு நாற்காலி வாங்க 70 ஆயிரம் ரூபாய். ஒருவேளை வெள்ளி நாற்காலியாக இருக்குமோ?

இதுபோன்ற பணிகளை, நகராட்சி சட்டப் பிரிவு 15ன் படி மன்றத்தின் அனுமதியின்றி செய்து முடிக்க நகராட்சி ஆணையருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தஞ்சையில் நகராட்சி ஆணையர் இதனைத் தவிர்த்து விட்டார். முதல்வர் தஞ்சைக்கு வந்தது 9-3-2013. அதற்காக
30 லட்சம் ரூபாயில் ஹெலிகாப்டர் தளம் அமைத்தார்கள். இதற்காக ஒப்பந்தப் புள்ளிகளை 5-4-2013 அன்றுதான் பெற்றிருக்கிறார்கள்.

ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்பட்டு 9ஆம் தேதி முதல்வரும் வந்து சென்ற பிறகு 26 நாட்கள் கழித்துத்தான் டெண்டர் பெற்று முடிவு செய்திருக்கிறார்கள். பணியை ஒருவரிடம் ஒப்படைத்து பணி முடிந்த பிறகு, அந்தப் பணிக்காக டெண்டர் கோரும் அதிசயம் அ.தி.மு.க. ஆட்சியிலேதான் நடந்துள்ளது.

இதிலே இன்னொரு வேடிக்கை. 9ஆம் தேதி முதல்வர் வருவதற்கு முன்பு யார் ஹெலிகாப்டர் தளம் அமைத்தாரோ, அதே நபர்தான் குறைந்த தொகையைக் குறிப்பிட்டதன் காரணமாக டெண்டர் பெற்றிருக்கிறார். மற்றவரைக் காட்டிலும், இவர் குறைந்த தொகையை எவ்வாறு ஒப்பந்தப் புள்ளியிலே குறிப்பிட்டார்? வேறு ஒப்பந்தக்காரர் ஒருவர், உண்மையாக ஹெலி காப்டர் தளம் அமைத்தவரைவிட மேலும் குறைவாகத் தொகை குறிப்பிட்டிருந்தால்,
அப்போது என்ன செய்திருப்பார்கள்?

அடுத்து இந்த முடிவு நகர்மன்றக் கூட்டத்திலே நிர்வாக அனுமதிக்காக வைக்கப்பட்டுள்ளது. எப்போது தெரியுமா? மே 28ஆம் தேதி. முடிக்கப் பட்ட ஒரு பணிக்கான மதிப்பீட்டுத் தொகைக்கு நிர்வாக அனுமதி 79 நாட்களுக்குப் பிறகு கோருவது என்பதே சட்ட விதிகளுக்குப் புறம்பான தாகும்.

பலே தருண் விஜய்

கேள்வி: பா.ஜ.க. செய்தித் தொடர்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான தருண் விஜய், தமிழ்மொழியை இந்தியாவின் இரண்டாவது ஆட்சி மொழியாக அங்கீகாரம் செய்ய வேண்டுமென்று கூறியிருக்கிறாரே?

பதில்: மகிழ்ச்சியை அளிக்கும் செய்தி அது! மாநிலங்களவையில் தருண் விஜய் அவர்கள் பேசும்போது, தமிழ்மொழியை இந்திய அரசின் இரண்டாவது ஆட்சி மொழியாக அங்கீ கரிக்க வேண்டுமென்று பேசியிருக்கிறார். மேலும் "வடநாட்டில் உள்ள நண்பர்கள் தங்களுக்கே உரித்தான உயர்வு மனப்பான்மையின் காரணமாக நம்மிடமுள்ள மிகப் பழமை வாய்ந்ததும், புகழ் பெற்றதுமான தமிழ்மொழியின் ஆழத்தை இன்னும் உணரவில்லை. பல்லாண்டுக் காலமாக அந்தப் பழம்பெரும் மொழியின் செல்வாக்கு, கடல் கடந்து பல்வேறு நாடுகளிலும் உணரப்பட்டது.

தமிழில் அடிப்படைக் கல்வி அறிவைப் பெறும் அரசியல் அலுவலர்களுக்கு சிறப்புப் பதவி உயர்வும், கூடுதல் வருவாயும் கொடுத்து ஊக்குவிக்க வேண்டும். வடநாட்டிலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் தமிழ்மொழியைப் பரப்புவதற்காக சிறப்புத் திட்டம் ஒன்றை மத்திய அரசு வகுத்துச் செயல்படுத்த வேண்டும்.

நாட்டின் மறுமலர்ச்சிக்கும், புதிய கலாச்சார மாற்றத்துக்கும் உறுதுணையாக இருக்கும் தமிழ்மொழிக்குரிய மரியாதையையும், தகுதியையும் அளித்துள்ளோமா என்பதைச் சிந்திக்க வேண்டும்" என்று பேசியிருப்பது தமிழ் உணர்வுள்ள அனைவருக்கும் பெருமிதம் தருவதாகும்.

தருண் விஜய் பேசியதைத் தொலைக்காட்சியில் பார்த்தவுடனேயே அவருக்குப் பாராட்டுத் தெரிவிக்குமாறு மாநிலங் களவை உறுப்பினர் தம்பி கே.பி. ராமலிங்கத்திடம் கூறினேன். தருண் விஜய் அவர்களுடைய உணர்வுகளைப் பாராட்டி நன்றி செலுத்துகிற அதே வேளையில், செம்மொழியாம் தமிழ்மொழியை மத்திய அரசின் இரண்டாவது ஆட்சி மொழியாக அல்ல, மத்திய அரசின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக ஏற்க வேண்டுமென்று திராவிட முன்னேற்றக் கழகம் நீண்ட ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

2011ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின்போது, கழகத்தின் சார்பில் வைக்கப்பட்ட நமது தேர்தல் அறிக்கையில் "திராவிட முன்னேற்றக் கழகத்தின் விடா முயற்சியின் காரணமாக தமிழ்மொழி மத்திய அரசால் செம்மொழி என்று அறிவிக்கப்பட் டுள்ளது. இருப்பினும் செம்மொழியான தமிழ், மத்திய ஆட்சி மொழியாக இன்றளவும் இடம் பெறவில்லை. அறிஞர் அண்ணா காலத்தில் இருந்து அனைத்து தேசிய மொழிகளையும் மத்திய ஆட்சி மொழிகளாக்க வேண்டும் என்றும், அவ்வகை அணுகுமுறைதான் மொழிப் பிரச்சி னைக்கு நிரந்தரத் தீர்வாக அமையும் என்றும் தி.மு.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. எனவே, செம்மொழியாம் தமிழை மத்திய அரசின் ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துவோம்" என்று குறிப்பிட்டுள்ளதை நினைவு கூர வேண்டும்.

தேனி பஸ் ஸ்டாண்ட் விவகாரம்

கேள்வி: தேனியில் பேருந்து நிலையப் பணிகள் முடிவடைந்த போதிலும், இன்னும் திறக்கப்படவில்லையே?

பதில்: இந்த ஆட்சியில் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்கள் எவையெவை எந்தெந்த ஊரில் திறக்கப்படவில்லை என்று பட்டியல்தான் திரட்ட வேண்டும். இரண்டு நாட்களுக்கு முன்பு தான் சென்னையில் கட்டி முடிக்கப்பட்ட காவல் நிலையங்கள் முதல்வரின் தேதிக்காக திறக்கப் படாமல் இருப்பதைச் சுட்டிக்காட்டியிருந்தேன். இப்போது தேனியைப் பற்றிக் கேட்கிறீர்கள்.

திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில்தான் தேனி பைபாஸ் சாலையோரம் இடங்களைக் கையகப்படுத்தி 11 கோடியே 50 லட்சம் ரூபாய்ச் செலவில் புதிய பேருந்து நிலையக் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் கழக ஆட்சியில் தொடங்கப்பட்டதாயிற்றே; விடுவார்களா? பணிகள் தாமதப்படுத்தப்பட்டன. அதன்பிறகு பணி நிறைவு பெற்று நான்கு மாதங்கள் ஆகின்றன. இன்னும் திறக்கப் படவில்லை. திறக்கப்படாததற்குக் காரணம், தேனி நகர்மன்றத் தலைவருக்கும், நகர அ.தி.மு.க. செயலாளருக்கும் இடையே பிரச்சினை என்கிறார்கள்! பிரச்சினை எப்போது தீருமோ? பேருந்து நிலையம் எப்போது திறக்கப்படுமோ?

நாத்திகர்களுக்கு மண்டபம் கிடையாது

கேள்வி: இந்து அறநிலையத் துறைக்குச் சொந்தமான மண்டபங்களை நாத்திகர்களுக்கு நிகழ்ச்சிகள் நடத்த வாடகைக்குத் தரக் கூடாது என்று அரசின் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப் பட்டிருப்பதாகக் கூறப்படுகிறதே?

பதில்: அப்படியொரு முடிவினை அ.தி.மு.க. அரசு எடுத்திருக்குமேயானால் அது கண்டிக்கத்தக்க முடிவாகும். பண்டித நேரு அவர்களே தன்னை ஒரு நாத்திகர் என்றுதான் அறிவித்துக் கொண்டார். அண்ணாவே நாத்திகர் தான். அந்த அண்ணாவின் பெயரை தங்கள் கட்சிக்கு வைத்துக் கொண்டிருப்பவர்கள் இப்படி ஒரு முடிவினை எடுத்திருப்பது வேதனைக்குரிய ஒன்றாகும். அந்தச் சுற்றறிக்கையை அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.

"பகுத்தறிவாளர்கள் இந்தச் சுற்றறிக்கையை ரத்து செய்யக் கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தால் சட்டத்தின் முன் இந்த ஆணை நிற்காது" என்று திராவிடர் கழகத் தலைவர், கி. வீரமணி அவர்கள் சுட்டிக் காட்டியிருப்பதை இந்த அரசு சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

குறுவை பொய்த்து விட்டதே

கேள்வி: இந்த ஆண்டு குறுவைச் சாகுபடி அறவே பொய்த்துப் போய் விட்ட நிலையில், சம்பா சாகுபடியிலும் அரசு இலக்கை எட்ட முடியாத நிலை இருப்பதாகவும், அதைக் கண்டு அமைச்சரும், அதிகாரிகளும் அதிர்ச்சி அடைந் ததாகவும் செய்தி வந்திருக்கிறதே?

பதில்: சம்பா சாகுபடியில் அரசு இலக்கில், ஐம்பது சதவிகிதம் அளவுக்குக்கூட பூர்த்தியாக வில்லை என்பதைக் கண்டு, டெல்டா மாவட்டங் களில் ஆய்வுக்குச் சென்ற அமைச்சரும், அதிகாரிகளும் அதிர்ச்சி அடைந்ததாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில், சம்பா சாகுபடிப் பாசனத்திற்காக முன் கூட்டியே கடந்த மாதம் 2ஆம் தேதியன்றே மேட்டூர் அணை திறக்கப்பட்டது. தண்ணீர் திறந்தாலே சம்பா அறுவடைக்கு வந்து விடும் என்ற நினைப்பில், இந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில் 12 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி நடைபெறும் என்று அரசு அறிவித்தது. ஆனால் கிளை ஆறுகள், கால்வாய்கள், வாய்க்கால்கள் தூர்ந்து போக விடப்பட்ட நிலையில், கடைமடைப் பகுதி வரை பாசனத்திற்குத் தண்ணீர் செல்வதில் பெரும் சங்கடம் ஏற்பட்டது.

மேட்டூர் அணையிலிருந்து வந்த தண்ணீரில் பத்து டி.எம்.சி.க்கு மேலான தண்ணீர் எதற்கும் பயன்படாமல் கடலில் வீணாகச் சென்று கலந்தது. தூர்வார அரசு ஒதுக்கிய 28 கோடி ரூபாய் என்ன ஆனது என்று விவசாயிகளே கேள்வி கேட்டனர். ஒரத்தநாடு போன்ற பகுதிகளில் விவசாயிகள் தாங்களே சொந்த முயற்சியில் வாய்க்கால் வெட்டி, பாசனத்திற்குத் தண்ணீரைக் கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர்.

விவசாயிகளிடம் தேவையான விதை நெல் மற்றும் நிதி ஆதாரம் இல்லாதது; அரசியல் குறுக்கீட்டால், கூட்டுறவுக் கடன் கிடைப்பதிலே பெரும் சிக்கல்; விதை நெல் மற்றும் உரங்கள் விலை உயர்வு போன்றவற்றால் டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி முறையாக முழு வீச்சில் தொடங்கப்படவில்லை.

குறுவை, சம்பா சாகுபடி நேரங்களில் அரசின் சார்பில் என்னென்ன முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும், எத்தகைய உதவிகளை வழங்க வேண்டும் என்பதைப் பற்றியெல்லாம் நான் ஏற்கனவே பலமுறை தெரிவித்திருந்தபோதிலும் அதனை அரசினர் காதில் போட்டுக் கொள்ளவில்லை.

தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடிப்பதைப் போல, வேளாண் துறை அமைச்சரும் அதிகாரிகளும் டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்யப் புறப்பட்டனர். முதலில் தஞ்சை மாவட்டத்தில் ஆய்வு செய்த போது, பெரும்பான்மையான நிலங்கள் சாகுபடி செய்யப்படாமல், காலியாக இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். அந்த மாவட்டத்தில் வழக்கமாக நடக்கும் சாகுபடிப் பரப்பளவில், ஐம்பது சதவிகிதத்திற்கும் குறைவாகவே சம்பா சாகுபடி நடந்துள்ளது. அதனால் திருத்திய நெல் சாகுபடி முறை மற்றும் இயந்திர நடவு முறை ஆகியவற்றை மட்டுமே ஆய்வு செய்து விட்டுத் திரும்பி விட்டார்களாம்!

கச்சத்தீவு

கேள்வி: கச்சத் தீவுப் பிரச்சினையில் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்திற்கு தமிழக அரசு பதிலளிக்கவில்லையே?

பதில்: கச்சத் தீவு இந்தியாவுக்குத்தான் உரிமையானது என்பதைச் சுட்டிக்காட்டிடும் பல்வேறு ஆதாரங்களை எடுத்துக்காட்டி, நான் குறிப்பிட்ட வரலாற்றுப்பூர்வமான ஆதாரங்களை யும், மேலும் தமிழக அரசிடம் இருக்கும் கூடுதல் ஆவணங்களையும் இணைத்து உச்ச நீதிமன்றத் தில் உரிய முறையில் தாக்கல் செய்வது மிக மிக அவசியமாகும் என்றும், அதனைத் தமிழக அரசு உடனே செய்திட வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டேன்.

இந்தப் பிரச்சினையில் நான் எடுத்துக் காட்டியதற்கு மேலும் வலுவூட்டும் வகையில் ராமநாதபுரம் சேதுபதி சமஸ்தானத்திற்கே கச்சத் தீவு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை வழங்கிட சேதுபதியின் வாரிசுகள் முடிவு செய்திருப்பதாகவும் ஏடுகளில் செய்தி வந்துள்ளது.

கச்சத் தீவு தங்கள் பரம்பரைக்குச் சொந்த மானது என்பதற்கான ஆதாரங்களை ராமநாதபுரம் மன்னர் பரம்பரையினர், அரசிடம் ஒப்படைக்க முடிவு செய்திருக்கிறார்களாம். அதன் தொடர்ச்சியாக ராமநாதபுரம் மன்னராக இருந்த ராமநாத சேதுபதியின் மகளும், சென்னையில் வசித்து வருபவருமான ராஜேஸ்வரி நாச்சியார் கூறும்போது, "கச்சத்தீவு எங்களுக்குச் சொந்தமானது என்பதற்கான ஆவணங்களை, 1968இல் என் தந்தை, அவரிடம் உதவியாளராக இருந்த ராமச்சந்திரன் மூலம், வெளியுறவுத் துறைச் செயலாளராக இருந்த நாயரிடம் வழங்கியுள்ளார். கிழவன் சேதுபதி காலத்திலிருந்து கச்சத்தீவு எங்கள் மூதாதையர் வசம் இருந்துள்ளது. மண்டபம் மரைக்காயர் உட்பட, நான்கு பேருக்கு, குத்தகைக்கு விட்டுள்ளனர். இத்தீவை மீனவர்கள் பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளித்துள்ளனர்" என்றெல்லாம் தெரிவித்திருக்கிறார்.

மேலும் ராமநாதபுர சேதுபதியின் தம்பி மகன், குமரன் சேதுபதி கூறுகையில், "கச்சத்தீவு, ராமநாதபுரம் மன்னருக்குச் சொந்தமானது என்பதற் கான ஆதாரங்கள் உள்ளன. அவற்றை விரைவில் முதல்வரைச் சந்தித்து வழங்கிட உள்ளோம். கச்சத் தீவை மீட்க இது உறுதுணையாக இருக்கும்" என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும் கச்சத் தீவினைத் திரும்பப் பெறுவதற்கு தமிழக அரசுக்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் வழங்குவோம் என்று அவர்கள்
கூறியிருக்கிறார்கள்.

எனவே நான் ஏற்கனவே தெரிவித்த கருத்தின்படி தமிழக அரசு இனியும் சுணக்கமாக இல்லாமல், ராமநாதபுரம் மன்னர் குடும்பத்தினர் கூறியுள்ள அந்த ஆதாரங்களையும், தமிழக அரசிடம் உள்ள ஆவணங்களையும் திரட்டி உச்ச நீதிமன்றத்தில் எடுத்துக்காட்டிட முன்வர வேண்டு மென்று மீண்டும் வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+