அன்புநாதன் வீட்டில் ரெய்டு நடத்திய கரூர் எஸ்.பி.வந்திதாவை கொலை செய்ய முயற்சி?

Posted By:
Subscribe to Oneindia Tamil

கரூர்: கரூர் மாவட்டத்தில் அதிமுக பிரமுகர் அன்புநாதனுக்கு சொந்தமான குடோனில் ரெய்டு நடத்தி ரூ.5 கோடி பணம் பறிமுதல் செய்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வந்திதா பாண்டேவை கொலை செய்ய முயற்சி நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட எஸ்.பி. அலுவலகத்துக்கு துப்பாக்கியுடன் வந்த வெங்கடேசன் என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழக சட்டசபைத் தேர்தல் மே 16ம் தேதி நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுப்பதற்காக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Man with gun nabbed in Karur SP’s office

கரூர் மாவட்டம், அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்த அதிமுக பிரமுகர் அன்புநாதனுக்கு சொந்தமான குடோன் மற்றும் வீட்டில், கடந்த, 22ம் தேதி, 4.87 கோடி ரூபாயை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர். ஆம்புலன்ஸ், வாகனங்கள், பணம் எண்ணும் இயந்திரங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த ரெய்டை எஸ்.பி. வந்திதா பாண்டே முன்னின்று நடத்தினார். தற்போது, அன்புநாதன் பின்னணி குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகிறது.

இந்த நிலையில் அன்புநாதன் வீட்டில் பதுக்கப்பட்ட பணத்தை பறிமுதல் செய்த பெண் எஸ்.பி. வந்திதா பாண்டேவை கொலை செய்ய முயற்சி நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாவட்ட எஸ்.பி. அலுவலகத்துக்கு துப்பாக்கியுடன் வந்த வெங்கடேசன் என்பவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

துப்பாக்கியுடன் வந்த வெங்கடேசன் கரூர் பரமத்தியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. பெண் எஸ்.பி.யை கொல்லுமாறு தம்மிடம் மர்மநபர்கள் துப்பாக்கி தந்ததாக வெங்கடேசன் தகவல் தெரிவித்துள்ளார். பணம் பதுக்கியவர்கள் பெண் எஸ்.பி. வந்திதாவை கொல்ல முயற்சியா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க, நேற்றிரவு, 7 மணிக்கு, வந்திதா பாண்டே தற்கொலைக்கு முயன்றதாகவும், கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தகவல் பரவியது. இதையடுத்து, செய்தியாளர்கள் தனியார் மருத்துவமனையில் குவிந்தனர். ஆனால், வந்திதா பாண்டே அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை.

அலுவலகத்தில் வழக்கமான பணியில் ஈடுபட்டு இருந்தது உறுதியானது. இதுகுறித்து, எஸ்.பி. வந்திதா பாண்டே செய்தியாளர்களை தொடர்பு கொண்டு பேசியதோடு, ''நான் நலமுடன் உள்ளேன்; எந்த பிரச்சனையும் இல்லை. வதந்தியை பரப்பியவர்கள் யார் என்பது தெரியவில்லை, என்று தெரிவித்தார்.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள், வந்திதாவை கொலை செய்யும் நோக்கத்துடன் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியுடன் எஸ்.பி. அலுவலகத்திற்கு வந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை வதந்தி பரப்பிய நபர்களே இப்போது கொலை செய்யவும் முயற்சி செய்தார்களாக என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A man who barged into the office of the Karur superintendent of police Vandita Pandey on Monday with the intention to kill her has been taken into custody. He had a pistol and was freely roaming in the office.
Please Wait while comments are loading...