தேர்தல் தோல்வியால் மதிமுக தொண்டர்கள் துவண்டுவிட மாட்டார்கள்: வைகோ
சென்னை: தேர்தலில் தோல்வி அடைந்தாலும் ம.தி.மு.க. தொண்டர்கள் துவண்டு விட மாட்டார்கள் என்று ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ கூறியுள்ளார்.
மக்கள் நல கூட்டணியுடன் தேர்தலை சந்தித்தால் மதிமுக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது என்று கட்சியின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் வைகோவை வலியுறுத்தி வந்தனர். ஆனால், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தன்னிச்சையாக மக்கள் நல கூட்டணியுடன் போட்டி என அறிவித்தார். மேலும் அதன் ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டார்.

வைகோவின் முடிவினால் அதிருப்தியடைந்த மாவட்ட செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து விலகினர். சிலர் வைகோ தனது முடிவை மாற்றுவார் என்று எதிர்பார்த்தனர். ஆனால், அவர் மநகூவுடன் தேர்தலை சந்திப்பதில் உறுதியாக இருந்தார்.

இந்த நிலையில், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மதிமுக தேமுதிக, தமாகா, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இதில், மதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாமல் தோல்வியை சந்தித்தது.

அதுவும் மதிமுக போட்டியிட்ட பெரும்பாலான இடங்களில் டெபாசிட் கூட பெற முடியாத நிலை ஏற்பட்டது. இது, மதிமுகவினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கட்சியில் வைகோவின் செயல்பாடு நிர்வாகிகள் மத்தியில் கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.
இந்நிலையில் மதிமுக உயர்நிலைக்குழு கூட்டம் இன்று காலை 9 மணிக்கும், மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக் குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்கள் கூட்டம் காலை 11 மணிக்கும், சென்னை, தலைமை நிலையம் தாயகத்தில் மதிமுக அவைத்தலைவர் திருப்பூர் சு. துரைசாமி தலைமையில் நடைபெற்றது.

மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், தமிழகத்தில் 27 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட்ட மதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர்.
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ முன்னிலை வகித்தார். துணை பொதுச்செயலாளர்கள் மல்லை சத்யா, துரை பாலகிருஷ்ணன், மாவட்ட செயலாளர்கள் ஜீவன், ரெட்சன் அம்பிகாபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, சட்டசபை தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்து 2 கட்சியினரும் அதிக இடங்களை பிடித்துள்ளனர். எங்கள் கட்சி தேர்தலில் தோல்வி அடைந்தாலும், ம.தி.மு.க. தொண்டர்கள் யாரும் துவண்டுவிடவில்லை.
2011 சட்டமன்ற தேர்தலை நாங்கள் புறக்கணித்தோம். இந்த தேர்தலில் தேர்தல் கமிஷனுக்கு உரிய அதிகாரம் வழங்கப்படவில்லை. தகுதியற்ற வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்யவோ, கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யவோ அவர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. இதனால் தான் அ.தி.மு.க. ஆட்சியை பிடித்தது.

ம.தி.மு.க. தொண்டர்கள் மனஉறுதி மிக்கவர்கள். தேர்தலில் தோல்வி அடைந்தாலும் அவர்கள் இன்னும் உற்சாகமாகத்தான் இருக்கிறார்கள். அவர்கள் போராளிகள். அநீதிகளை எதிர்க்க துணிந்தவர்கள் என்று வைகோ கூறினார்.
தமிழக மீனவர்கள் மீது சிங்கள கடற்படை தாக்குதல் நடத்துவதும் படகுகளை பறிமுதல் செய்வதும் நடந்து வருகிறது. அலைகள் ஓயாதது போல் இந்த சம்பவமும் ஓயாது. மத்திய அரசு தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை கண்டு கொள்வதில்லை. தமிழக முதல்வரும் பிரதமருக்கு அடிக்கடி கடிதம் எழுதினாலும் நடவடிக்கை எடுப்பதில்லை என்று வைகோ குற்றம்சாட்டினார்.
மதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
தமிழக சட்டசபை தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டதை தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்த்தது கண்டிக்கத்தக்கது.
சட்டசபை தேர்தலில் எங்கள் கூட்டணிக்கு 26 லட்சத்து 18 ஆயிரத்து 250 வாக்குகள் (6.4 சதவீதம்) கிடைத்தது. எங்களுக்கு வாக்களித்த தமிழக மக்களுக்கு ம.தி.மு.க. சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
மது விற்பனை நேரத்தை மதியம் 12 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் அமுல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.












Click it and Unblock the Notifications