கூடலூரில் துப்பாக்கி முனையில் கூட்டம் போட்டு மளிகைக் கடையில் திருடிய மாவோயிஸ்டுகள்
நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே பழங்குடியினர் மக்கள் வசிக்கும் கிராமத்திற்குள் புகுந்த மாவோயிஸ்டுகள் துப்பாக்கி முனையில் கூட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சத்திகுழி வனஅலுவலகத்தை தகர்க்கப் போவதாகவும் எச்சரிக்கை விடுத்த மாவோயிஸ்ட்டுகள் போகும் போது ஆதிவாசிகளின் மளிகைக்கடையில் இருந்த பொருட்களை திருடிவிட்டு சென்றுள்ளனர்.
கேரள மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக அட்டப்பாடி, மானந்தவாடி, நிலம்பூர் உள்ளிட்ட வனத்துறை அலுவலகங்கள், சோதனைச்சாவடிகளை மாவோயிஸ்டுகள் தீ வைத்து எரித்தனர். இதேபோல் சில இடங்களில் மாவோயிஸ்டுகளுக்கும், போலீசாருக்கும் இடையே துப்பாக்கி சண்டைகள் நடைபெற்றன.

அதிரடிப்படை தேடுதல்
கடந்த ஒரு வாரமாக நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தமிழக-கேரள எல்லையில் உள்ள நிலம்பூர் பூக்கோட்டுபாடம் பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் உள்ளதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் மலப்புரம், வயநாடு, கண்ணனூர் உள்ளிட்ட வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக கூறப்பட்டதையடுத்து அப்பகுதிகளில் அதிரடிப்படை மற்றும் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
ராணுவ உடையில் கூட்டம்
இந்நிலையில், சனிக்கிழமையன்று மாலை கூடலூர் அருகே தமிழக-கேரள எல்லையில் உள்ள பாட்டகரும்பு ஆதிவாசி கிராமத்துக்குள் ராணுவ உடை அணிந்தபடி கையில் துப்பாக்கிகளுடன் 2 பெண்கள் உள்பட 10 பேர் கொண்ட மாவோயிஸ்டுகள் புகுந்துள்ளனர். அவர்கள், ஆதிவாசி செல்லன் என்பவரின் வீட்டின் முன் அமர்ந்த அவர்கள், ஆதிவாசி மக்கள் அனைவரையும் அழைத்து துப்பாக்கி முனையில் கூட்டம் நடத்தி இருக்கின்றனர்.
வனஅலுவலகத்தை தகர்ப்போம்
அப்போது தங்களது கொள்கைகள் குறித்து ஆதிவாசி மக்களிடம் எடுத்துரைத்த மாவோயிஸ்டுகள், ''உங்கள் வளர்ச்சிக்காக அரசிடம் நிறைய நிதி உள்ளது. ஆனால் அதனை முறையாக பயன்படுத்துவது இல்லை. கூடிய விரைவில் நிலம்பூர் அருகே உள்ள சத்திகுழி வன அலுவலகத்தை தாக்க போகிறோம். போலீசார், வனத்துறையினரை பார்த்து எங்களுக்கு எந்த பயமும் இல்லை என்று கூறியுள்ளனர்.
மளிகைக்கடையில் திருட்டு
அதன்பின் மாவோயிஸ்டுகள், அங்கிருந்த சந்திரன் என்பவரது கடையில் இருந்து அரிசி, பருப்பு, மசாலா உள்ளிட்ட மளிகை பொருட்களை அள்ளிச் சென்றிருக்கிறார்கள். இதை தொடர்ந்து ஆதிவாசிகள் அளித்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து வந்து நிலம்பூர், கூடலூர் எல்லை வனப்பகுதியில் மாவோயிஸ்டுகளை பிடிக்க தேடுதல் வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications