முந்தைய ஆட்சிகளின் நல்ல திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்துவோம்

ஒரு ஆட்சி போனால், அந்த ஆட்சி செய்த நல்ல காரியங்களை யெல்லாம் தொடர்ந்து செய்வது அடுத்து வருகின்ற ஆட்சிக்கு அழகு. ஏன், என்னுடைய அருமை நண்பர் எம்.ஜி.ஆர். அவர்கள் சத்துணவுத் திட்டம் ஒன்றை நடத்தினார்.
நான் ஆட்சிக்கு வந்தவுடன், இது எம்.ஜி.ஆர். தொடங்கிய திட்டம் ஆயிற்றே, அந்தத் திட்டத்தை விரிவுபடுத்துவதா, தொடர்ந்து நடத்துவதா என்று எண்ணவில்லை. அதை மேலும் வளர்க்க வேண்டும், விரிவு படுத்த வேண்டுமென்று சத்துணவுத் திட்டத்திலே முட்டையும் வழங்குவோம் என்று முட்டையும் கொடுத்து, வாரத்திற்கு ஐந்து முட்டை என்று மாணவர்களுக்குக் கொடுத்து, சத்துணவு என்றால், அது உண்மையிலேயே சத்துணவாக இருக்க வேண்டுமென்ற வகையிலே அந்தத் திட்டத்தை விரிவாக்கியது திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி.
அதைப் போல போக்குவரத்துக்கு ஒரு ஆட்சி சாலைகளை அமைத்தால், அடுத்து வருகின்ற ஆட்சி அந்தச் சாலைகளை விரிவுபடுத்தி, அகலப்படுத்தி மேலும் அதை அழகுபடுத்தும் அந்தப் பணியிலே தான் ஈடுபட வேண்டும்.
ஆனால் இந்த அம்மையாருடைய ஆட்சியில் நமக்கு முன்பிருந்த ஆட்சி என்னென்ன செய்ததோ, அவைகளை எல்லாம், அந்தத் திட்டங் களையெல்லாம் மூடுவதுதான் முதல் வேலை என்று, திட்டமிட்டு, தீர்மானித்து அதைச் செய்து கொண் டிருக்கிறார் ஜெயலலிதா என்பதை எண்ணும் போது எனக்கு மிக மிகக் கவலை.
எதற்காக இவைகளையெல்லாம் சொல்லுகிறேன் என்றால், ஒரு ஆட்சி விட்டு விட்டுப் போகின்ற பணிகளை, அடுத்து வருகின்ற ஆட்சி அந்தப் பணிகளை எல்லாம் தொடர் பணிகளாக ஆக்கி மக்களுக்கு நன்மை செய்ய வேண்டுமே அல்லாமல், மக்களுக்குச் செய்யப்பட்ட பணிகளையெல்லாம் தன்னுடைய ஆட்சிக் காலத்திலே அழித்து விட வேண்டுமென்று எண்ணினால், அவர்களைப் போன்ற தீய சக்திகள் யாரும் இருக்க முடியாது.
அந்தத் தீய சக்தியின் பட்டியலிலே தன்னை இணைத்துக் கொண்டிருக்கின்ற ஜெயலலிதா, நம்மைப் பார்த்து தீய சக்தி என்று சொல்கிறார். ஜெயலலிதா போன்ற அந்தத் தீய சக்திகள் வளரலாமா, அந்தத் தீயசக்திகளுக்கு நாம் ஆதரவு தரலாமா, ஆக்கமும், ஊக்கமும் கொடுக்க லாமா என்பதை எண்ணிப் பார்த்து நீங்கள் உங்களு டைய ஆற்றலை, அறிவை, உங்களுடைய விருப்பத்தை எதிர்காலத்திலே, தமிழன் வாழ, தமிழ்நாடு செழிக்க, திராவிடம் மலர்ந்திட, மலர்ந்த திராவிடத்தில் பகுத்தறிவு மணம் கமழ்ந்திட, இருந்திட நீங்கள் உங்களுடைய தொடர்பணிகளை ஆற்றிட வேண்டும்.
இவ்வாறு கருணாநிதி பேசினார்.












Click it and Unblock the Notifications