வெள்ள பாதிப்புகள் குறித்து ஜெயலலிதா தலைமையில் ஆய்வு கூட்டம்: அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்பு
சென்னை: தமிழக வெள்ள பாதிப்புகள் மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக வடகிழக்கு பருவ மழை பெய்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழைக்கு சென்னை நகரமே வெள்ளக்காடாக மாறியது. இதனால் பல்வேறு இன்னல்களுக்கு மக்கள் ஆளாகினர். பெரும்பாலான வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் அவர்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தங்கியுள்ளனர்.

இந்த நிலையில் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் தமிழகத்தில் மழையால் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்தும் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகள் குறித்தும் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், நிதி மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் நத்தம் ஆர். விஸ்வநாதன், வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் வைத்திலிங்கம், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி, உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அரசு தலைமைச் செயலாளர் கு. ஞானதேசிகன், உள்ளிட்டோரும், முக்கியத் துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
ஆய்வுக் கூட்டத்தில் வெள்ள பாதிப்பு நிலவரம் குறித்தும், மேற்கொள்ளப்பட்ட வரும் நிவாரணப் பணிகள் குறித்தும் முதல்வர் ஜெயலலிதா அதிகாரிகளுடன் கலந்தாலோசனை நடத்தினார்.












Click it and Unblock the Notifications