கல்லூரி மாணவியை கொன்ற தாய்மாமன்.. போலீஸ் கைது செய்யும் முன்பே விபரீத முடிவு.. சிக்கிய கடிதம்
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே கல்லூரி மாணவியை கழுத்தறுத்துக் கொன்ற தாய்மாமன், நேற்று போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில், விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். சாகும் முன்பு செல்போனில் வீடியோவில் பேசிய அவர், உடல்களை ஒன்றாக புதைக்குமாறு கூறியிருக்கிறார்.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த கே.பந்தாரப்பள்ளி பனந்தோப்பு அருந்ததியர் காலனி பகுதியை சேர்ந்த 18 வயது மாணவி ஜீவிதா. பர்கூரில் உள்ள ஒரு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவரது தாய் மாமன் சரண்ராஜ். நாட்டறம்பள்ளி பகுதியில் இரு சக்கர வாகன ஷோரூமில் டிரைவராக வேலை செய்து வருகிறார்.

ஜீவிதாவும், சரண்ராஜும் கடந்த நான்கு வருடங்களாக காதலித்து வந்துள்ளார்கள். இந்த நிலையில் சரண்ராஜிடம் கடந்த சில மாதங்களாக ஜீவிதா பேசவில்லையாம். இதனால் ஆத்திரம் அடைந்த சரண்ராஜ் நேற்று முன்தினம் ஜீவிதாவை, கழுத்தை அறுத்து படுகொலை செய்து விட்டு, தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான சரண்ராஜை தனிப்படை அமைத்து தீவிரமாக தேடிவந்தனர். இந்த நிலையில் நேற்று வெலக்கல்நத்தம் பகுதியில் உள்ள டீ கடையில் சரண்ராஜ் அமர்ந்திருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜானுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் தனிப்படையினர் வெலக்கல்நத்தம் பகுதிக்கு விரைந்து சென்று சரண்ராஜை மடக்கி பிடித்து கைது செய்தார்கள்.
அவரை அழைத்துக் கொண்டு காவல் நிலையம் சென்ற போலீசார், விசாரணையை தொடங்கினர். அப்போது ஏற்கனவே விஷம் குடித்துவிட்டதாக கூறி அதிர்ச்சி அளித்துள்ளார். உடனடியாக நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி சரண்ராஜ் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போது, கடிதம் ஒன்றை கண்டனர்.மேலும் செல்போன் வீடியோவில் பேசியதையும் கண்டனர்.
சரண்ராஜ் பேசிய வீடியோவில் நானும், ஜீவிதாவும் நான்கு வருடங்களாக காதலித்து வந்தோம், நான் இப்போது தற்கொலை செய்து கொள்கிறேன்.இறந்த பின்பு ஒரே இடத்தில் உடல்களை புதைக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.அக்கா மகளை கொன்ற தாய்மாமன், விரக்தியில் தானும் தற்கொலை செய்து கொண்டிருப்பது திருப்பத்தூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)












Click it and Unblock the Notifications