இயற்கை நினைத்தால்.. மக்களுக்கு பங்காரு அடிகளார் கொடுத்த முக்கியமான மெசேஜ்!
செங்கல்பட்டு: மறைந்த பங்காரு அடிகளார், தன்னைப் பின்பற்றிய பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் ஏராளமான அறிவுரைகளை வழங்கியுள்ளார். குறிப்பாக, இயற்கையை அனுசரித்து வாழ வேண்டும், நன்றி மறவாமல் இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டத்தின் மேல்மருவத்தூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை நிறுவி, அதன் குருவாகச் செயல்பட்டு வந்தவர் பங்காரு அடிகளார். ஆதிபராசக்தி சித்தர் பீடம் சார்பில் மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரிகள், பள்ளிகள் என ஏராளமான கல்வி நிறுவனங்களை நடத்தி கல்விப் பணியும், ஏராளமான சமூகப் பணிகளையும் ஆற்றி வந்தவர் பங்காரு அடிகளார்.

ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் கருவறையில் பெண்கள் வழிபாடு செய்யும் முறையை மட்டுமின்றி, மாதவிடாய் நாட்கள் உட்பட அனைத்து நாட்களிலும் பெண்கள் வழிபடலாம் என்ற முறையையும் செயல்படுத்தி, ஆன்மீகத்தில் மிகப்பெரிய புரட்சியையே செய்து காட்டினார். பங்காரு அடிகளாரின் மறைவுக்கு உலகம் முழுவதும் உள்ள பக்தர்கள் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
ஆர்ப்பாட்டம் இன்றி, அமைதியாக அருள் வழங்குவதையே வழக்கமாகக் கொண்ட பங்காரு அடிகளார், அவ்வப்போது, தனது பக்தகோடிகளுக்கு, சித்தர் பீட சிஷ்யைகளுக்கு அறிவுரைகளை வழங்கியுள்ளார். கொரோனா பெருந்தொற்று அலையில், மக்கள் துள்ளத் துடிக்க உயிரிழந்த காலத்தில், மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள பாரம்பரிய உணவு முறைகளை பின்பற்ற வேண்டும் என்று பங்காரு அடிகளார் வலியுறுத்தினார். இயற்கையைப் போற்றியும், அனுசரித்தும் வாழ வேண்டும்; இல்லாவிட்டால் இயற்கை சீற்றங்கள் ஏற்படும் என்று எச்சரித்தார்.
கம்பு, சோளம், கேழ்வரகு, தினை, வரகு, சாமை ஆகிய சிறு தானியங்களை கஞ்சியாகவும், கூழாகவும் குடிக்க வேண்டும். கைகுத்தல் அரிசியை சாதமாக வடித்து, அதில் தண்ணீர் ஊற்றி மறுநாள்காலையில் சாப்பிட வேண்டும். குடி தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து பானையில் ஊற்றி குடிக்க வேண்டும். இளநீர் பருக வேண்டும். உணவு உண்ட பின் ஒரு வெற்றிலை, சிறிதளவு பாக்கு, சுண்ணாம்பு சேர்த்து சாப்பிடவும். சுண்ணாம்பில் கால்சியம் இருக்கிறது. இயற்கை முறையில் தயார் செய்த அச்சு வெல்லத்தை சாப்பிடலாம் என அறிவுறுத்தினார் பங்காரு அடிகளார்.
சீரான பிராண வாயுவுக்கு நொச்சி இலை, நுணா இலை, தைல இலை ஆகியவற்றுடன் வேப்பிலை சேர்த்து கொதிக்க வைத்து ஆவி பிடிக்க வேண்டும். செடி, மரங்கள் உள்ள பகுதியில் 10 நிமிடம் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும். தினந்தோறும் நல்ல தூக்கம் அவசியம். ஏ.சி, மின்விசிறி முதலியவற்றை தவிர்க்கவும். சாக்லெட், ஐஸ்கிரீம் மற்றும் குளிர்சாதனப் பெட்டியில் வைத்துள்ள பொருட்களை உண்ணக் கூடாது.
சமையலுக்கு பழைய எண்ணெய், கலப்பட எண்ணெயை உபயோகப்படுத்தக் கூடாது. மசாலா மற்றும் அதிக தாளிப்பு உள்ள பொருட்களை சாப்பிடக் கூடாது. பகல் எது, இரவு எது என்று உணர்ந்து வாழ வேண்டும். இரவு முழுவதும் செல்போனில் பேசுவது, தொலைக்காட்சி தொடர்ந்து பார்ப்பது உடல் நலனை பாதிக்கும். கொரோனாவில் இருந்து காப்பாற்ற உடற் பயிற்சி செய்வது, இடைவெளி விட்டு இருப்பது முக்கியம் என கொரோனா தொற்று காலத்தில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், "ஆண்டுகள் மாறலாம், காலங்கள் மாறலாம், பருவங்கள் மட்டும் மாறக் கூடாது. பருவ நிலை மாறும்போது, மழையின்மையும், வெப்பமும் அதிகமாகி விடுகிறது. மெய்ஞானத்தை விட்டு எப்போது, விஞ்ஞானத்திற்கு மாறினோமோ, அப்போதே பருவ நிலை மாறிவிட்டது. விஞ்ஞானத்தால், இயற்கையை கட்டுப்படுத்த முடியாது. இயற்கை நினைத்தால், விஞ்ஞானத்தை கட்டுப்படுத்த முடியும். மெய்ஞானத்தை கடைப்பிடித்து, பெரியவர் சொல்கேட்டு, அவர்கள் ஆசியுடனும் செயல்பட வேண்டும்.
நாம் பாரம்பரிய வாழ்க்கையை விட்டுவிடக்கூடாது. 24 மணி நேரமும் உறங்காமல், 'இதைச் செய்வோம்; அதை செய்வோம்' என, முடிவில் எதையும் செய்வதில்லை.தான தருமங்கள் செய்ய வேண்டும். அன்னதானம் செய்யவேண்டும். நன்றி மறவாமல் இருக்க வேண்டும். அனைவரிடமும் அன்பாக பேச வேண்டும்." என்றும் போதித்தவர் பங்காரு அடிகளார்.












Click it and Unblock the Notifications