ஆளுநரை சந்தித்தார் மு.க.ஸ்டாலின்.. மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிக்கை!
சென்னை: திமுக செயல் தலைவரும் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று மாலை தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து பேசினார். அப்போது சட்டசபையில் மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜெயலலிதா மறைந்த பிறகு, முதல்வராக பொறுப்பேற்ற பன்னீர் செல்வத்தை சசிகலா தனது பதவி வெறியால் ராஜினாமா செய்ய வைத்தார். இதைத் தொடர்ந்து சசிகலாவின் தலைமையை பிடிக்காமல் 11 எம்எல்ஏ-க்கள் ஓபிஎஸ் பக்கம் வந்தனர். மீதமுள்ள 122 எம்எல்ஏ-க்களை ஓபிஎஸ் அணியோ அல்லது எதிர்க்கட்சியோ விலைக்கு வாங்கக் கூடும் என்ற அச்சம் எழுந்தது.

இதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் அவருக்கு ஆதரவாக வாக்களிக்க அதிமுக எம்எல்ஏக்களுக்கு கோடி கணக்கில் பணம் கொடுக்கப்பட்டதாக டைம்ஸ் நவ் தொலைக்காட்சி வெளியிட்டுள்ள வீடியோவில் அம்பலமாகியுள்ளது.
அதில் கூவத்தூரில் அதிமுக எம்எல்ஏ-க்கள் பேரம் பேசியது குறித்து இடம்பெற்றிருந்தது. இது தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனிடையே தமிழகத்தில் சட்டசபை கடந்த 14-ஆம் தேதி கூடியது. கூவத்தூர் பேரம் குறித்து விவாதிக்க முக ஸ்டாலின் அனுமதி கோரினார். அதற்கு ஆதாரம் இல்லாத எந்த ஒரு விஷயத்தையும் சட்டசபையில் விவாதிக்க முடியாது என்று மறுப்பு தெரிவித்தார்.
இதனால் நேற்று சட்டசபையில் வீடியோ ஆதாரத்துடன் வருகை தந்த ஸ்டாலின், கூவத்தூர் பேரம் குறித்து விவாதிக்க கோரியும் சபாநாயகர் மறுத்துவிட்டார். இந்த பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று சென்னை வந்தார்.
இந்நிலையில் சென்னை ராஜ்பவனில் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை, எதிர்க் கட்சித் தலைவர் ஸ்டாலின் சந்தித்து பேசி வருகிறார். அப்போது கூவத்தூரில் பேரம் பேசியது தொடர்பான வீடியோ ஆதாராத்தையும் வழங்கியுள்ளார். சட்டசபையில் மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. துரைமுருகன், கே.ஆர்.ராமசாமி, அபுபக்கர் உள்ளிட்ட் எம்எல்ஏக்களும் ஸ்டாலினுடன் உடன் சென்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications