கொலைகாரினு சொன்னப்ப கூட வீடியோவை சசிகலா வெளியிடவில்லையே... கிருஷ்ணப்பிரியா ஆதங்கம்
சசிகலாவை கொலைகாரி என்று சொன்னபோதுகூட அவர் ஜெயலலிதாவின் சிகிச்சை வீடியோக்களை வெளியிடவில்லை என்று கிருஷ்ணப்பிரியா தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: ஜெயலலிதாவை சசிகலா கொலை செய்துவிட்டதாக புகார் எழுந்த போது கூட அவர் சிகிச்சை பெறும் வீடியோவை சசிகலா வெளியிடவில்லையே. ஆனால் இப்போது வெளியிட்டு ஜெயலலிதாவின் சுயமரியாதையை இழக்க வைத்துவிட்டார் வெற்றிவேல் என்று இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியா தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா கடந்த ஆண்டு அப்பல்லோவில் சிகிச்சை பெற்றபோது எடுத்ததாக கூறி ஒரு வீடியோவை இன்று தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்டார். இதனால் தமிழகத்தில் பரபரப்பான சூழல் நிலவியுள்ளது.
நாளை ஆர்கே நகர் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இதுபோன்ற வீடியோ வெளியிட்டமைக்கு வெற்றிவேல் மீது தேர்தல் நடத்தும் அதிகாரி பிரவீன் நாயர் புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஜெயலலிதா வீடியோ
வெற்றிவேலின் செயல் கீழ்த்தரமானது என்று கிருஷ்ணப்பிரியா தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ள நிலையில் இதுகுறித்து தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் கிருஷ்ணப்பிரியா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், சசிகலாவின் அனுமதியில்லாமல் இதுபோல் பொதுவெளியில் ஜெயலலிதாவின் வீடியோவை வெளியிட்ட வெற்றிவேலுக்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன்.

வெற்றிவேலிடம் சென்றது எப்படி
33 ஆண்டுகள் ஜெயலலிதாவுடன் இருந்த சசிகலா அவரது அனைத்து சுக துக்கங்களிலும் பங்கெடுத்தவர். இந்த வீடியோவை நாங்கள்தான் டிடிவி தினகரனுக்கு கொடுத்தோம். அது எப்படி வெற்றிவேலிடம் சென்றது என்பது தெரியவில்லை.

வீடியோவை எடுத்தது சசிகலா
விசாரணை கமிஷனில் ஒப்படைப்பதற்காகத்தான் சசிகலா இந்த வீடியோவை தினகரனிடம் அளித்தார். இந்த வீடியோவை எடுத்தது சசிகலா, எடுக்கச் சொன்னது ஜெயலலிதா. அவரால் திரும்பி பார்க்க முடியாததால் தனக்கு பின்னால் உள்ள மருத்துவ கருவிகளை பார்க்க வேண்டும் என்று ஜெயலலிதா விரும்பியதால் சசிகலா இந்த வீடியோவை எடுத்தார்.

சசிகலா மறுத்தார்
ஆனால் சசிகலாவின் அனுமதியில்லாமல் வெற்றிவேல் வீடியோவை வெளியிட்டு ஜெயலலிதாவின் சுயமரியாதையை இழக்க செய்துவிட்டார். சசிகலா மீது கொலை பழி போடப்பட்ட போது கூட இந்த வீடியோவை வெளியிட்டால் ஜெயலலிதாவின் சுயமரியாதை இழக்க தான் காரணமாக இருக்கக் கூடாது என்பதால் சசிகலா அதை வெளியிட மறுத்துவிட்டார்.

சமூக வலைதளங்களில்...
தன்னை கொலைக்காரி என்றுதானே சொல்வார்கள். சொல்லிக் கொள்ளட்டும் என்றார். இப்படிப்பட்டவருக்கு வெற்றிவேல் நம்பிக்கை துரோகம் இழைத்துவிட்டார். சசிகலாவே இந்த வீடியோவை வெளியிட செய்து தினகரனை ஜெயிக்க வைக்க புது யுத்தியை கையாண்டதாக சமூக வலை தளங்களில் பதிவு செய்கின்றனர்.

மக்களே யோசியுங்கள்
ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலாவிடம் வீடியோ வெளியிட்டு உங்கள் பழியை கழித்து கொள்ளுங்கள் என்று எத்தனையோ பேர் கேட்டும் அவர் வெளியிடவில்லை. அப்படியிருக்கும் போது தேர்தல் வெற்றிக்காக சசிகலா இப்படி செய்வாரா என்பதை நீங்களும் (செய்தியாளர்களும்), மக்களும் யோசியுங்கள்.

மிகவும் கவலையாக உள்ளது
இந்த வீடியோ வெளியிட்டது குறித்து தினகரன் இதுவரை எந்த விளக்கமும் அளிக்காதது ஏன் என்று தெரியவில்லை. இதை நான் அவரிடம் கேட்பேன். அதுபோல் வெற்றிவேல் மீதும் நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த வீடியோ வெளியானதை அறிந்த சசிகலாவின் மனநிலை எப்படி இருக்குமோ என்ற கவலை எங்களுக்கு உள்ளது. அவரை 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே காணமுடியும். இன்னும் 12 நாட்கள் கழித்துதான் அவரை பார்க்கமுடியும். எங்களுக்கு மிகவும் கவலையாக உள்ளது என்றார்












Click it and Unblock the Notifications