மதுராந்தகத்தில் தவெக வெற்றி! மனைவி கன்னத்தில் முத்தமிட்ட குமரவேல்! வெட்கத்தில் சிரித்த மரகதம்!
மதுராந்தகம்: மதுராந்தகம் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலின் கன்னத்தில் முத்தமிட்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் அவரது கணவர் குமரவேல். இதனால் வெட்கத்தில் சிரித்தார் மரகதம்!
மதுராந்தகம் இடைத்தேர்தல் கடந்த 6ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் தவெக சார்பில் மரகதம் குமரவேல், அதிமுக சார்பில் கணிதா சம்பத், திமுக சார்பில் பரந்தாமன், மார்க்சிஸ்ட் சார்பில் சுகந்தி, நாதக சார்பில் ஜானகிராமன், சுயேச்சைகள் என மொத்தம் 27 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இந்த தொகுதியில் 2,13,788 வாக்காளர்கள் உள்ளனர், அவர்களில் 1,84,413 பேர் வாக்களித்தனர். மதுராந்தகத்தில் 86.26 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன.
வாக்கு எண்ணிக்கை
இதன் வாக்கு எண்ணிக்கை நேற்றைய தினம் செங்கல்பட்டு ஆத்தூர் பண்பாட்டு மைய கட்டடத்தில் எண்ணப்பட்டது. தபால் வாக்குகள் எண்ணப்பட்டது முதல் தொடர்ந்து மரகதம் குமரவேல் அனைத்து 21 சுற்றுகளிலும் முன்னிலை வகித்து வந்தார்.
பிரச்சார பேட்டி
அவர் ஏற்கெனவே தேர்தல் பிரச்சார பேட்டிகளில் சொன்னது போல் 2, 3 ஆவது இடங்களுக்குதான் போட்டி நடந்தது. இந்த தேர்தலில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் 74,048 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் பரந்தாமன் 54,008 வாக்குகளை பெற்றார். அதாவது சுமார் 20,040 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத் 47,450 வாக்குகளையும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜானகிராமன், 2,709 வாக்குகளையும் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் 1,986 வாக்குகளையும் பெற்றிருந்தனர்.
இடைத்தேர்தல்
மதுராந்தகம் இடைத்தேர்தலில் தவெக தொடர்ந்து முன்னிலை வகித்து வந்த நிலையில் தவெக அலுவலகமான பனையூரில் பெரும் கொண்டாட்டங்கள் நடந்தன. இந்த தேர்தலில் பல வாக்குப் பதிவு இயந்திரங்களில் சீல் இல்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
11 சுற்றுகள்
11ஆவது சுற்றுக்கான இயந்திரங்களில் சீல் இல்லை என திமுக, அதிமுக, இடதுசாரிகள் புகார் அளித்துள்ளன. தற்போது வரை தவெக முன்னிலையில் உள்ள நிலையில் திமுக, அதிமுக முகவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பான சூழல் நிலவியது. அது போல் 9ஆவது சுற்றில் வாக்குப் பதிவு இயந்திரம் மாற்றப்பட்டதாக அதிமுக முகவர்கள் ஏற்கெனவே புகார் அளித்திருந்தனர்.
20 ஆயிரம் வாக்குகள்
மதுராந்தகம் வாக்கு எண்ணும் மையத்தில் 11 ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில் மீண்டும் நிறுத்தப்பட்டு பின்னர் தொடங்கப்பட்டது.
இத்தனைக்கும் மத்தியில் நேற்று நடந்த வாக்கு எண்ணிக்கை தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். அவர் பேசுகையில், இந்த வெற்றி விஜய்க்கான வெற்றி, அவர் முகத்திற்காக மட்டும்தான் இந்த வெற்றி கிடைத்துள்ளது. நிரந்தர முதல்வராக விஜய் இருப்பார் என மரகதம் குமரவேல் தெரிவித்திருந்தார்.
ஹாட்ரிக் வெற்றி
ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த மரகதம் குமரவேல் நேற்றைய தினம் வெற்றிச் சான்றிதழை பெற்றார். அப்போது அவரது கணவர் குமரவேல், மரகதம் கன்னத்தில் முத்தமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். கணவர் முத்தமிட்டதும் மரகதம் குமரவேலின் முகத்தில் அத்தனை மலர்ச்சியும் வெட்கமும் இருந்தது. மரகதம் குமரவேல் லீடிங்கில் இருந்த போதிலிருந்தே அமைச்சர் சரத்குமார், மரகதம் குமரவேலை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications
