3 வயது சிறுமி பலாத்காரம்.. சர்ச்சையாக பேசிய மயிலாடுதுறை கலெக்டர் பணி இடமாற்றம்! தமிழக அரசு அதிரடி
மயிலாடுதுறை: சீர்காழி அருகே 16 வயது சிறுவன் முகத்தில் துப்பியதால் தான் 3 வயது சிறுமி பாலியல் கொடுமைக்கு ஆளானார் என்ற தொனியில் பேசியதால் மயிலாடுதுறை கலெக்டர் மகாபாரதி சர்ச்சையில் சிக்கினார். இந்நிலையில் தான் உடனடியாக அவரை பணி இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இடமாற்றம் செய்யப்பட்ட மகாபாரதிக்கு வேறு பணி எதுவும் ஒதுக்கப்படவில்லை.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த தம்பதிக்கு 3 வயதில் மகள் இருக்கிறார். அங்கன்வாடிக்கு சென்ற இந்த சிறுமியை ஏமாற்றி 16 வயது சிறுவன் பாலியல் தொல்லை கொடுத்தான். அதோடு சிறுமியின் தலை மற்றும் முகத்தில் கல்லால் தாக்கிவிட்டு ஓடிவிட்டார்.

இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணை நடத்திய போலீசார் 16 வயது சிறுவனை கைது செய்தனர். கைதான சிறுவனுக்கு 18 வயது ஆகவில்லை. இதனால் அவர் மைனராக உள்ளதால் கண்காணிப்பு இல்லத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
மேலும் பாதிக்கப்பட்ட 3 வயது சிறுமி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிறுமியின் தலை மற்றும் கண்பகுதியில் ஏற்பட்ட காயத்துக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை என்பது அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் இன்று மயிலாடுதுறையில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் காவல் அலுவலர்களுக்கான போக்சோ சட்டம் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்த ஒருநாள் திறன் வளர்ப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.
இதில் கலெக்டர் மகாபாரதி பங்கேற்று பேசினார். அப்போது ‛‛கடந்த வாரம் 3 வயது சிறுமிக்கு நடந்த சம்பவத்தை பார்த்தீர்களே ஆனால் அந்த குழந்தையே தப்பாக நடந்துள்ளது. நீங்கள் கவனித்து பார்த்தால் அது உங்களுக்கு தெரியும். எனக்கு கிடைத்த ரிப்போர்ட்டின்படி அந்த பையனின் முகத்தில் குழந்தை துப்பி உள்ளது. இதுதான் காரணம். 2 பேரையுமே பார்க்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்'' என்று கூறினார்.
மகாபாரதியின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்பட பிற கட்சி பிரமுகர்கள் விமர்சனம் செய்ய தொடங்கி உள்ளனர். இந்நிலையில் தான் மயிலாடுதுறை கலெக்டர் மகாபாரதியை அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக தலைமை செயலாளர் முருகானந்தம் பிறப்பித்துள்ளார்.
முருகானந்தம் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: ‛‛ஈரோடு மாநகராட்சி ஆணையராக இருக்கும் எச்எஸ் ஸ்ரீகாந்த் பணியிடமாறுதல் மூலம் மயிலாடுதுறை ஆட்சியராக ஏபி மகாபாரதிக்கு அவர்களுக்கு பதிலாக நியமனம் செய்யப்படுகிறார்'' என்று கூறியுள்ளார். இதன்மூலம் மயிலாடுதுறையின் புதிய கலெக்டராக எச்எஸ் ஸ்ரீகாந்த் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் சர்ச்சையாக பேசிய மகாபாரதிக்கு எந்த பணியும் ஒதுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications