மதுரையைக் கலக்கிய "சகாயம் 2016"... ஆயிரக்கணக்கில் திரண்டு வந்த இளைஞர்கள்
மதுரை: மதுரையில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்டு நடத்திய சகாயம் 2016 என்ற பெயரிலான இளைஞர் எழுச்சி மாநாடு அனைவரையும் கவர்ந்திழுத்துள்ளது.
சமீப காலமாக மக்கள் மத்தியில் சகாயத்தை முதல்வராக்க வேண்டும் என்ற கோரிக்கையும், எண்ணமும் வலுத்து வருகிறது. இதை வைத்து சமீபத்தில் சென்னையில் ஒரு பேரணி நடந்தது.
இந்த நிலையில் மதுரையில் நேற்று சகாயம் 2016 என்ற தலைப்பில் இளைஞர் எழுச்சி மாநாடு நடைபெற்றது. ஆயிரக்கணக்கானோர் இதில் கலந்து கொண்டனர்.

சகாயம் 2016
சகாயம் 2016 என்ற தலைப்பில் மதுரையில் நேற்று மாலை இந்த இளைஞர் எழுச்சி மாநாடு நடந்தது. இந்த மாநாட்டை நாகப்பட்டினம் ஜெகசண்முகம், காரைக்குடி சாமி ராஜ்குமார், திருச்சி சையது உமர் முக்தர், மதுரை ஜெயக்குமார், சுரேந்தர், தொழில் அதிபர் திருமுருகன் ஆகியோர் இணைந்து ஒருங்கிணைத்து நடத்தினர்.

அரசியல் மாற்றத்திற்காக
இளங்கோ வரவேற்றார். புதுக்கோட்டையை சேர்ந்த சிறுமி பிரியதர்ஷினி முன்னுரையாற்றினார். முன்னதாக மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகசண்முகம் செய்தியாளர்களிடம் மாநாடு ஏன் என்பது குறித்து விளக்கிப் பேசுகையில், இளைஞர் எழுச்சி மாநாடு அரசியல் மாற்றத்திற்கான ஒரு மாநாடாகும். தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை கொண்டு வர இளைஞர்கள் விரும்புகின்றனர்.

சகாயம் வர வேண்டும்
ஆனால் அவர்களுக்கு தலைமை ஏற்க தகுதியான தலைவர்கள் தமிழகத்தில் இல்லை. எனவே தான் நாங்கள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்தை தலைமை பொறுப்பேற்க அழைப்பு விடுத்துள்ளோம். அவர் போன்ற அதிகாரிகள் தலைமை தாங்கி இளைஞர்களுக்கு வழிகாட்ட வேண்டும்.

திருப்புமுனையாக அமையும்
இந்த மாநாடு வருகிற 2016 சட்டமன்ற தேர்தலுக்கு ஒரு திருப்பு முனையாக அமையும். தமிழகத்தில் தற்போது லஞ்சம், ஊழல் தலைவிரித்தாடுகிறது. அதனை ஒழிக்க வேண்டும் என்றால் சகாயம் போன்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் தலைமையிலான இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும். சகாயம் எப்போது வந்தாலும் அவருக்கான தலைமை பொறுப்பு காலி இடமாகவே இருக்கும். அவர் போன்ற அதிகாரிகளும் எங்கள் இயக்கத்தில் சேர வேண்டும்.

நேர்மையே காரணம்
சகாயத்தின் பெயரை பயன்படுத்துவதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். நாங்கள் அவர் படத்தை, பெயரை பயன்படுத்தவற்கு அவரது நேர்மையே காரணம்.

எழுச்சி தமிழகம்
தற்போது நாங்கள் இந்த அமைப்பிற்கு எழுச்சி தமிழகம் என்று பெயர் சூட்டி இருக்கிறோம். இது எங்களுக்கான அடையாளம். வரும் காலங்களில் இந்த பெயரில் தான் போராட்டங்களை நடத்துவோம். தமிழகத்தை மீட்டெடுக்க இளைஞர்கள் கையில் அரசியல் வரவேண்டும். தற்போது நடைபெற்று வருகிற ஆட்சிகளில் ஊழல் மட்டுமே நிறைந்திருக்கிறது என்றார்.

20 தீர்மானங்கள்
இந்த மாநாட்டில் தமிழகத்தின் பல்வேறு முக்கிய பிரச்சினைகள் தொடர்பான தீர்மானங்கள் உள்பட 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
படங்கள்: தேசிய அக்னிச் சிறகுகள்.












Click it and Unblock the Notifications