முதல்வராக ரஜினியை முன்னிறுத்தி மெகா மாநாடு... மே மாதம் கோவையில் நடக்கிறது!
சென்னை: 'முதல்வராக ரஜினியை முன்னிறுத்தும் காந்திய மக்கள் இயக்க மாற்று அரசியல் மாநாடு' எனும் பெயரில் பிரமாண்ட மாநாட்டை அந்த இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் கோவையில் நடத்துகிறார்.
கோவையில் உள்ள கொடீசியா வளாக மைதானத்தில் இந்த மாநாடு வரும் மே 20-ம் தேதி நடக்கிறது.

ரஜினி அரசியலுக்கு வருவதை முன்னறிவிக்கும் வகையில், 'ரஜினியின் அரசியல் பிரவேசம் ஏன் அவசியம்?' என்ற பெயரில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி திருச்சியில் காந்திய மக்கள் இயக்கம் சார்பில் மாநாடு நடத்தப்பட்டது. தமிழருவி மணியன் தலைமையில் நடந்த இந்த மாநாட்டில் பெரும் திரளான ரசிகர்கள், பொதுமக்கள், காந்திய மக்கள் இயக்கத்தினர் பங்கேற்றனர். மிகப் பெரிய வெற்றி மாநாடாக அது அமைந்தது.
கடந்த டிசம்பர் 31-ம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் தனது அரசியல் பிரவேசத்தை உறுதி செய்தார், ரஜினி மக்கள் மன்றத்தை ஆரம்பித்து உறுப்பினர் சேர்க்கை, நிர்வாகிகள் நியமனம் என படு ஸ்பீடில் போய்க் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் காந்திய மக்கள் இயக்கம் சார்பில் மீண்டும் ஒரு பிரமாண்ட மாநாட்டை ரஜினிக்காக நடத்தப் போகிறார் தமிழருவி மணியன்.
இந்த மாநாட்டுக்கு 'முதல்வராக ரஜினியை முன்னிறுத்தும் காந்திய மக்கள் இயக்க மாற்று அரசியல் மாநாடு' எனப் பெயர் சூட்டியுள்ளார். இந்த மாநாட்டில் ரஜினிகாந்தை தமிழகத்தின் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி அறிவிப்பு வெளியிடுகிறார் தமிழருவி மணியன்.
இந்த மாநாட்டில் காந்திய மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த தொண்டர்கள், பொதுமக்கள், ரஜினி மக்கள் மன்றத்தினர் பெரும் திரளாகக் கலந்து கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மாநாடு குறித்த மற்ற விபரங்கள் விரைவில் வெளியாகும் என காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.
மாநாடு நடக்கும் மே மாதத்துக்கு முன்பே ரஜினியின் கட்சி, கொடி, கொள்கைகள் அறிவிக்கப்பட்டுவிடும் என எதிர்ப்பார்க்கப்படுவதால், அரசியல் களத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த மாநாடாக இது அமையும் எனக் கருதப்படுகிறது.
- நமது நிருபர்


Click it and Unblock the Notifications
