மோடி ரோடு ஷோ ப்ளாப் எதிரொலி- அமித்ஷாவின் காரைக்குடி ரோடு ஷோ திடீர் ரத்து
காரைக்குடி: பிரதமர் மோடியின் சென்னை ரோடு ஷோ ப்ளாப் ஆனதால் காரைக்குடியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை நடத்த ரோடு ஷோ பிரசாரம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் வாக்குப் பதிவுக்கு இன்னும் 8 நாட்களே இருக்கின்றன. தமிழ்நாட்டில் பிரதமர் மோடி தொடர் பிரசாரம் செய்து வருகிறார். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நாளை நெல்லை, கோவையில் பிரசாரம் செய்கிறார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை தமிழ்நாட்டில் பிரசாரம் செய்ய உள்ளார். மதுரைக்கு நாளை பிற்பகல் 3.05 மணிக்கு வருகை தருகிறார் அமித்ஷா. அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சிவகங்கை சென்று காரைக்குடியில் ரோடு ஷோ மூலம் பிரசாரம் செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டது. சிவகங்கை பாஜக வேட்பாளர் தேவநாதனை ஆதரித்து இந்த ரோடு ஷோ நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால் தற்போது அமித்ஷாவின் ரோடு ஷோ நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பாஜகவினர் கூறுகையில், பிரதமர் மோடியின் சென்னை ரோடு ஷோவுக்கு போதிய கூட்டம் சேரவில்லை. அதனால் திட்டமிட்டபடி 1 மணிநேரம் மோடி ரோடு ஷோ நடத்தவில்லை. 20 நிமிடங்கள் முன்கூட்டியே ரோடு ஷோவை பிரதமர் மோடி முடித்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஊடகங்களும் பிரதமர் மோடியின் ரோடு ஷோ நிகழ்ச்சிக்கு கூட்டம் சேரவில்லை என வெளிப்படையாகவே விமர்சித்தன. முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் மோடியின் சென்னை ரோடு ஷோ ப்ளாப் ஷோ எனவும் விமர்சித்து வருகின்றனர். இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டுதான் அமித்ஷாவின் காரைக்குடி ரோடு ஷோ நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டிருக்கலாம் என்கின்றனர்.
சிவகங்கை பயணத்தை முடித்து விட்டு மதுரை வரும் அமித்ஷா, ரோடு ஷோ மூலம் பிரசாரம் செய்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்வார் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது காரைக்குடி ரோடு ஷோ ரத்து போல அமித்ஷாவின் மதுரை ரோடு ஷோ திட்டமிட்டபடி நடக்குமா? அல்லது ரத்தாகுமா என்பதும் தெரியவில்லை என்கின்றன போலீஸ் வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications