என்னை திட்டிய அமைச்சரை விளாசிய ஸ்டாலின்..'அதை' சொல்லாததால் திமுகவில் இருந்து விலகல்: குஷ்பு விளக்கம்
சென்னை: திமுகவில் தாம் இருந்த போது பொதுக்கூட்டத்தில் ஜெய்ஹிந்த் என முழக்கமிட்டதற்காக அமைச்சர் ஒருவர் விமர்சித்ததாகவும் அதற்காக முதல்வர் ஸ்டாலின் கடுமையாக அந்த அமைச்சரை கடிந்து கொண்டதாகவும் தற்போது பாஜகவில் இருக்கும் நடிகை குஷ்பு விளக்கம் அளித்துள்ளார். மேலும் திமுகவில் இருந்த போது, முதல்வர் ஸ்டாலினுக்கும் தமக்கும் எந்த விதமான நேரடியான கருத்து வேறுபாடுகளும் ஏற்பட்டது இல்லை எனறும் கூறியுள்ளார் குஷ்பு.
புதிய தலைமுறை டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில் நடிகை குஷ்பு கூறியதாவது: திமுகவின் அடுத்த தலைவர் ஸ்டாலின்தானா என்பதை திமுக பொதுக்குழுதான் முடிவு செய்யும் என கருணாநிதி கூறினார். என்னுடைய தலைவரான கருணாநிதி சொன்னதையே நானும் சொன்னேன். இது சிலருக்குப் பிடிக்கவில்லை. திமுகவின் அடுத்த தலைவர் ஸ்டாலின் என நான் சொல்ல வேண்டும் என சிலர் விரும்பினர். அப்படி எல்லாம் நான் பேச முடியாது.

அதனால்தான் என் வீடு மீது கல்வீசித் தாக்கினர்; என் குழந்தைகளுக்கும் என்ன ஆனது என்பதும் தெரியும். இந்த சம்பவத்துக்குப் பின்னரும் நீண்டகாலம் திமுகவில்தான் இருந்தேன். இதன் பின்னரே திமுகவை விட்டு வெளியேறினேன்.
அதேநேரத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கும் எனக்கும் நேரடியாக எந்த கருத்து வேறுபாடும் இல்லை. நான் முதல் முறையாக திமுக பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசி முடிக்கும் போது ஜெய்ஹிந்த் என முழக்கமிட்டேன். இதற்கு ஒரு அமைச்சர், நன்றி வணக்கம் என சொல்லாமல் ஜெய்ஹிந்த் என முழக்கமிட்டா பேசுவாங்க? மேடையில் எப்படி பேசுறதுன்னு கூட தெரியாதா? என்றார். அப்போது குறுக்கிட்ட ஸ்டாலின், அவங்களுக்கு முதல் மேடை.. பேப்பர் கூட இல்லாமல் முக்கால் மணிநேரம் பிரமாதமாக பேசியிருக்காங்க.. அதை பாராட்டுங்க என்றார்.
பொது இடங்களில் முதல்வர் ஸ்டாலின் என்னிடம் அன்பாகவும் மரியாதையாகவும்தான் பேசுவார். அவருடன் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. திமுகவில் மற்றவர்களுடன் இணைந்து பயணிக்க முடியாத ஒரு சூழ்நிலை இருந்தது. அதை கருணாநிதியும் புரிந்து கொண்டார். அதனால் திமுகவை விட்டு லகினேன். இவ்வாறு நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications