கொடநாடு எஸ்டேட்டில் அஸ்ஸாம் மாநில தொழிலாளி பலி
கோவை: கொடநாடு எஸ்டேட்டில் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொழிலாளியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே உள்ளது கொடநாடு எஸ்டேட். இந்த எஸ்டேட்டில் 200க்கும் அதிகமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
30க்கும் மேற்பட்ட அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் இங்கு பணிபுரிகின்றனர். இந்நிலையில், அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த பாகு (35) என்ற தொழிலாளி பின்னங்கழுத்தில் பலத்த காயத்துடன் ஊட்டி அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி பாகு உயிரிழந்தார். தேயிலை தோட்டத்தில், தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, பாகு தவறி விழுந்து இறந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், பாகுவுக்கு பின்னங்கழுத்தில் அடிபட்டிருப்பதால் அவர் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக கூறப்பட்டது. இந்த தகவல் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், இதனை பாகுவின் மனைவி சன்னியா மறுத்துள்ளார்.
தேயிலை தோட்டத்தில் வேலை பார்க்கும்போது, தனது கணவர் தவறி விழுந்து இறந்ததாகவும், வேறு காரணம் ஏதும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். இது தொடர்பாக கோத்தகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications