பொது மக்கள் முற்றுகை.. அரசு விழாவில் பாதியில் வெளியேறிய அமைச்சர்
தூத்துக்குடி: தங்கள் பகுதியில் அடிப்படை வசதி கேட்டு பொதுமக்கள் அரசு விழாவில் கலந்து கொண்ட அமைச்சரை முற்றுகையிட்டதால் அவர் பாதியிலேயே வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ஓன்றியம் ஆழ்வார்தோப்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இதில் பெரும்பாலானோர் சென்னை கோயம்புத்தூர், ஈரோடு, மும்பை உள்ளிட்ட பகுதிகளில் வியாபாரம் செய்து வருகின்றனர். ஆனால் ஆழ்வார்தோப்பில் பல ஆண்டுகளாக பஸ் வசதி இல்லை. அதுகுறித்து அமைச்சர் சண்முகநாதன் மற்றும் கலெக்டரிடம் பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை.

இந்நிலையில் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.16 லட்சத்தில் கட்டப்பட்ட கலையரங்கத்தின் திறப்பு விழா ஆழ்வார்தோப்பில் நடந்தது. இதில் அமைச்சர் சண்முகநாதன் கலந்து கொண்டு கட்டிடத்தை திறந்து வைத்தார். விழாவில் கலெக்டர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது அடிப்படை வசதி, சுகாதாரம் கேட்டு அமைச்சரை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் முற்றுகையிட்டனர். அவர்கள் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுவதாக கூறிய அவர் விழாவில் பேசாமல் அங்கிருந்து நழுவினார்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ஆழ்வார்தோப்பு பகுதியில் பல மாதங்களாக பஸ் வசதி இல்லை. அமைச்சர், கலெக்டரிடம் மனு கொடுத்தும் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. நாங்கள் வெளியூர் செல்ல வேண்டுமானால் சுமார் 3 கிமீ நடந்து சென்று தான் பஸ் பிடிக்க வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையம் இருந்தும் டாக்டர்கள் வருவதில்லை. இதனால் பேறுகாலத்தில் கர்ப்பிணி பெண்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். பஸ் வசதி இல்லாததால் அடுத்த கட்ட போராட்டத்திற்கு தயாராகி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.


Click it and Unblock the Notifications
