பெஞ்சல் போயிருச்சு.. நாம் தமிழர் நார்மல் ஆயிருச்சு! சீமானுக்கு கல்தா கொடுத்த திருப்பத்தூர் தம்பிகள்!
திருப்பத்தூர்: கடந்த சில வாரங்களாகவே நாம் தமிழர் கட்சியிலிருந்து நிர்வாகிகள் கொத்துக் கொத்தாக விலகி வருவது கட்சித் தலைமையை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. பெஞ்சல் புயல் காரணமாக கடந்த சில நாட்களாக இந்த விவகாரம் அமைதியாக இருந்த நிலையில் தற்போது திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நாம் தமிழர் கட்சி முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் விலகியதாக அறிவித்திருக்கின்றனர்.
அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் வரிசையில் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான். அண்ணாவும் கருணாநிதியும் எழுத்துத் துறையில் இருந்து அரசியலுக்கு வந்தனர்.

எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜயகாந்த், நாயகன் நாயகியாக நடித்து புகழ்பெற்று அரசியலுக்கு வந்தனர். ஆனால் இயக்குனராக இருந்து அரசியலுக்கு வந்தவர் சீமானாக தான் இருக்க முடியும்.
இலங்கை தமிழர் விவகாரத்தில் போராட்டத்தில் பேசி சிறை சென்று அதற்கு பிறகு நாம் தமிழர் கட்சியில் இணைந்த தற்போது அதன் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறார். நாம் தமிழர் கட்சியின் உண்மையான நிறுவனர் தினத்தந்தி ஆதித்தனார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழ் தேசியம், தமிழர் உரிமை, தமிழ் மொழி பற்றி என சீமான் எடுத்த தமிழ் தேசிய அரசியலுக்கு இளைஞர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது.
காங்கிரஸ் திமுகவை கடுமையாக விமர்சித்தது. அப்போதைக்கு அக்கட்சிகளின் எதிர்ப்பு வாக்குகளை சீமானுக்கு கொடுத்தது. அதே நேரத்தில் ஆரம்பத்தில் பாஜக அதிமுக ஆதரவாளராகவும் சீமான் இருந்திருக்கிறார். அந்த கட்சிகளுக்கு பிரச்சாரமும் மேற்கொண்டு இருக்கிறார். இந்நிலையில் நாட்கள் செல்ல செல்ல நரம்பு புடைக்க சீமானின் பேச்சைக் கேட்டு அவரது பின்னே திரண்ட தம்பிகள் தற்போது விலகத் தொடங்கி இருக்கின்றனர்.
சக நடிகர்களை வாய்க்கு வந்தபடி பேசுவது, மூத்த தலைவர்களை ஒருமையில் திட்டுவது என சீமானின் அரசியல் மடை மாறுவதை உணர்ந்த மூத்த தம்பிகள் ஏற்கனவே திராவிட கட்சிகளில் இணைந்து இருக்கின்றனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே நாம் தமிழர் கட்சியில் புகைச்சல் தொடர்கிறது. தன்னைத் தவிர கட்சியில் வேறு யாரும் தலை எடுத்து விடக்கூடாது என்பதில் சீமான் உஷாராக இருக்கிறார். மேலும் ஆடியோ விவகாரங்கள் அக்கட்சியில் புயலை கிளப்ப அணி அணியாக கட்சியை விட்டு கிளம்பி வருகின்றனர் தம்பிகள்.
அந்த வகையில், சீமான் மீது அதிருப்தியில் இருந்த கிருஷ்ணகிரி பிரபாகரன், விழுப்புரம் வடக்கு சுகுமார், விழுப்புரம் மேற்கு பூபாலன், விழுப்புரம் மத்திய மணிகண்டன், மருத்துவ பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் இளவஞ்சி, திருப்பத்தூர் வடக்கு மாவட்ட செயலாளர் தேவேந்திரன் உள்ளிட்ட பலர் வெளியேறினர். ஏற்கனவே காளியம்மாள், நத்தம் சிவசங்கரன் குறித்து சீமான் பேசிய ஆடியோ வெளியிட்ட நிலையில், அவர்களும் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.
திருச்சி, கிருஷ்ணகிரி, விழுப்புரம் மாவட்ட செயலாளர்களை தொடர்ந்து, கடந்த சில வாரங்களில் சேலம் மாவட்ட நிர்வாகிகளும் அடுத்த நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகினர். சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் அழகாபுரம் தங்கம், நாம் தமிழர் கட்சியின் வீர தமிழர் முன்னணி அமைப்பின் சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் வைரம், நாம் தமிழர் கட்சியின் மேட்டூர் நகர துணை தலைவர் பொறுப்பிலிருந்து ஜீவானந்தம் ஆகியோர் விலகினர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெஞ்சல் புயல் காரணமாக அது குறித்த பேச்சுக்களே ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் பேசு பொருளாக இருக்கிறது. இந்த நிலையில் புயல் முடிந்து வெள்ள நீர் வடிந்து வரும் நிலையில், நாம் தமிழர் கட்சி இயல்பு நிலைக்கு திரும்பி இருக்கிறது .அந்த வகையில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகர் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோர் ஒட்டுமொத்தமாக கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கின்றனர்.
வாணியம்பாடி நாம் தமிழர் கட்சி சட்டமன்ற நகர செயலாளர் ராஜ்குமார், நகரத் தலைவர் பரத் உள்ளிட்ட நிர்வாகிகள் கட்சியிலிருந்து விலகி இருக்கின்றனர். ”பல வருடங்களாக கட்சிக்கு உழைத்த தங்கள் உழைப்பை சீமான் அங்கீகரிக்கவில்லை. நாம் தமிழர் கட்சியில் நிறைய குளறுபடிகள் இருக்கிறது. இது குறித்து மாவட்ட செயலாளரிடம் புகார் தெரிவித்தோம். ஆனால் மாவட்ட செயலாளரின் போனை கூட தலைமை எடுக்கவில்லை.
மாவட்ட செயலாளருக்கு இந்த நிலைமை என்றால் எங்கள் நிலைமை சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. இதன் காரணமாகவே கட்சியை விட்டு விலகுகிறோம்” என்கின்றனர் வாணியம்பாடி முன்னாள் நாம் தமிழர் தம்பிகள். மேலும் கடந்த மாதம் ஏழாம் தேதி திருப்பத்தூர் வடக்கு மாவட்ட செயலாளர் தேவேந்திரன் உள்ளிட்டோர் நாம் கட்சியில் இருந்து மொத்தமாக விலகியது குறிப்பிடத்தக்கது. இப்படி மாவட்டம் தோறும் சொல்லி வைத்தார் போல நாம் தமிழர் தம்பிகள் அடுத்தடுத்து விலகி வருவது கட்சி தலைமையை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.












Click it and Unblock the Notifications