For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெயலலிதாவுக்கு ஹெலிபேட் அமைப்பதற்காக ஸ்டேடியத்தை பாழ்படுத்தி விட்டனர்.. மதிமுக கடும் தாக்கு

Google Oneindia Tamil News

தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகரில் வ.உ.சி கல்லூரி, ஜோதி நகர், கதிர்வேல் நகர் பகுதிகளில் ஏற்கனவே அமைக்கப்பட்ட ஹெலிபேட்கள் பயன்படுத்தும் நிலையிலேயே உள்ளன. இதில் சில ஹெலி பேட் தளங்கள் ஏற்கனவே, இதே தமிழக முதல்வர் வருவதற்காக அமைக்கப்பட்டதுதான். இவற்றை பயன்படுத்துவதை விட்டு விட்டு, விளையாட்டு மைதானத்தை பாழாக்கி ஹெலி பேட் தளம் அமைக்கப்பட்டுள்ளது ஆளும்கட்சியின் பணபலத்தையும், ஆடம்பரத்தையும் வெளிச்சம் போட்டு காட்டுகிறது என்று மதிமுக மாவட்டச் செயலாளர் எஸ். ஜோயல் குற்றம் சாட்டியுள்ளார்.

நெல்லை மேயர் இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு சாதகமாக பாஜகவேட்பாளர் வெள்ளையம்மாளை வெற்றிகரமாக வாபஸ் பெற வைத்து விட்டனர். அவரும் வாபஸ் வாங்கிய கையோடு முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து அதிமுகவிலும் இணைந்து விட்டார்.

ஆனால் அதேபோல தூத்துக்குடியில் செய்ய முடியாமல் போய் விட்டது. இதனால் அதிமுக -பாஜக இடையே அங்கு நேரடி மோதல் ஏற்பட்டுள்ளது.

விலை போகாத ஜெயலட்சுமி

விலை போகாத ஜெயலட்சுமி

பாஜக சார்பில் அங்கு ஜெயலட்சுமி போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் அந்தோணி கிரேசி களத்தில் நிற்கிறார். அதிமுகவினர் ஜெயலட்சுமிக்கு நெருக்கடிகள் கொடுத்தும் கூட அவர் திடமாக போட்டியிடுகிறார். தீவிரப் பிரசாரத்திலும் ஈடுபட்டுள்ளார்.

மதிமுக தீவிரப் பிரசாரம்

மதிமுக தீவிரப் பிரசாரம்

ஜெயலட்சுமிக்கு ஆதரவாக மதிமுகவினர் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். மாவட்டச் செயலாளர் எஸ். ஜோயல் தலைமையில் பிரசாரம் நடந்து வருகிறது. இந்த நிலையில் முதல்வர் ஜெயலலிதாவுக்காக அதிகாரிகள் பெருமளவில் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டு வருவதாக ஜோயல் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது...

அராஜக செயல்கள்

அராஜக செயல்கள்

தமிழகத்தில் காலியாகவுள்ள உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் வரும் 18ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் ஆளும்கட்சியான அதிமுக வெற்றிபெறவேண்டும் என்ற நோக்கத்தில் இதுவரை இல்லாதஅளவிற்கு அரசுத்துறை அதிகாரிகள், அமைச்சர்களின் படை பலத்தோடு அராஜக செயல்களை அரங்கேற்றி வருகிறது.

கொடிகள், தோரணங்கள், சாலைகள் காலி!

கொடிகள், தோரணங்கள், சாலைகள் காலி!

தூத்துக்குடி மாநகராட்சி மேயர் வேட்பாளருக்கு ஆதரவு கேட்டு தேர்தல் பிரசாரத்திற்கு வரும் தமிழக முதல்வர் வருகைக்காக மாநகர் பகுதிகளில் விதிமுறைகளை மீறி சாலையோரங்களில் கொடி, தோரணங்கள் கட்டப்பட்டுள்ளது. கொடிக்கம்பங்கள் அனைத்தும் இயந்திரங்கள் மூலமாக சாலையில் துளையிட்டு அமைக்கப்படுவதால் சாலைகள் சேதமாகி வருகிறது.

அலங்கார வளைவுகள்

அலங்கார வளைவுகள்

மாநகரில் முக்கிய சாலைகளை வழிமறித்து ஆடம்பரமான அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளது. சிக்னல் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள அலங்கார வளைவுகள், கொடிக்கம்பங்கள் போக்குவரத்திற்கு பெரும் இடையூறாக இருந்து வருகின்றன. இவற்றால் கூடுதலாக போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு, மாணவ, மாணவியர்கள், வாகனஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

விளையாட்டு மைதானத்தில் ஹெலிபேட்

விளையாட்டு மைதானத்தில் ஹெலிபேட்

இந்நிலையில், பள்ளி மாணவர்கள் விளையாடுவதற்குரிய விளையாட்டு மைதானத்தில் ஹெலிகாப்டர் இறக்குதளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மைதானத்தில் அகில இந்திய அளவில் மற்றும் மாநில அளவிலான கபடி, கைப்பந்து, கால்பந்து உள்ளிட்ட போட்டிகள் வருடம்தோறும் நடத்தப்பட்டு வருகிறது.

இனி விளையாடவே முடியாது

இனி விளையாடவே முடியாது

இந்த விளையாட்டு மைதானத்தில் இனியாரும் விளையாடவே முடியாத அளவிற்கு மைதானத்தின் நடுவில் கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டுள்ளதுடன், மைதானத்தின் உட்பகுதி முழுவதும் தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு விளையாட்டு வீரர்களின் திறமையை வெளிக்காட்டிய விளையாட்டு மைதானம் இனிவரும் நாட்களில் விளையாடுவதற்கு தகுதியற்ற இடமாக மாறியுள்ளது.

ஆடம்பரம், பண பலம்

ஆடம்பரம், பண பலம்

தூத்துக்குடி மாநகரில் வ.உ.சி கல்லூரி, ஜோதி நகர், கதிர்வேல் நகர் பகுதிகளில் ஏற்கனவே அமைக்கப்பட்ட ஹெலி பேட்கள் பயன்படுத்தும் நிலையிலேயே உள்ளன. இதில் சில ஹெலி பேட் தளங்கள் ஏற்கனவே, இதே தமிழக முதல்வர் வருவதற்காக அமைக்கப்பட்டதுதான். இவற்றை பயன்படுத்துவதை விட்டு விட்டு, விளையாட்டு மைதானத்தை பாழாக்கி ஹெலி பேட் தளம் அமைக்கப்பட்டுள்ளது ஆளும்கட்சியின் பணபலத்தையும், ஆடம்பரத்தையும் வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

எந்த விதத்தில் நியாயம்

எந்த விதத்தில் நியாயம்

கடந்த 2008ம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில் தூத்துக்குடி மாநகராட்சியின் புதிய கட்டிட திறப்பு விழாவிற்கான விழா இந்த பள்ளி விளையாட்டு மைதானத்தில் தான் நடந்தது. திமுக அரசின் இந்த விழா இந்த விளையாட்டு மைதானத்தில் நடந்தால் மைதானம் பாழாகி விடும் என்று எதிர்ப்பு தெரிவித்த அதிமுகவினர் இன்று இந்த மைதானத்தில் கான்கிரீட் தளம் அமைத்துள்ளது எந்த விதத்தில் நியாயம் என்பதை மக்கள் அனைவரும் சிந்தித்து பார்க்கவேண்டும்.

இதுவரை இல்லாத அதிசயமாய்

இதுவரை இல்லாத அதிசயமாய்

தமிழக முதல்வரின் வருகையை முன்னிட்டு, தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் ஆங்காங்கே மின்கம்பங்களும், மின் வழித்தடங்களும் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. அத்துடன் மின்கம்பங்களுக்கு இதுவரை இல்லாத அதிசயமாய் வர்ணங்கள் பூசப்பட்டும் வருகிறது. தேவையில்லாத இந்த ஆடம்பரப்பணிகளுக்காக பலமணிநேரம் மின்தடை செய்யப்படுவதால் மாநகரமக்கள், தொழிலாளர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

ஒரு நாள் கூத்துக்காக

ஒரு நாள் கூத்துக்காக

ஒரே ஒருநாள் மட்டும் தேர்தல் பிரசாரத்திற்கு வரும் தமிழக முதல்வர் செல்வி.,ஜெ.ஜெயலலிதாவை வரவேற்க ஆயத்தமாக தமிழக அரசின் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, மின்சாரத்துறை, மாவட்ட நிர்வாகம் என அனைத்து அரசுத்துறைகளின் அதிகாரிகளும், தமிழகஅமைச்சர் பெருமக்களும் தங்களின் மக்கள் பணிகளை எல்லாம் ஓரம்கட்டி வைத்துவிட்டு, தேவையில்லாத வீணான ஆடம்பரப் பணிகளில் ஈடுபட்டுள்ளது தேர்தல் விதிமுறைகளை மீறிய செயலாகும்.

வேடிக்கையாக இருக்கிறது

வேடிக்கையாக இருக்கிறது

ஆளும்கட்சியாக இருப்பதால் அதிமுக தனது அராஜக போக்கையும், அதிகார போக்கையும், தனது படை பலத்தையும் வெளிப்படையாக காட்டி எதிர்கட்சிகளை மிரட்டி வருகிறது. இதற்கு தமிழக காவல்துறையினரும், மாநில தேர்தல் ஆணையமும் உடந்தையாக இருப்பது வேடிக்கையாகவும், வேதனையாகவும் இருக்கிறது.

அள்ளி வீசிய ஜெயலலிதா

அள்ளி வீசிய ஜெயலலிதா

கடந்த 2011ம் ஆண்டு தூத்துக்குடி மாநகராட்சியின் தேர்தல் பிரசாரத்திற்கு வந்த இதே தமிழக முதல்வர், வி.வி.டி சிக்னலில் மேம்பாலம் அமைக்கப்படும். முதல் ரயில்வே கேட்டில் சுரங்கப்பாதை, 2, 4ம் ரயில்வே கேட்டுகளில் மேம்பாலம் அமைக்கப்படும். கனரக வாகனங்களை நிறுத்த டிரக் டெர்மினல் அமைக்கப்படும், புதியதாக ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்படும், தினம்தோறும் தட்டுப்பாடு இன்றி மக்களுக்கு குடிநீர் வழங்கப்படும் என்ற ரீதியில் வாக்குறுதிகளை மக்கள் மத்தியில் தேர்தல்கால வாக்குறுதிகளை அள்ளி அள்ளி வீசினார்.

சொன்னதைச் செய்யாத அதிமுக

சொன்னதைச் செய்யாத அதிமுக

இப்படி தமிழக முதல்வர் கொடுத்த திட்டங்களை, தூத்துக்குடியில் துரிதமாக செயல்படுத்துவதற்கான ஆய்வுப்பணிகளை மேற்கொள்ள மூன்றுவருட காலமாக எந்த அமைச்சர் பட்டாளமும் தூத்துக்குடிக்கு வரவே இல்லை. ஆனால் இன்று தேர்தல் பிரசாரத்திற்கு வரும் முதல்வரின் பிரசார வழித்தடத்தை அமைச்சர்கள் கூட்டம் கூட்டமாக வந்து ஆய்வு செய்வது வேடிக்கையாக இருக்கிறது.

தண்ணீர் இல்லை

தண்ணீர் இல்லை

தமிழக முதல்வர் வாக்குறுதி கொடுத்து மூன்று வருடமாகியும் மாநகராட்சி நிர்வாகத்தால் மாநகர மக்களுக்கு தட்டுப்பாடு இன்றி தண்ணீர் தர வழியில்லை. கடந்த ஆட்சிக்காலத்தில் வாரத்தில் 2நாட்களுக்கு ஒருமுறை என்ற ரீதியில் மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த குடிதண்ணீரை மாதத்தில் வெறும் 3நாட்களுக்கு ஒருமுறை வழங்கிய பெருமை மாநகராட்சியின் அதிமுக நிர்வாகத்தையே சாரும். அதுமட்டுமா? சரிவர கொடுக்காத குடிதண்ணீருக்கான கட்டணத்தை பலமடங்கு உயர்த்தி, மாநகரமக்களை துன்பத்திற்கு உள்ளாக்கிய பெருமையும் அதிமுகவினரையே சாரும் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள்.

மீண்டும் ஏமாற்ற வருகிறார்

மீண்டும் ஏமாற்ற வருகிறார்

இப்படிப்பட்ட சூழ்நிலையில், மீண்டும் மக்களை வழக்கம்போல ஏமாற்றி வாக்கு வாங்கி வெற்றி பெறுவதற்காக ரூ.320கோடியை ஒதுக்கியுள்ளது இந்த அரசு. இதுமட்டுமின்றி நேரில் வந்து மக்களிடம் மீண்டும் மீண்டும் பொய்யான வாக்குறுதிகளை வழக்கம்போல அள்ளி வீசுவதற்கும் அதிமுக தலைமை தயராக இருக்கிறது. எனவே மாநகர மக்களான நீங்கள் அனைவரும், இந்த உள்ளாட்சி இடைத்தேர்தலில் சிந்தித்து வாக்களித்திட
வேண்டுகிறேன்.

உங்களுக்காக 24 மணி நேரமும்

உங்களுக்காக 24 மணி நேரமும்

உங்களுக்காக 24 மணிநேரமும் குரல் கொடுக்கவும், உங்களின் குறைகள் தீரவும், தூத்துக்குடி மாநகராட்சியை தமிழகத்திலேயே சிறந்த மாநகராட்சியாக தரம் உயர்த்திட, மாநகர மக்கள் எங்கள் கூட்டணி கட்சியான பாரதீய ஜனதாவின் மேயர் வேட்பாளர் ஜெயலட்சுமிக்கும், கவுன்சிலர் வேட்பாளர் ஆனந்தகுமாருக்கு ஆதரவு தந்திட அன்புடன் வேண்டுகிறேன்.

நடவடிக்கை எடுங்கள்

நடவடிக்கை எடுங்கள்

மாநில தேர்தல் ஆணையம், தேர்தல் விதிமுறைகளை மீறி ஆளும்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டுவரும் அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து தேர்தல் முறையாக நடந்திட வழி வகுக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

English summary
MDMK Tutiicorin secretary Joel has condemned ADMK for misuse of govt machinery in mayor by election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X