For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கலகலக்கும் மதிமுக..தென் சென்னை மா.செயலாளர் வேளச்சேரி மணிமாறன் ராஜினாமா

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: மதிமுக பொதுச் செயலர் வைகோவுக்கு, எடைக்கு எடை வெள்ளி கட்டி, தங்க பேனா, தங்க வாள் போன்ற விலை உயர்ந்த பரிசுகளை வழங்கி, அவரது தீவிர ஆதரவு மாவட்ட செயலராக வலம் வந்த வேளச்சேரி மணிமாறன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தன்னுடைய விலகல் கடிதத்தை வைகோவிடம் கொடுத்துவிட்டார் என்றும் விரைவில் அவர் தி.மு.கவில் ஐக்கியமாக இருக்கிறார் என்றும் மதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

சட்டசபை தேர்தலுக்கு முன், மக்கள் நலக் கூட்டணியை வைகோ உருவாக்கியதில், மணிமாறனுக்கு உடன்பாடில்லை. தேர்தலில், அண்ணா நகர் அல்லது வேளச்சேரியில், மணிமாறன் போட்டியிட வேண்டும் என, வைகோ உத்தரவிட்டார். ஆனால், மணிமாறன் மறுத்து விட்டார். இதனால், வைகோவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், தேர்தல் பணிகளில் ஒதுங்கியிருந்தார் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையிலேயே தனது ராஜினாமா கடிதத்தை வைகோவிற்கு அனுப்பியுள்ளாராம் மணிமாறன்.

MDMK South Chennai district secretary Velacherry Manimaran quits?

ம .தி.மு.கவில் இருந்து விலகியது உண்மைதான் என்று கூறும் மணிமாறன் தமிழ்நாட்டில் நம்பர் ஒன் மாவட்டமாக தென்சென்னையை வைத்திருந்தேன். கட்சியை வளர்ப்பதில் அதிகக் கவனம் செலுத்தினேன். ஆனால், எங்களுக்கு எந்த மதிப்பும் இல்லை. தரக்குறைவான வார்த்தைகளில் பேசுகிறார் வைகோ.

என்னை வேளச்சேரியில் நிற்கச் சொன்னார். ' நான் முடியாது' என மறுத்துவிட்டேன். 'இந்தக் கூட்டணி நின்றால் வெற்றி பெற வாய்ப்பு இல்லை' என்று சொன்னேன். நான் பிறந்த வளர்ந்த ஊர் வேளச்சேரி. 150 வருஷமாக இங்கு இருக்கிறோம். ஏற்கெனவே 80 ஆயிரம் ஓட்டு வாங்கியிருக்கிறேன். 50 ஆண்டு பொதுவாழ்க்கையில் இருக்கும் வைகோவுக்கு இந்தக் கூட்டணி வெற்றி பெறுமா என்பது தெரியாதா? தெரிந்தே தொண்டர்களை பலியாக்கிவிட்டார் என்று குற்றம் சாட்டுகிறார்.

எடைக்கு எடை இரண்டு மடங்கு வெள்ளியை வைகோவுக்குக் கொடுத்தேன். மதுரை முத்து எம்.ஜி.ஆருக்கு 50 சவரனில் தங்க வாள் கொடுத்தார். அந்த சாதனையை முறியடித்து 150 சவரனில் தங்க வாள் கொடுத்தேன். ஏழு கோடி ரூபாய் வரையில் கட்சிக்கு நிதி கொடுத்திருக்கிறேன் என்றும் மணிமாறன் கூறியுள்ளார்.

வைகோவை சொந்தத் தகப்பனாக நினைத்துத்தான் இவ்வளவு நாள் இருந்தேன். பெரியார், அண்ணா கொள்கைளுக்காகப் பாடுபடும் கட்சி என ம.தி.மு.கவை நம்பியிருந்தேன். எந்தக் கொள்கையும் அவரிடம் இல்லை. எந்த முடிவை எடுத்தாலும் தவறாகவே எடுத்தார். ' கோவில்பட்டியில் நின்றாவது வெற்றி பெறட்டும்' என விரும்பினோம்.

ஆறு கோடித் தமிழர்களையும் ஏமாற்றும் வகையில், மனுத்தாக்கல் செய்யாமல் திரும்பிவிட்டார். ஒபாமாவோடு கை குலுக்கியவர். ஒன்பது பிரதமர்களை பார்த்தவர். 25 ஆண்டுகாலம் நாடாளுமன்றத்தில் இருந்தவர். மக்கள் நலக் கூட்டணி மாநாட்டில், ' விஜயகாந்த் என் தலைவர்' என்று பேசியதை எங்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை என்றும் மணிமாறன் கூறியுள்ளார்.

கட்சியில் இருந்து விலகக் கூடாது' என பழ.நெடுமாறன், திருமாவளவன் போன்றோர் கூறினார்கள். அவர்கள் பேச்சுக்காகவே 25 நாட்கள் பொறுத்திருந்தேன். மக்கள் நலக் கூட்டணிக்காக சில கூட்டங்களை நடத்தினேன். என்னுடைய உழைப்பை ஒரு பொருட்டாகவே வைகோ எடுத்துக் கொள்ளவில்லை.

என்னுடைய தொண்டர்கள் ஐந்தாயிரம் பேருக்கு மேல் இருக்கிறார்கள். தி.மு.கவில் இணைவதா? அ.தி.மு.கவில் இணைவதா? என்ற முடிவை இன்னும் எடுக்கவில்லை. முக்கியமான நேரங்களில், வைகோ எடுக்கும் தவறான முடிவுகளால்தான் ம.தி.மு.கவுக்கு இந்த நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது என்றும் மணிமாறன் கூறியுள்ளார்.

மணிமாறனின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் கூறும் மதிமுகவினர், தேர்தல் தொடங்கிய நாளில் இருந்தே மணிமாறனுக்கும் தலைவருக்கும் ஒத்துப் போகவில்லை. இந்தத் தேர்தலில்கூட வேளச்சேரி, சைதாப்பேட்டை, தி.நகர் உள்ளிட்ட தொகுதிகளில் தி.மு.கவுக்குத் தேர்தல் வேலை பார்த்தார் என்கின்றனர்.

தி.மு.க பொருளாளர் ஸ்டாலினிடம் பத்து நாட்களுக்கு முன்பே பேசிவிட்டார். தேர்தல் முடிவு வந்ததும் இணைப்பை விழாவை நடத்தத் திட்டமிட்டிருக்கிறார். இந்தத் தகவல் தலைவருக்கும் கிடைத்தது. ம.தி.மு.கவை உடைக்கும் தி.மு.கவின் முயற்சிதான் இது என்றும் மதிமுகவினர் குற்றம் சாட்டுகின்றனர்.

சட்டசபை தேர்தலில் திமுக உடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று மதிமுகவில் இருந்த சில மாவட்ட செயலாளர்கள் விரும்பினர். திமுகவும் வைகோவை கூட்டணிக்கு அழைத்தது. ஆனால் வைகோவோ மக்கள் நலக்கூட்டணியில் இணைந்தார். இதனால் பாலவாக்கம் பாலு தொடங்கி பல மாவட்ட செயலாளர்களை தங்கள் பக்கம் இழுத்தது திமுக. தேர்தலுக்குப் பின்னரும் இந்த இழுப்பு படலம் நீடிக்கிறது. இனி தேர்தல் முடிவுகள் வந்த பின்னர் எத்தனை பேர் எந்தெந்த கட்சியில் சேரப்போகிறார்களோ?

English summary
Sources Said The MDMK south Chennai district secretary Velacherry Manimaran had sent in his resignation to the general secretary Vaiko on Friday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X