சட்டசபை எதிர்கட்சித் தலைவராக ஸ்டாலின்: சபாநாயகர் தனபால் அங்கீகரிப்பு
சென்னை: திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை எதிர்க்கட்சித் தலைவராக அங்கீகரித்து தமிழக சட்டசபைத் தலைவர் தனபால் இன்று உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் நடந்து முடிந்த 15வது சட்டசபை தேர்தலில் அதிமுக 134 இடங்களையும், திமுக கூட்டணி 98 இடங்களையும் கைப்பற்றின. இதையடுத்து, ஜெயலலிதா தலைமையில் அதிமுக மீண்டும் ஆட்சியமைத்தது. அதிமுகவிற்கு அடுத்தபடியாக அதிக தொகுதிகளை கைப்பற்றிய திமுக பிரதான எதிர்கட்சி அந்தஸ்தை பெற்றது.

இதனிடையே நடைபெற்ற திமுக செயற்குழு மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், சட்டசபை குழு தலைவராக மு.க.ஸ்டாலின் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். திமுக சட்டசபை குழுவின் துணைத் தலைவராக துரைமுருகன்; கொறடாவாக சக்கரபாணி; துணை கொறடாவாக கு. பிச்சாண்டி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்நிலையில், தமிழக சட்டசபை நேற்று கூடியதும் சபாநாயகராக தனபாலும், துணை சபாநாயகராக பொள்ளாச்சி ஜெயராமனும் எந்த வித போட்டியும் இன்றி தேர்வு செய்யப்படுவதாக தற்காலிக சபாநாயகர் செம்மலை அறிவித்தார்.
சபாநாயகர் தனபாலை பேரவை இருக்கையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் நிதியமைச்சர் பன்னீர் செல்வம் இருவரும் அமர வைத்தனர். சபாநாயகர் தேர்வு செய்யப்பட்டதால் தற்காலிக சபாநாயகர் செம்மலை விடை பெற்றார்.
இதையடுத்து சபாநாயகரை வாழ்த்தி ஜெயலலிதாவும், ஸ்டாலினும் அவையில் உரையாற்றினர். இதையடுத்து சட்டசபை மீண்டும் வரும் ஜூன் 16 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், சட்டப் பேரவையில் திமுக தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மு.க.ஸ்டாலினை எதிர்க்கட்சித் தலைவராக அங்கீகரித்து பேரவைத் தலைவர் தனபால் உத்தரவிட்டுள்ளார். எதிர்க்கட்சித் தலைவராகும் மு.க.ஸ்டாலின் அமைச்சர் அந்தஸ்தில் செயல்படுவார். அவருக்கு அரசு கார், அலுவலகம், செயலாளர், டிரைவர் என சகல வசதிகளும் அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications