எஸ்கேப் ரூட்.. கொடைக்கானல் மூணாறு பாதை தெரியுமா? வீணாக 160 கிலோ மீட்டர் சுற்றி செல்லும் மக்கள்
கொடைக்கானல்: மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் இருந்து மூணாறு செல்ல ஆங்கிலேயர் காலத்தில் இருந்து பயன்படுத்தப்பட்ட எஸ்கேப் சாலையை கேரள அரசு மூடிவிட்டது. வெறும் 11 கிலோமீட்டர் தூரம் பராமரிக்காமல் விட்ட சாலையை சரி செய்தால், 160 கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்படாது. அதற்கு கேரள அரசு மனது வைக்க வேண்டும்.
கொடைக்கானல் நகரில் ஏராளமான ஆங்கிலேயர்கள் சுதந்திரத்திற்கு முன்பு வசித்து வந்தார்கள்.இவர்கள் கடந்த 1944-ல், இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் சென்னை மீது ஜப்பான் அணுகுண்டு வீசப்போவதாக எழுந்த வதந்தியை அடுத்து, அன்றைக்குச் சென்னையில் இருந்த ஆங்கிலேய அதிகாரிகள், உடனடியாகத் தங்கள் நாட்டுக்கு தப்பி ஓடுவதற்கு ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்தார்கள். அப்படி உருவான பாதை தான் எஸ்கேப் பாதை.

கொடைக்கானல் வழியாக பூம்பாறை, மன்னவனூர், பூண்டி வழியாக கிளாவரை சென்று, அங்கிருந்து 11 கிலோமீட்டர் குதிரையில் பயணித்து, டாப் ஸ்டேஷன் செல்ல வேண்டும். அங்கிருந்து எல்லப்பட்டி, மாட்டுப்பட்டி, குண்டல, கிராம்ஸ்லேண்ட் வழியாக மூணாறை அடைந்து, அங்கிருந்து அடிமாலி, கோதமங்கலம் வழியாக கொச்சிக்கு சென்று, கப்பல் மார்க்கமாக இங்கிலாந்துக்குச் செல்வது அவர்களின் திட்டமாக இருந்தது.
இறுதியில் அந்த வழியாக கொச்சிக்குச் சென்று இங்கிலாந்துக்குத் பிரிட்டிஷ் அதிகாரிகள் பலர் தப்பி ஓடினார்கள். அவர்கள் சென்ற அந்தப் பாதைக்கு பெயர், தப்பி ஓடிய பாதை' என்பதால் எஸ்கேப் ரோடு' என்று ஆனது.
இந்தப் பாதையில் தான் வட்ட வடை, கோவிலூர், கொட்டக்கம்பூர் உள்ளிட்ட 28 மலைக் கிராமங்களில் வாழ்ந்த தமிழ் விவசாயிகள், தங்கள் விளைபொருள்களை குதிரை மற்றும் கழுதைகளில் ஏற்றிக்கொண்டு, கொடைக்கானலுக்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள். அந்த காலத்தில் கரடுமுரடாக இருந்த அந்தப் பாதையைப் பயன்படுத்தித்தான் ஆங்கிலேயர்கள் இங்கிலாந்துக்குத் தப்பி ஓடியிருக்கிறார்கள்.
நாடு விடுதலை அடைந்த பிறகும்கூட அந்தப் பாதை பயன்பாட்டிலேயே இருந்துவந்திருக்கிறது. ஆனால் 1956 மொழிவழிப் பிரிவினை துரதிஷ்டவசமாக வட்டவடை, கோவிலூர் கேரளாவுடன் இணைந்தது. அதாவது தேவிகுளம் தலுகா அப்படியே கேரளாவுடன் இணைந்தது. இதன் பின்னர் கேரளாவின் கட்டுப்பாட்டில் எஸ்கேப் பாதை வந்தது. அதாவது பசுமை பள்ளத்தாக்கு வழியாக கேரள சோதனை சாவடியை கடந்து சென்றால் 11 கிலோ மீட்டர் தூரத்தில் தேனி மாவட்டத்தின் டாப் ஸ்டேசன் உள்ளது. இங்கிருந்தும் கேரளா எளிதாக செல்ல முடியும். 1990கள் வரை அனுமதி இருந்தது. இடையில் ஏற்பட்ட சில பிரச்சனைகள் காரணமாக இந்த சாலையை கேரள வனத்துறை மூடியது. கடத்தல் சாலையாக இருந்ததாக கூறி அதனை நிரந்தரமாக மூடிவிட்டது. இந்த பாதை தற்போது அடர்ந்த வனப்பகுதியாக உள்ளது. வனவிலங்குகள் வாழும் பகுதியாக உள்ளது.

தற்போது கொடைக்கானலில் இருந்து பூண்டி கிளாவரை வந்து அங்கிருந்து சில கிலோமீட்டர் தூரம் கரடு முரடான பாதையை கடந்து சென்றால் வட்டவடை கோவிலூர் வந்துவிடும். அங்கிருந்து சாலை வழியாக எளிதாக மூணாறு செல்ல முடியும். இந்த பாதையில் ஜீப்களில் கூட போக முடியும். இந்த பாதையை சரி செய்தால் பேருந்து போக்குவரத்தையும் இயக்க முடியும். ஆனால் சாலை இன்று வரை சரி செய்யப்படவில்லை.
இது ஒருபுறம் எனில் மூணாறு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்தவர்களின் நலனை கருத்தில் கொண்டும், சுற்றுலா பயணிகளின் வசதிக்காகவும் கேரள மாநில போக்குவரத்து கழகம் சார்பில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கொடைக்கானலில் இருந்து மூணாறுக்கு பஸ் இயக்கப்பட்டது.
ஆனால் அந்த பஸ் போக்குவரத்து திடீரென நிறுத்தப்பட்டது. இதற்கான காரணம் புரியாத புதிராகவே இருந்து வருகிறது. இதன் காரணமாக நடுத்தர மற்றும் ஏழை சுற்றுலா பயணிகளின் வருகை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது மூணாறு செல்வதற்கு, கொடைக்கானலில் இருந்து தேனி வந்து அங்கிருந்து போடி மெட்டு சென்று அதன் பின்னரே மூணாறு செல்ல வேண்டிய நிலை உள்ளது. கிட்டத்தட்ட 160 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது.
அதேநேரம் பூண்டி கிளாவரை வட்டவடை கோவிலூர் பாதையை திறக்க கேரள அரசும் தமிழக அரசும் மனது வைத்தால் இந்த பகுதி மிகப்பெரிய அளவில் வளர்ச்சி பெறும். கொடைக்கானல் மூணாறு இடையே கிளாவரை முதல் சில கிலோ மீட்டர் தூரம் மோசமான நிலையில் உள்ள பாதையை சரி செய்து பேருந்து போக்குவரத்துக்கு ஏற்ற வகையில மாற்றினால் சுற்றுலா பெரிய அளவில் வளர்ச்சி பெறும்.
தமிழக அரசும் கேரள அரசும் இந்த பிரச்சனைக்கு தீர்வு கண்டால் இருமாநிலங்களிலும் உள்ள மூணாறு, கொடைக்கானல் பெரிய வளர்ச்சி பெறும். அத்துடன் கொடைக்கால் மூணாறு இடையில் உள்ள 28 கிராமங்கள் பயன்பெறும். விவசாயிகள், பொதுமக்கள் பல வருடங்களாக போராடியும் கடவேரி வட்டவடை பாதையை திறக்க கேரள வனத்துறை இதுவரை ஏனோ முன்வரவில்லை என்று அந்த பகுதி மக்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications