வனத்துறை அமைச்சராக எம்.எஸ்.எம்.ஆனந்தன் இன்று மாலை பதவியேற்பு.. ஆளுநர் மாளிகையில் பதவிப் பிரமாணம்
சென்னை : தமிழக வனத்துறை அமைச்சராக எம்.எஸ்.எம்.ஆனந்தன் இன்று மீண்டும் பதவியேற்கிறார். இதற்கான நிகழ்ச்சி இன்று பிற்பகல் ஆளுநர் மாளிகையில் நடைபெறுகிறது.
சொத்துக்குவிப்பு வழக்கில் முதல்வர் பதவியை ஜெயலலிதா இழந்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பதவியேற்றார். அப்போது, தமிழக வனத்துறை அமைச்சராக இருந்தவர் எம்.எஸ்.எம்.ஆனந்தன்.

பின்னர் சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலையானதைத் தொடர்ந்து மீண்டும் முதல்வராக அவர் பதவியேற்றார்.
இதையடுத்து அமைச்சரவை புதிதாக மாற்றி அமைக்கப்பட்டது. அப்போது, வனத்துறை அமைச்சராக இருந்த எம்.எஸ்.எம்.ஆனந்தனுக்கு மீண்டும் பதவி வழங்கப்படவில்லை.
அவருக்கு மீண்டும் பதவி கிடைக்காமல் போனதற்கு ஜெயமணி பெண் தான் காரணம் என்று அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. தன்னிடம் ஒரு கோடி ரூபாய் வாங்கிக்கொண்டு ஆனந்தன் ஏமாற்றிவிட்டதாகவும் அந்த பெண் வெளிப்படையாகவே புகார் கூறியிருந்தார்.
முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்திடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லாததால், சட்டமன்றம் தொடங்கி போயஸ் தோட்டம் வரை ஆனந்தன் மீது நேரில் சென்று புகார் அளித்தார், ஜெயமணி. அமைச்சருக்கு, ‘400 கோடி ரூபாய்க்கு சொத்து இருக்கிறது. அந்தப் பட்டியலைக்கூட வெளியிட தயார்' என ஜெயமணி கூறிய ஒவ்வொரு புகாரும் ஆனந்தனுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது.
இது ஒரு புறம் இருக்க, உட்கட்சியில் ஆனந்தனுக்கு எதிராகக் கிளம்பிய புயல்களும் பதவி பறிப்புக்கு ஒரு காரணம் என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில், இரண்டு மாதங்களுக்கு பிறகு ஆனந்தனுக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதாவின் பரிந்துரையை ஏற்று ஆளுநர் இந்த உத்தரவை பிறப்பித்திருந்தார்.
ஆளுநர் மாளிகையில் இன்று பிற்பகல் 3 மணிக்கு தமிழக வனத்துறை அமைச்சராக ஆனந்தன் பதவியேற்றுக் கொள்கிறார். அவருக்கு ஆளுநர் ரோசய்யா பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.












Click it and Unblock the Notifications