என்ன தான் நடக்கிறது தமிழகத்தில் ?... ஆட்சி என்ற ஒன்று இருக்கிறதா? தி.மு.க. தலைவர் கருணாநிதி கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை : என்னதான் தமிழகத்தில் நடைபெறுகிறது? ஆட்சி என்ற ஒன்று இருக்கிறதா? இருந்தால் அது செயல்படுகிறதா? என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது...

karunanithi

வரும், வரும் என்று சொல்லப்பட்டு வந்த தமிழகச் சட்டப்பேரவைத் தொடர் கூட்டமும், ஆளுநர் உரையாற்றிய நாளிலிருந்து கணக்கிட்டால், 29 நாட்கள் நடைபெற்று முடிந்து விட்டது!

ஆளுநர் உரை யாற்றிய நாள் 17-2-2015. நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது, 25-3-2015. தற்போது மானியக் கோரிக்கைகள் மீது சுதந்திர உணர்வு சிறிதுமில்லாத விவாதங்கள் 18 நாட்கள் பெயரளவில் நடைபெற்று "அம்மா" புராணத்தோடு அமைச்சர்கள் பதிலளித்து முடித்து விட்டனர்.

அமைச்சர்கள் தங்கள் துறைகளின் மூலம் எத்தனை கோடி ரூபாய்க்கான அறிவிப்புகளைச் செய்தனர், அந்தத் துறையின் விவாதங்கள் முடிவுற்ற சில நாட்களுக்குப் பிறகு, அதே துறையைச் சார்ந்த எத்தனை அறிவிப்புகளை 110 வது விதியின் கீழ் முதலமைச்சர் ஜெயலலிதா பேரவையில் படித்தார்? அன்றாடம் இந்த ஒரே பணிக்காக மட்டும், முதலமைச்சர் பேரவைக்கு வருவதும், முதலமைச்சர் அவைக்குள் நுழைந்ததும், அவர் இருக்கும்போது வேறு யாரும் எந்தப் பிரச்சினையையும் பற்றிக் கேள்வி கேட்கக் கூடாது என்பதற்காக; கேள்வி பதில்கள் ஒத்தி வைக்கப்படுவதும், உடனடியாக முதலமைச்சர் ஏற்கனவே தயாரித்துத் தரப்பட்ட அறிக்கையை 110வது விதியின் கீழ் படிப்பதும், ஆளுங்கட்சியினர் ஒருசேர மேஜையைத் தட்டுவதும், உடனே ஆளுங்கட்சிக்கு நெருக்கமான ஒரு சிலர், அந்த அறிக்கையின் கீழ் செய்யப்பட்ட அறிவிப்பைப் பாராட்டுவதும், இறுதியாகப் பேரவைத் தலைவர், ஜெயலலிதா படித்த அறிக்கைக்காக ஆகா, ஓகோ என்று "கின்னஸ்" என்றும், "மகாபாரதம் - இராமாயணம்" என்றும் வானளாவப் பாராட்டுவதுதான் தாமதம், அடுத்த நிமிடமே பேரவையாவது, வேறவையாவது என்று வந்த வேகத்திலேயே எழுந்து வெளியே சென்று விடுவதும்தான் இந்தச் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் முழுவதும் நாடு கண்ட கண்கொள்ளாக் காட்சி!

ஒரே நாள் முதல்வருக்கான காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது மட்டும் ஜெயலலிதா பேரவையில் இருந்திருக்கிறார். எனவே பேரவையில் தொடர்ந்து அமர்ந்து கலந்து கொள்ளக்கூடிய அளவுக்கு, அவரது உடல்நிலை நன்றாகத்தான் உள்ளது என்பதில் மகிழ்ச்சி! எனினும், வேண்டுமென்றே அவையையும், ஜனநாயகத்தையும், மக்கள் பிரச்சினைகளையும் அலட்சியம் செய்கின்ற வகையில்தான் மற்ற மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்களை அவர் புறக்கணித்திருக்கிறார் என்றே நினைக்கத் தோன்றுகின்றது.

பேரவையில் எதிர்க்கட்சிகளின் சார்பில் கொடுக்கப்பட்ட ஒத்திவைப்புத் தீர்மானங்களும், கவன ஈர்ப்புத் தீர்மானங்களும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. பல்வேறு துறைகளிலிருந்து பதில்கள் வரவில்லை, வரவில்லை என்ற பதிலைத்தான் பேரவைத் தலைவர் தெரிவிக்கிறார். தொடர் கூட்டமே முடிந்து விட்டது. இருந்தாலும் பல துறைகளிலிருந்து பதில்கள் வரவில்லை என்றால், அ.தி.மு.க. ஆட்சியில் அந்தத் துறைகள் எல்லாம் பேரவையின் மாண்புகளை மதித்து எவ்வாறு பணிகளை ஆற்றுகின்றன என்பதைத் தெரிந்து கொள்ள முடிகிறதல்லவா?

48 ஒத்தி வைப்புத் தீர்மானங்கள் கொடுக்கப்பட்டதில், ஒன்றுகூட அரசால் எடுத்துக் கொள்ளப்படவில்லை. 300 கவன ஈர்ப்புத் தீர்மானங்களில் 14 கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் மட்டுமே பெயருக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன என்றால், எந்த அளவுக்கு மாநில மக்களின் பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளுக்கு இந்த ஆட்சியிலே முன்னுரிமை தரப்படுகிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

ஆனால் முதலமைச்சர் 110 வது விதியின் கீழ் 181 அறிவிப்புகளைச் செய்ததாகப் பேரவைத் தலைவர் அவையில் தெரிவித்துப் போற்றிப் புகழ்ந்திருக்கிறார். அந்த அறிவிப்புகளை ஒவ்வொன்றாக முதலமைச்சர் அவையில் செய்த போது நன்றியும், பாராட்டும் கூறிய உறுப்பினர்கள், மொத்த எண்ணிக்கையைத் தெரிவித்த போதும் பாராட்டியிருக்கிறார்கள்.

கடந்த ஆண்டுகளில் 110 வது விதியின் கீழ் செய்யப்பட்ட அறிவிப்புகளின் கதி என்ன என்று திரும்பத் திரும்ப எதிர்க்கட்சிகள் கேட்ட போதிலும் அதைப்பற்றி எந்தவிதமான வெள்ளை அறிக்கையோ, பதிலோ தரப்படவில்லை. அதிலிருந்தே அவற்றின் கதி எப்படிப்பட்டது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

இன்று ஒரே நாளில்தான் நாளேடுகளில் எத்தனை எத்தனை செய்திகள் டெல்லியில் காவிரி கண்காணிப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றுள்ளது. அந்தக் கூட்டத்திலும் தமிழகத்துக்கு தண்ணீர் தர இயலாது என்று டெல்டா மாவட்ட விவசாயிகளின் தலையில் இடி விழுந்ததைப் போல, கர்நாடக அரசு கை விரித்து விட்டது.

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி தமிழகத்திற்கு ஆண்டுக்கு 92 டி.எம்.சி. தண்ணீரைக் கர்நாடகா தரவேண்டும். கர்நாடக அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் வரை 48 டி.எம்.சி. தண்ணீரை நமக்குத் தர வேண்டியுள்ளது. அக்டோபர் முதல் வரும் 2016 ஜனவரி வரை 47.5 டி.எம்.சி. தண்ணீரைத் தர வேண்டும். ஆனால் கர்நாடக அரசு அதிகாரிகள் அங்கும் மழை இல்லாமல் வறட்சி நிலை நிலவுவதாகவும், தண்ணீர் தர இயலாத சூழ்நிலை உள்ளதாகவும் கூட்டத்தில் தெரிவித்து விட்டார்கள்.

எனவே பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்து விட்டது. இந்த நிலையில் இலட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களில் பயிரிடப் பட்டுள்ள சம்பாப் பயிரைக் காப்பாற்றக் கோரி, காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் வேதனை முற்றிய விரக்தியோடு, கடையடைப்பு, ரெயில் மறியல், பேருந்து மறியல் போன்ற போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தமிழகம் முழுவதும் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட சத்துணவு அலுவலர்கள் பணியாற்றி வருகின்றார்கள். அவர்கள் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, காலிப் பணியிடங்களை நிரப்புதல் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் போராடி வருகிறார்கள். சென்னை மாநகரில் அவர்கள் பேரணி நடத்தி, முதல்வரைச் சந்திக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்த போது, அவர்கள் பிரதிநிதிகளை அமைச்சரிடம் அழைத்துச் செல்வதாகக் கூறி, இழுத்தடித்து ஏமாற்றிய காரணத்தால் சாலை மறியலில் ஈடுபட முனைந்து, அவர்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தியிருக்கிறார்கள்.

ஆனால் பேரவையில் மற்ற அமைச்சர்களைப் போலவே, இந்தத் துறை அமைச்சரும் தடியடி நடத்தப்படவில்லை என்று உண்மைக்கு மாறானதைச் சொல்லி மறுத்திருக்கிறார். மேலும் விவசாயிகள் மீது ஜப்தி நடவடிக்கையை நிறுத்தி கடன் தள்ளுபடி செய்ய வேண்டும், தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து விவசாயிகளுக்கு உரிய வறட்சி நிவாரணம் பாகுபாடின்றி வழங்க வேண்டும் என்பது உட்பட ஆறு அம்சக் கோரிக்கையை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் அண்ணா சாலையில் அரை நிர்வாணப் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள்.

திருவள்ளூர் மாவட்டத்தில், புதிதாகத் திறக்கப்பட்ட மணல் குவாரியை உடனே மூடக்கோரி, கொசஸ்தலை ஆற்றில் குடியேறும் போராட்டம் நடத்திய 313 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்களின் படகு மீது கப்பலால் மோதி, இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்திய போது, படகு உடைந்து கடலில் மூழ்கியது. கடலில் குதித்த வில்வராஜ் என்ன ஆனார் என்றே தெரியவில்லை. மற்ற மூன்று பேரை இலங்கைக் கடற்படையினர் சிறைபிடித்தனர். வில்வராஜை மற்றொரு படகில் தேடிச் சென்ற மீனவர்களையும் இலங்கைக் கடற்படையினர் தாக்கி விரட்டியடித்துள்ளனர். தமிழக அரசின் சார்பில் இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படை யினரால் கைது செய்யப்பட்டால், உடனடியாக பிரதமருக்குக் கடிதம் எழுதுவதோடு தங்கள் பணி முடிந்து விட்டதாகக் கருதுகிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதி அருகே சூரிய மின் சக்தி நிலையம் அமைக்க தமிழக அரசு அதானி குழும நிறுவனத்திற்கு அனுமதி கொடுத்ததின் தொடர்ச்சியாக அந்தப் பகுதிகளில் உள்ள விளை நிலங்களை குறைந்த விலைக்கும், முறைகேடாகவும் இடைத்தரகர்கள் மூலமாக வாங்குகின்ற முயற்சி அங்கே நடைபெறுகிறது. இதன் காரணமாக கிராம மக்கள் ஆத்திரமடைந்து அதானி குழும ஊழியர்கள் இரண்டு பேர் அரிவாள் வெட்டுக்கு ஆளாகி மருத்துவ மனையிலே சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.

செம்மஞ்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பு ஊசி போடப்பட்ட மூன்று மாதக் குழந்தை ஒன்று உடல் நலம் பாதிக்கப்பட்டு, உடனடியாக சிகிச்சை அளிக்கப்படாததால் இறந்ததின் காரணமாக அந்தக் குழந்தையின் உறவினர்களும், நண்பர்களும் ராஜீவ் காந்தி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளார்கள். சட்டக் கல்லூரி மாணவர்கள் இரண்டு குழுவாகப் பிரிந்து கடும் மோதலில் ஈடுபட்டிருக்கிறார்கள். தண்டையார்பேட்டையில் இன்று ஒரே நாளில் மூன்று வீடுகளில் கொள்ளையடிக்கப்பட்டு, காவல் நிலையத்தை மக்கள் முற்றுகையிட்ட சம்பவமும் நடைபெற்றுள்ளது.

பேரவையில் கடைசி நாளன்று முதலமைச்சர் ஜெயலலிதா 110 வது விதியின் கீழ் படித்த அறிக்கைகளில் ஒன்று பெண் எழுத்தாளருக்கு "அம்மா இலக்கிய விருது" ஆண்டுதோறும் அளிக்கப்படவிருக்கிறதாம். அதையும் முதலமைச்சர் தனக்குத்தானே அறிவித்துக் கொண்டார். "அம்மா" பெயரிலான அந்தத் திட்டத்தைக் கூட வேறு ஒருவரைக் கொண்டு அறிவித்திட இந்த ஆட்சியினர் விரும்பவில்லை.

அ.தி.மு.க. ஆட்சியில், கட்சியின் தலைவி பெயரை ஓரிரு திட்டங்களோடு நிறுத்திக் கொள்ளலாம். ஆனால் "அம்மா" பெயரில் எத்தனை திட்டங்கள்? அவ்வாறு வைத்துக் கொள்ளக் கொஞ்சமாவது கூச்சமாக இருக்காதா? அரசு என்ன, இவர்களுடைய சொந்தக் கட்சி உடைமையா? ‘அம்மா' மாளிகை, ‘அம்மா' மருந்தகம், ‘அம்மா' தண்ணீர், ‘அம்மா' உப்பு, ‘அம்மா' சிமெண்ட், ‘அம்மா' உணவகம், ‘அம்மா' குடிநீர், ‘அம்மா' அமுதம் பல்பொருள் அங்காடிகள், ‘அம்மா' விதைகள், ‘அம்மா' குழந்தை நலப் பரிசு பெட்டகம் (அம்மா பேபி கேர் கிட்), ‘அம்மா' முழு உடல் பரிசோதனை - என்ற வரிசையில் இப்போது செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் விருதுகளுக்குப் போட்டியாக, "அம்மா இலக்கிய விருது" அறிவிக்கப் பட்டுள்ளது.

பொன்னேரியில் 13,314 கோடியில் தொழில் முனையமாம்; நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏதாவது நம்பும்படியாக இருக்கிறதா? தமிழ்நாடு அரசின் ஆண்டு நிதி நிலை அறிக்கை எத்தனை கோடி ரூபாய் கொண்டது? நேற்றைய முதல் துணை மதிப்பீடுகள்கூட வெறும் 1,012.30 கோடி ரூபாய்க்குத்தான் கோரப்பட்டு ஒப்புதல் தரப்பட்டுள்ளது! மானியக் கோரிக்கைகள் மீது எத்தனை கோடி ரூபாய்க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது? இந்தத் தொடரில் அதாவது நான்கரை ஆண்டுகளில் முதலமைச்சர் செய்த 181 அறிவிப்புகளுக்கான நிதி மதிப்பீடு எவ்வளவு? அந்தத் தொகையை எந்த நிதியிலிருந்து ஒதுக்கப் போகிறார்கள்? அந்த நிதிக்கு அவையின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதா? ஒப்புதல் பெறப்படாவிட்டால் அவைகள் எல்லாம் நிறைவேறாத திட்டங்களா? சட்டப் பேரவையின் ஒப்புதல் பெறாமல் எந்தச் செலவினமும் செய்யக் கூடாது என்று இந்திய அரசியல் சட்டம் 266 வது பிரிவில் சொல்லப்பட்டுள்ளதே; அந்தப் பிரிவுக்கு அ.தி.மு.க. ஆட்சியைப் பொறுத்தவரை எவ்விதப் பொருளும் கிடையாதா?

இதுபற்றி வார இதழ் பதில்களில் - "தமிழகம் ஏற்கனவே கடன் சுமையில் தத்தளித்துக் கொண்டு இருக்கும் நிலையில் தினமும், விதி எண். 110ன்படி புதிய புதிய திட்டங்களை அறிவிக்கிறார்களே, இதற்கெல்லாம் பணம் எங்கிருந்து வரும்?" என்ற கேள்விக்கு, "திட்டம் செயல்பட்டால்தானே நிதி தேவை, அறிவித்து வைப்போம் என்று அறிவித்தால் என்ன கவலை?" என்ற பதிலைத்தான் அளித்திருக்கிறார்கள். தொழில் முதலீடுகள் எவ்வளவு என்பதை அறிவிப்பதில் செய்ததைப் போன்ற பச்சை மோசடிதான் இந்த 110வது விதியின் கீழ் செய்கின்ற அறிவிப்புகளிலும் உள்ளது.

இவ்வளவிற்கும் இடையேதான் அ.தி.மு.க. ஆட்சி நடைபெறுவதாகச் சொல்லப்படுகிறது. காவல்துறை மானியத்தின் மீது பதிலளித்த முதலமைச்சர் ஜெயலலிதா தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு உச்சாணிக் கொம்பிலே இருப்பதாகக் கூறிக் கொண்டார்.

ஆனால் கடந்த பத்து நாட்களில் சட்டம் ஒழுங்கு என்ன நிலை? 20-9-2015 அன்று கூடுவாஞ்சேரியில் பட்டப் பகலில் பிரபல ரவுடி வெட்டிக் கொலை - 21-9-2015 அன்று துரைப்பாக்கத்தில் கூலித் தொழிலாளி சீனிவாசன் கொலை - தியாகராயநகரில் பெண்ணிடம் நகை பறிப்பு - அம்பத்தூர் அருகே நான்கு இலட்சம் திருட்டு - மணலியில் இருந்து சென்னை வந்த பேருந்தில் பெண்ணிடம் நகை பறிப்பு - அண்ணா நகர் திருமண மண்டபத்தில் ஒன்றரை லட்சம் மொய்ப்பணம் திருட்டு - திண்டுக்கல் கோர்ட்டு அருகே ரவுடி வெட்டிக் கொலை - உளுந்தூர்பேட்டை அருகே 100 பவுன் நகைகள் கொள்ளை - திருச்செந்தூர் அருகே தேங்காய் வியாபாரி ராஜலிங்கம் கொலை

22-9-2015 அன்று நெல்லையில் பா.ஜ.க. பிரமுகர் படுகொலை - மறைமலைநகரில் வணிகர் சங்க பேரமைப்பு நிர்வாகி விஜய்கணேசன் வெட்டிக் கொலை - 23-9-2015 அன்று சென்னை ராயப்பேட்டையில் ரவுடி முரளி குத்திக் கொலை - திருப்பெரும்புதூர் அருகே கொள்ளையர்கள் 2 பேர் அடித்துக் கொலை - 24-9-2015 அன்று எண்ணூரில் அம்மன் கோவிலில் உண்டியல் உடைத்துக் கொள்ளை - மேற்கு மாம்பலத்தில் பெண் பேபி அம்மாள் படுகொலை, நகை கொள்ளை - சிட்லபாக்கத்தில் பெண் கவுன்சிலரிடம் நகை பறிப்பு - 25-9-2015 அன்று வத்தலகுண்டு நிதி நிறுவனத்தில் பட்டப் பகலில் ஆறு கோடி ரூபாய் நகை, 17 லட்சம் ரூபாய் கொள்ளை - சோழவரத்தில் மனைவி சரளா அடித்துக் கொலை - ரெயில்வே பெண் ஊழியரிடம் கத்தி முனையில் கொள்ளை - 26-9-2015 அன்று வண்டலூர் அருகே ரியல் எஸ்டேட் அதிபர் பாபு கொலை

குன்றத்தூரில் ஆசிரியை வீட்டில் 5 லட்சம் ரூபாய் நகை, பணம் கொள்ளை - திருவள்ளூர் அருகே பகுஜன் சமாஜ் கட்சி செயலாளர் பிரபாகரன் வெட்டிக் கொலை - 27-9-2015 அன்று தண்டையார் பேட்டையில் பெண்ணின் கை, காலை கட்டிப் போட்டு நகை கொள்ளை - தாம்பரம் அருகே சப் இன்ஸ்பெக் டர் வீட்டில் 30 பவுன் நகை கொள்ளை - மாடம்பாக்கத் தில் இஞ்சினியர் வீட்டில் 30 சவரன் நகை திருட்டு - வடசென்னை ஆர்.கே. நகரில் நள்ளிரவில் வீடு புகுந்து பெண்ணிடம் செயின் பறிப்பு - 28-9-2015 அன்று ஐ.டி. பெண் ஊழியர் அடித்துக் கொலை - தண்டையார் பேட்டையில் 3 வீடுகளில் பூட்டை உடைத்துக் கொள்ளை என்ற பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

இவற்றையெல்லாம் பார்க்கும் போது, தமிழகத் திலே ஒரு பொய்யான - போலியான - பொதுமக்களுக்கு எந்தவிதத்திலும் பயனில்லாத ஆட்சிதான் நடைபெற்று வருகிறது என அனைத்துப் பிரிவினரும் எண்ணுகிறார்கள். அமைச்சர்கள் எல்லாம் எந்தவிதமான அச்சமும் இன்றி இருக்கின்ற கொஞ்ச நாட்களில் எப்படி யெல்லாம் குவிக்கலாம் நிதியை என்பதிலேயே நாட்டம் செலுத்து கிறார்கள்.

அதிகாரிகளில் சிலரோ யார் போனால் என்ன, யார் வந்தால் என்ன என்ற பாணியிலே நடந்து கொள்கிறார்கள். சில எதிர்க்கட்சிகளோ, அடுத்து அவர்கள்தான் ஆட்சிக் கட்டிலிலே அமரப்போவதாகவும், அவர்களில் ஒருவர்தான் முதல் அமைச்சர் என்ற கற்பனையோடு காரியமாற்றி வருகிறார்கள். ஆளுங்கட்சியின் தலைமையோ எதிர்க்கட்சிகளிடம் ஒற்றுமை இல்லை; யாரும், யாருடனும் சேர்ந்து விடாமல் பார்த்துக் கொண்டாலே போதும்; என்று இந்த நிலையில் தாங்கள் குவித்து வைத்துள்ள நிதியிலிருந்து ஒரு பகுதியை எடுத்து விட்டாலே போதும்; பண பலமும், பத்திரிகை பலமும் தங்களுக்கு மட்டும்தானே என்று நினைக்கிறார்கள்.

இந்தத் திருகுதாள வேலைகளையெல்லாம் புரிந்து கொண்டு தங்களுக்காக உண்மையாக உழைப்பவர்கள் யார், எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தால் நாட்டிற்கு நல்லது நடக்கும் என்பதைக் கூர்ந்து கவனித்து, கணித்து, அதற்கேற்பச் செயல்பட முன்வர வேண்டுமென்பதுதான் மிகப் பெருவாரியான தமிழர்களின் விருப்பம். அந்த விருப்பத்தைச் சிதறாமல் நிறைவேற்றிட தமிழ்நாட்டு மக்களே முன்வாருங்கள், முன்வாருங்கள் என்று அன்போடு அழைக்கின்றேன்!

இவ்வாறு கருணாநிதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+