மதுரை: போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் மரணம்: உறவினர்கள் போராட்டம்
மதுரை: மதுரையில் வழிப்பறி கொள்ளை வழக்கில் போலீஸ் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டவர், மருத்துவமனையில் பிணமாக கிடந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரை செல்லூரைச் சேர்ந்தவர் சீனி. இவருக்கு உமா என்ற மனைவியும், இரண்டு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். சீனி, சுமைதூக்கும் வேலை செய்து வந்தார்.
இந்நிலையில், மதுரையில் வெண்கல கடைத்தெருவில் சமீபத்தில் நடந்த ஒரு கொள்ளை சம்பவத்தில் சீனிக்கு தொடர்பு இருப்பதாக கூறி, மதுரை சிட்டி கிரைம் போலீசார் கடந்த 10 நாட்களாக சீனியை அடிக்கடி அழைத்து விசாரித்துவிட்டு அனுப்பியிருக்கின்றனர்.
இதேபோன்று, கடந்த புதன்கிழமை அன்றும் சீனியை விசாரணைக்காக போலீசார் அழைத்து சென்றிருக்கின்றனர். போலீசார் அழைத்து சென்றது அவரது மனைவி மற்றும் உறவினர் யாருக்கும் தெரிவிக்கப்படவில்லையாம்.
கடந்த இரண்டு நாட்களாக கணவனை காணாமல் தவித்த அவரது மனைவி, போலீஸ் நிலையத்திற்கு சென்று விசாரித்திருக்கிறார். ஆனால் போலீசார் சீனியை அழைத்து வரவில்லை என தெரிவித்து விட்டனர்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை மதியம் சுமார் 12 மணியளவில் மதுரை அரசு மருத்துவமனையில் உள்ள பிணவறைக்கு சீனியை ரகசியமாக கொண்டு வந்து போலீசார் அட்மிட் செய்துள்ளனர். இந்த சம்பவத்தை மருத்துவமனை பணியாளர்கள், உமா மற்றும் அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, சீனியின் மனைவி உமா மற்றும் அவரது உறவினர்கள், வழக்கறிஞர்களுடன் அங்கு வந்தனர். போலீசார் சீனியை அடித்து கொன்று விட்டதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் கோஷங்கள் எழுப்பினர்.
செய்தியாளர்களிடம் பேசிய உமா, தனது வீட்டிற்கு வந்த போலீசார் வயிற்று வலியால் அவதிப்பட்ட கணவரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்திருப்பதாக கூறினார். குழந்தைகளுடன் இங்கு வந்து பார்த்த போது அவர் தற்கொலை செய்து உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கின்றனர்.
மார்ச்சுவரியில் சடலத்தை வைத்துவிட்டு கண்ணில் காட்ட மறுக்கின்றனர். போலீசார் அடித்த அடியில்தான் என் கணவர் உயிரிழந்துவிட்டார். போலீசார் அதை மறுக்கின்றனர் என்றார்.
பதற்றம் காரணமாக சுமார் 100க்கும் மேற்பட்ட போலீசார் மருத்துவமனையில் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டனர். இதனிடையே இது தொடர்பாக 176 பிரிவின் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் அளித்துள்ளதாகவும் மதுரை காவல்துறை ஆணையர் சஞ்சாய் மாத்தூர் தெரிவித்தார். இது தொடர்பாக நீதிவிசாரணை நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
போலீஸ் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications