மேட்டூர் அணை நீர் மட்டம் மளமளவென சரிவு.. குறுவை சாகுபடி தப்பிக்குமா? கவலையில் டெல்டா விவசாயிகள்

Subscribe to Oneindia Tamil

சேலம்: காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது. அணைக்கு வரும் தண்ணீரின் அளவை விட அதிக அளவு நீர் திறந்து விடப்படுவதால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் மளமளவென குறைந்து வருகிறது. குறுவை சாகுபடி தப்பிக்க வேண்டுமெனில் பருவமழை பெய்ய வேண்டும் என்பது டெல்டா மாவட்ட விவசாயிகளின் வேண்டுதலாக உள்ளது.

மேட்டூர் அணை நீர்மட்டம்: காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது. ஒகேனக்கல் காவிரியில் கடந்த 2 நாட்களாக நீர்வரத்து விநாடிக்கு 800 கன அடியாக இருந்த நிலையில், இன்று காலையும் அதே அளவில் நீடிக்கிறது. அதே சமயம் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து நேற்றைய நிலவரப்படி விநாடிக்கு 223 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 12 ஆயிரம் கன அடியாக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் விநாடிக்கு 10ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது. வரத்தைவிட நீர் திறப்பு அதிகமாக உள்ளதால், அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. நேற்று காலை 87.65 அடியாக இருந்த நிலையில் இன்றைய தினம் 86 அடியாக குறைந்துள்ளது.

Mettur dam water level today: Delta farmers worrying for Mettur dam water level is falling

காவிரி பாசன பகுதி குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. மேட்டூர் அணையில் இருந்து குறித்த காலத்தில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் இந்த ஆண்டு மூன்றரை லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதை மிஞ்சி சாதனை படைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வேளாண்துறை முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது.

மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் கல்லணையை வந்தடைந்து கல்லணையிலிருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணை, கால்வாய் மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு 22 நாட்களும் கல்லணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு 22 நாட்களும் ஆகிவிட்ட நிலையில் கடைமடை பகுதிக்கு தண்ணீர் சென்று சேரவில்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளனா். முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு ஜூன் மாதத்தில் வெப்பம் அதிகரித்திருப்பதும் இதற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது. கிளை வாய்க்கால்களில் தண்ணீர் திறக்கப்பட்ட போதும் அதிலும் கடைமடைக்கு தண்ணீர் சென்று சேரவில்லை என்று விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

மேட்டூர் அணை இந்த ஆண்டு திறக்கப்பட்டபோது நீர்மட்டம் 103.25 அடியாக இருந்தது. மேட்டூர் அணையில் இருந்து காவிரி பாசன பகுதிகளுக்கு 12,000 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று முதல் விநாடிக்கு 10000 கனஅடி நீர் மட்டுமே திறக்கப்படுகிறது. தற்போது நீர்மட்டம் 86 அடியாக உள்ளது. மேட்டூர் அணை திறக்கப்பட்டு 22 நாட்களில் 16 அடி தண்ணீர் குறைந்துள்ளது. இன்னமும் பருவ மழை பெய்வதற்கான அறிகுறிகள் தென்படாத நிலையில் காவிரி பாசன பகுதிகளில் நிலவும் கடுமையான வெப்பம் காரணமாக குறுவை சாகுபடி மேற்கொள்ள அதிக அளவில் தண்ணீர் தேவைப்படுகிறது.

கர்நாடக மாநில காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து அதன் மூலம் அங்குள்ள அணைகளில் தண்ணீர் நிரப்பி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தால் மட்டுமே குறுவை சாகுபடியை நம்பிக்கையோடு எதிர்கொள்ள முடியும் என்று விவசாயிகள் கூறுகின்றனர். கால்வாய் பாசனத்தை மட்டுமே நம்பியுள்ள விவசாயிகள் நாற்றங்காலில் விதைத்து விட்டு மேட்டூர் அணை நீர் இருப்பு நிலவரத்தை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். விதைத்ததை நடவு செய்த பின்னர் போதுமான தண்ணீர் இல்லாமல் போய்விட்டால் என்ன செய்வது என்று கவலைப்படுகின்றனர். நடவு செய்யாமல் விட்டு விடலாமா என்றும் விவசாயிகள் யோசிக்கின்றனர். குறுவைக்கு காப்பீடு இல்லாத நிலை விவசாயிகளை மேலும் கவலையில் ஆழ்த்தி உள்ளது.

காவிரி ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்பு அடிப்படையில் கர்நாடக மாநில அரசு தமிழகத்துக்கு பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் தரவேண்டிய தண்ணீரை வற்புறுத்தி பெறுவதற்கான நடவடிக்கைகளை உறுதியோடு அரசு செய்ய வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே தமிழகத்திற்கு ஜூன் மற்றும் ஜூலை மாதம் வழங்க வேண்டிய தண்ணீரை திறந்து விட கர்நாடகத்தை அறிவுறுத்துமாறு காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு தமிழக அரசின் சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இதே நாளில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 102.95 அடியாக இருந்தது. கடந்த ஆண்டு மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்து வந்த போது ஜூலை 11ஆம் தேதியில் இருந்து நீர்வரத்து கிடுகிடுவென அதிகரித்து 17ஆம் தேதி முழு கொள்ளளவை எட்டியது. அதன்பின்னர் மேட்டூர் அணை மூடப்படும் வரை நீர் மட்டம் 120 அடியாகவே இருந்தது. இந்த ஆண்டும் கடந்த ஆண்டைப்போல வருணபகவான் கருணையால் பெருமழை பெய்தால் மட்டுமே மேட்டூர் அணை நிரம்பும் என்று விவசாயிகள் இறைவனுக்கு வேண்டுகோள் வைக்கத் தொடங்கியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+