அப்பவே உன்னை தட்டி இருக்கணும்.. மயிலாடுதுறை மகளின் காதலனை எச்சரித்த தாய்.. ஆடிப்போக வைத்த சம்பவம்
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே அடியமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த வைரமுத்து என்ற இளைஞர் மாலினி என்ற இளம்பெண்ணை 10 வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இந்த காதலுக்கு மாலியினின் பெற்றோர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இந்நிலையில் மாலினியின் தாயார் வைரமுத்துவை கடுமையாக எச்சரித்துள்ளார். இதேபோல் மாலினியின் சகோதரரும் எச்சரித்தாராம். இந்நிலையில் தான், இருசக்கர வாகனத்தில் வந்த வைரமுத்து இன்று உயிருடன் இல்லை. மாலினியின் தாய் எச்சரித்த வீடியோ வெளியாகி உள்ளது,
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே அடியமங்கலம் கிராமம் பெரிய தெருவை சேர்ந்தவர் குமார். இவருக்கு வைரமுத்து(28) என்ற மகனும் இரண்டு மகள்களும் உள்ளனர். டூ வீலர் மெக்கானிக் வேலை பார்க்கும் வைரமுத்து அதே பகுதியான பெரியகுளம் அருகே உள்ள பக்கத்து தெருவில் வசிக்கும் குமார் என்பவரின் மகள் கல்லூரி படிப்பை முடித்த மாலினி (26) என்பவரை 10 வருடங்களாக காதலித்து வந்துள்ளார்.

சென்னையில் வேலை
மாலினி சென்னையில் வேலை பார்த்து வருகிறார். வைரமுத்து மாலியினின் காதலுக்கு பெண் வீட்டில் எதிர்ப்பு உள்ள நிலையில் அடிக்கடி இரு குடும்பத்தினருக்கும் பிரச்சனை நிலவி வந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாலினியின் தாயார் விஜயா வைரமுத்து வேலை பார்க்கும் இடத்திற்கு சென்று வைரமுத்துவிடம் பிரச்சனையில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து மாலினியின் குடும்பத்தார் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
மாலினி உறுதி
இருதரப்பினரையும் காவல் நிலையம் அழைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், மாலினி வைரமுத்துவைதான் திருமணம் செய்து கொள்வேன் என்று தெரிவித்துள்ளார். இதனால் மாலினியின் குடும்பத்தினர் தங்கள் மகள் மாலினியை நிராகரித்துள்ளனர்.தொடர்ந்து மாலினி வைரமுத்துவின் வீட்டிற்கு சென்றுள்ளார். வைரமுத்துவிற்கும் மாலினிக்கும் பதிவு திருமணம் சில மாதங்களில் செய்து வைப்பதாக வைரமுத்துவின் பெற்றோர்கள் கூறியுள்ளனர்.
வைரமுத்துவுக்கு என்ன நடந்தது
தொடர்ந்து மாலினி நேற்று வேலைக்காக சென்னைக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.இந்நிலையில் இரு சக்கர வாகனத்தில் நேற்று இரவு வீட்டிற்கு வந்த வைரமுத்துவை வழிமறித்த மர்மநபர்கள் ஓட ஓட விரட்டிச் சென்று சரமாரியாக அறிவாளால் வெட்டியுள்ளனர்.கழுத்து மற்றும் இரண்டு கைகளிலும் வெட்டிவிட்டு மர்ம நபர்கள் தப்பி சென்றனர். உயிருக்கு போராடிய வைரமுத்துவை உறவினர்கள் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு வைரமுத்து பரிதாபமாக உயிரிழந்தார்.
போலீசார் குவிப்பு
இச்சம்பவம் அறிந்த மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து அசம்பாவிதம் ஏதும் ஏற்படாதவாறு 30க்கும் மேற்பட்ட போலீசார் கிராமத்தில் குவிக்கப்பட்டனர். தங்கள் மகனை காதலியின் குடும்பத்தினர் கொன்றுவிட்டதாக வைரமுத்துவின் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
தாயார் மிரட்டிய வீடியோ
டூவீலர் மெக்கானிக் ஷாப்பிற்கு சென்று வைரமுத்துவிடம் வாக்குவாதம் செய்யும்போது அப்பவே உன்னை தட்டி இருக்க வேண்டும் என்று மாலினியின் தாயார் விஜயா மிரட்டல் விடுக்கும் வீடியோ பதிவை காவல்துறையில் கொடுத்துள்ளார்களாம். காதலி குடும்பத்தினர் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் மயிலாடுதுறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications