ஆளுநரின் அதிகாரம்.. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு தொடக்கமே.. நீட் வழக்கிலும் தொடரும்.. ஸ்டாலின் கடிதம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆளுநரின் அதிகாரம் என்ன என்பதை தெளிவாக்கிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஒரு தொடக்கம் தான் என்றும், நீட் தேர்வு தொடர்பான வழக்கிலும் இது தொடரும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்தில் பாஜகவினர் பங்கேற்கவில்லை என்றதும், பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவும் கூட்டத்தை புறக்கணித்து தங்களின் எஜமான விஸ்வாசத்தை காட்டியுள்ளதாகவும் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், மாநிலத்தில் சுயாட்சி - மத்தியில் கூட்டாட்சி.. நம் உயிருடன் கலந்திருக்கும் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் வெற்றி மடல். சட்டப் போராட்டத்தின் வழியே திராவிட முன்னேற்றக் கழகமும் அதன் தலைமையிலான அரசும் பெற்றுத் தருகின்ற தீர்ப்புகள் தமிழ்நாட்டின் நலனுக்கு மட்டுமல்ல, இந்தியாவின் ஒட்டுமொத்த ஜனநாயகத்திற்கும் வெளிச்சம் பாய்ச்சக் கூடியவையாக இருக்கும் என்பதுதான் வரலாறு.

Like Tamilnadu Governor Case Supreme court Verdict in the NEET Exam case will favour us says Chief Minister MK Stalin

ரெட் லெட்டர் டே

ஆளுநரின் அதிகார அத்துமீறல்களை ரத்து செய்து, மாநில உரிமைகளைக் காத்திடும் மகத்தான தீர்ப்பினை, திராவிட மாடல் அரசு முன்னெடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கி இருப்பது வரலாற்றின் பக்கங்களில் பொன்னெழுத்துகளில் பொறிக்கப்படக்கூடிய Red Letter Day ஆகும். இந்திய நாடாளுமன்றம் என்பது அனைத்து மாநிலங்களின் தொகுப்புணர்வு என்பதை 1962-ஆம் ஆண்டு மாநிலங்களவையில் தன்னுடைய முதல் பேச்சிலேயே உணர வைத்தவர் அண்ணா.

அண்ணாவும், கருணாநிதியும்

அவருடைய குரலுக்குப் பிறகுதான், மாநில உரிமைகள் சார்ந்த குரல்களின் எண்ணிக்கை உயர்ந்தது. இந்திய அரசியல் சட்டத்தின் நெறிமுறைகளின்படி மாநிலங்கள் தனக்கான சட்டங்களை இயற்றி, தற்சார்பாகச் செயல்படும் அதிகாரம் கொண்டவை என்பதை எடுத்துக்காட்டும் வகையில் 1974-ஆம் ஆண்டு மாநில சுயாட்சித் தீர்மானத்தை தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றினார் கருணாநிதி. அண்ணாவும் கருணாநிதியும் காத்த மாநில உரிமைகளுக்கு ஆபத்து நேரும்போது, திமுகவின் தலைவர் என்ற பொறுப்பிலும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற பொறுப்பிலும் உள்ள நான், மாநில உரிமை காக்கும் சட்டப்போரில் சளைக்காமல் முதன்மையாக நிற்பேன்.

இந்தி திணிப்பு

மும்மொழித் திட்டத்தை தேசிய கல்விக் கொள்கையின் வழியே பாஜக அரசு திணிக்க முயற்சிப்பதை எதிர்த்து நின்று, இருமொழிக் கொள்கையைக் கடைப்பிடிக்கும் தமிழ்நாட்டில் இந்தி ஆதிக்கத்திற்கு இடமில்லை என்பதில் உறுதியாக நின்று மாநில அரசின் நிதியிலிருந்தே கல்விச் செலவுகளை எதிர்கொள்ளும் வலிமை எங்களுக்கு உண்டு என்பதை உரக்கச் சொல்லியிருக்கிறோம்.

தொகுதி மறுசீரமைப்பு

தொகுதி மறுசீரமைப்பில் நாடாளுமன்றத் தொகுதிகளைக் குறைப்பதற்கு மத்திய பாஜக அரசு திட்டமிடுகிறது என்றதுமே, தமிழ்நாட்டைப் போல பாதிப்புக்குள்ளாகும் மாநிலங்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து, நாடாளுமன்ற மக்களவையில் தற்போதுள்ள வகையிலேயே மாநிலங்களுக்கான விகித்தாசாரம் தொடர வேண்டும் என்பதையும், மறுசீரமைப்புத் திட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும் என்றும் முதல் குரல் கொடுத்திருப்பதும், மாநில உரிமைகளைப் பாதுகாப்பதற்கு முன் கை எடுத்திருப்பதும் திமுக அரசுதான்.

உச்சநீதிமன்ற தீர்ப்பு

உரிமைக்கான குரலாகத் தொடங்கப்பட்டதுதான் திராவிட இயக்கம். நீதிக்கட்சியில் தொடங்கி அதன் நீட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் வரை உரிமைப் போராட்டம் ஓயவில்லை. போராட்டம் ஒரு புறம், ஆட்சி நிர்வாகம் மறுபுறம் என திராவிட முன்னேற்றக் கழகத்தின் பணியும் பயணமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. வளர்ச்சியை அடைவதற்கும் தொடர்வதற்கும்தான் மாநில உரிமைகளுக்கான நமது போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதில் ஒரு மைல்கல்லாக ஏப்ரல் 8-ஆம் நாள் வெளியான மகத்தான தீர்ப்பு அமைந்துள்ளது.

சட்டசபை மசோதாக்கள்

பள்ளிக்கல்வியிலும் உயர்கல்வியிலும் சிறந்த மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்ந்து வரும் நிலையில், இந்தியாவில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் தமிழ்நாட்டின் பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் முதன்மை இடங்களைப் பிடித்துள்ளதை அனைவரும் அறிவோம். இந்தப் பெருமையைச் சிதைக்கும் வகையில், பல்கலைக்கழக வேந்தர் என்ற அதிகாரத்தைக் கொண்டிருந்த மாண்புமிகு ஆளுநர், உயர்கல்வியில் அறமற்ற அரசியலைப் புகுத்தி, காவிச் சாயம் பூசிக்கொண்டிருப்பதற்கு எதிராகத் தமிழ்நாடு சட்டமன்றத்தில் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

முதலமைச்சரே வேந்தர்

அவற்றுக்கு ஒப்புதல் தராமல், ஜனநாயக மாண்புகளைச் சிதைக்கும் அதிகார அத்துமீறல்களைத் தொடர்ந்து கொண்டிருந்ததை எதிர்த்து தமிழ்நாடு அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆளுநர்களின் அதிகார அத்துமீறலுக்கு எதிரான வழக்குகள் என்பவை உச்சநீதிமன்றத்திற்குப் புதியதன்று. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதலமைச்சரே செயல்படுவார் என்றும், பல்வேறு பல்கலைக்கழகங்களின் நிர்வாக செயல்பாடுகள் தொடர்பாகவும் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவுகளை ஆளுநர் கிடப்பிலேயே போட்டிருந்ததையும், தன் அதிகாரத்திற்கு மீறிக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியிருந்ததையும் எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் வாதங்கள் நிறைவடைந்து தீர்ப்பு தேதி தள்ளி வைக்கப்பட்டிருந்தது.

மகிழ்ச்சியான செய்தி

ஏப்ரல் 8 அன்று காலையில் சட்டமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்கச் சென்ற நிலையில், தீர்ப்பு வெளியாக இருப்பதாகத் தகவல் கிடைத்தது. தமிழ்நாடு ஆளுநரின் செயல்பாடு சட்டவிரோதமானது என்பதையும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தனது சட்டமன்றத்தில் நிறைவேற்றுகின்ற தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்க வேண்டியது நியமனப் பதவியில் உள்ள ஆளுநரின் வேலை என்பதையும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் திரு.பர்திவாலா, திரு.மகாதேவன் அமர்வின் தீர்ப்பு தெளிவாகத் தெரிவித்தது. இந்தச் செய்தி, சட்டமன்றக் கூட்டத்தொடரில் இருந்த உங்களில் ஒருவனான எனக்குக் கிடைத்தவுடன், உடனடியாக அவையில் இருந்து வெளியே வந்து, இந்த மகிழ்ச்சிகரமான வெற்றிக் தீர்ப்பு குறித்த அறிவிப்பை எழுதி, அவைக்குச் சென்று அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் வாசித்தேன்.

சட்டமன்றம்

எந்தச் சட்டமன்றத்தில், தமிழ்நாடு என்று இந்த மாநிலத்திற்குப் பெயர் சூட்டி மாநில உரிமைகளின் குரலைப் பேரறிஞர் அண்ணா உரக்க முழங்கினாரோ, எந்தச் சட்டமன்றத்தில் மாநில சுயாட்சித் தீர்மானத்தை கருணாநிதி நிறைவேற்றினாரோ அந்த சட்டமன்றம்தான் வலிமையானது, ராஜ்பவனுக்கு அதிகாரமில்லை என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பைப் பாராட்டி அறிவிப்பை வெளியிட்டேன். முதலமைச்சரான என் அறிவிப்பைத் தொடர்ந்து சட்டமன்றத்தில் உள்ள தோழமைக் கட்சிகளின் உறுப்பினர்கள், மற்ற கட்சிகளின் உறுப்பினர்கள் இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பினை ஆதரித்துப் பேசினார்கள்.

வழக்கறிஞர்களுக்கு நன்றி

இந்த வழக்குத் தொடரப்பட்டதிலிருந்தே வழக்கறிஞர்களுடன் தொடர்ந்து ஆலோசித்து, மாநில உரிமைகளை நிலைநாட்ட எடுத்து வைக்க வேண்டிய வாதங்கள், ஆதாரங்கள் குறித்து கலந்துரையாடி வந்தேன். கழகம் எப்போதும் சொல்லி வருவது போல, ஆளுநர் பதவி என்பது மத்திய - மாநில அரசுக்கிடையிலான தபால்காரர் பணிதான் என்பதை உச்சநீதிமன்றம் தெளிவாகத் தீர்ப்புரைத்திருக்கிறது. தீர்ப்பு வெளியான நாளில், கூட்டத்தொடர் நிறைவடைந்ததும், உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கில் தமிழ்நாடு அரசின் சார்பில் வாதாடி, வெற்றித் தீர்ப்பு கிடைத்திட காரணமாக இருந்த முகுல் ரோஹத்கி, ராகேஷ் திரிவேதி, அபிஷேக் மனு சிங்வி ஆகிய மூத்த வழக்கறிஞர்களைத் தொடர்பு கொண்டு நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்தேன்.

பாராட்டுகள்

மாநில உரிமைக்கான திராவிட முன்னேற்றக் கழக அரசின் தொடர் சட்டப் போராட்டத்தில் இந்தத் தீர்ப்பு முக்கியமான வெற்றி என்பதால், தங்கள் மாநிலங்களில் ஆளுநரின் அத்துமீறல்களால் ஜனநாயகத்தைக் காக்கப் போராடுகிற அரசுகளும் தமிழ்நாட்டின் திராவிட மாடல் அரசு பெற்றுத் தந்துள்ள தீர்ப்பினை முன்மாதிரியாக வைத்து தங்களின் வழக்குகளை முன்னெடுத்துச் செல்லும் நிலை உருவாகியுள்ளது. கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பினைப் பாராட்டி கருத்து வெளியிட்டார்.

அனைத்து கட்சி கூட்டம்

தமிழ்நாட்டின் பல்கலைக்கழகங்களில் ஆளுநரின் அத்துமீறல்களைத் தகர்த்தெறிந்த வெற்றித் தீர்ப்பு வெளியான வேகத்தில், தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பை சிதைக்கும் நீட் தேர்வுக்கு எதிரான நமது சட்டப்போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கான அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் ஏப்ரல் 9-ஆம் நாள் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. சமூகநீதியிலும் மாணவர்களின் நலனிலும் அக்கறை கொண்ட கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் இதில் பங்கேற்று கருத்துகளைத் தெரிவித்தனர்.

அதிமுகவின் எஜமான விஸ்வாசம்

சமூகநீதிக்கும் - மாணவர்களுக்கும் - மக்களுக்கும் எதிரான பா.ஜ.க.வினர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்றதும், அவர்களின் வழியில் முதன்மை எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வினரும் புறக்கணித்து தங்கள் எஜமான விசுவாசத்தை வெளிப்படுத்தினர். மாநில உரிமை காக்கும் போராட்டத்தின் முன்னோடியான தி.மு.கழகம், நீட் தேர்விலும் விலக்கு பெறும் வகையில் தமிழ்நாட்டின் தனித்தன்மையை சட்டப் போராட்டத்தின் வழியே முன்னெடுக்கத் தீர்மானித்து, ஆதரவு சக்திகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுகிறது.

நீட் தேர்விலும் தொடரும்

ஆளுநரின் அதிகாரம் என்ன என்பதை தெளிவாக்கிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஒரு தொடக்கம். நீட் தேர்வு தொடர்பான வழக்கிலும் இது தொடரும். மாநிலத்தில் சுயாட்சி - மத்தியில் கூட்டாட்சி என்று நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் மொழிந்த முழக்கத்தை முன்வைத்து நீதியின் வாயிலாக இந்தியாவின் ஜனநாயகத்தையும் கூட்டாட்சித் தன்மையையும் காத்திடும் பேரியக்கமாக தி.மு.க தன் போராட்டத்தைத் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+