முதல்வர் என்று சொல்லிக்கவே அச்சப்படுகிறாரே பன்னீர்... மு.க.ஸ்டாலின்
கடலூர்: தன்னை முதல்வர் என்று சொல்லிக் கொள்ளக் கூட அச்சப்படுகிறார் ஓ.பன்னீர் செல்வம் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
கடலூர் மஞ்சக்குப்பத்தில் நேற்று மாலை திமுக பொதுக் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், கடலூர் மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் எஸ்.ஐ. படுகொலையில் இருந்து கடந்த நவம்பர் மாதம் பாஜக பிரமுகர் வெங்டேசன் கொலை சம்பவம் வரை பல கொலைகள் நடந்துள்ளன. கடலூர் மாவட்டம் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் இதே நிலைதான்.
சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. கல்வி நிலையங்களில் புகுந்து ஆசிரியர்களை மிரட்டுகிறார்கள். மாணவன் கொலை செய்யப்பட்டுள்ளான்.
ஓ.பன்னீர்செல்வம் தன்னை முதல்வர் என்று சொல்லிக்கொள்ளவே பயப்படுகிறார். தனது இல்லத்தில் கூட முதல்வர் என்று பலகை போடவில்லை. நிதித்துறை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் என்று இருக்கிறது. அங்குமட்டுமல்ல, தலைமைச் செயலகத்திலும் அவரது அறையில் முதல் அமைச்சர் என்ற பலகை இல்லை. அங்கும் நிதித்துறை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் என்று இருக்கிறது.
எங்கள் ஆட்சியில் அனைவருக்கும் அனைத்து சலுகைகளும் செய்தோம். இந்த ஆட்சியில் கொலை, கொள்ளை, வழிப்பறி, பலாத்காரம் போன்ற சம்பங்கள் தான் நிறைந்துள்ளன. இதுதான் இன்றைய தமிழகத்தின் நிலை என்றார் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications