ஜெயக்குமார் சொல்வதிலும் தப்பே இல்லை.. டிரம்ப்பை தவிர எல்லோரையும் வளைத்து வளைத்து சந்திக்கும் கமல்!
சென்னை: கமல்ஹாசன் அமெரிக்க அதிபர் டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜாங் ஆகியோரை சந்திக்கட்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.அவர் சொல்வதும் பாதி உண்மைதான். கிட்டத்தட்ட ஒருவர்விடாமல் வளைத்து வளைத்து சந்தித்துக்கொண்டுதான் உள்ளார் கமல்.
கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்குவதற்கு முன்பிலிருந்தே தமிழக அரசை விமர்சனம் செய்து வருவதும், அதற்கு ஜெயக்குமார் பதிலடி கொடுப்பதும் வழக்கமான ஒன்றாகவே இருந்தது.
அவர் விடாக் கண்டன் என்றால் இவர் கொடாக் கண்டனாக இருக்கிறார். சுவாரஸ்யமான ஒரு வார்த்தைப் போரை தமிழக மக்கள் பார்த்து ரசிக்கிறார்கள். ஆனால் ஜெயக்குமார் சொல்வதிலும் ஒரு குட்டி உண்மை புதைந்திருக்கிறது.

ஒருவர் விடாமல்
கமல்ஹாசன் அரசியலுக்கு வருவதற்கு முன்பிலிருந்தே பலதலைவர்களையும் சந்தித்து வருகிறார். பிணரயி விஜயன், நல்லகண்ணு, சீமான் என ஆரம்பித்த அவர் பின்னர் ரஜினியையும் சந்தித்து பயமுறுத்தினார். அதன் பிறகு கருணாநிதியைச் சந்தித்தார். வரிசையாக தொடர்ந்து சந்தித்து வருகிறார்.

தேசிய அளவில்
தேசிய அளவில் கெஜ்ரிவாலைச் சந்தித்தார். கமலுக்காக கெஜ்ரிவால் மதுரைக்கே கட்சி ஆரம்பிக்கும் விழாவுக்கு வந்திருந்தார். சமீபத்தில் பெங்களூர் சென்று கர்நாடக முதல்வராக குமாரசாமியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்றார். அங்கு வைத்து ராகுல் காந்தி, சோனியா காந்தியை கமல் சந்தித்தார்.

பல்வேறு விஷயங்கள்
இதைத் தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கட்சியின் பதிவிற்காக டெல்லி சென்றார். நேற்று காலை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைச் சந்தித்துப் பேசினார். இதில் பல முக்கிய விஷயங்கள் குறித்து அவர் பேசினார்.

கமல் சந்திப்பு
இன்று கமல்ஹாசன் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியை சந்தித்தார். அவரது உடல்நிலை குறித்து இந்த சந்திப்பில் விவாதிக்க இருக்கிறார். சோனியாவை சந்தித்த பின் கமல் செய்தியாளர் சந்திப்பு நடத்தினார். அப்போது சோனியாவுடன் அரசியல் நிலவரம் குறித்து கமல்ஹாசன் பேசியதாக தெரிகிறது

சந்திக்கட்டும்
இதை வைத்துத்தான் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்டபோது, அவர் தாராளமாக சந்திக்கட்டும்.யாரை வேண்டுமானாலும் சந்திக்கட்டும். அமெரிக்க அதிபர் டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜாங் ஆகியோரையும் சந்திக்கட்டும். தமிழகத்தில் பலம் வாய்ந்த கட்சியாக அதிமுக உள்ளது . அதனால் எங்களுக்கு கவலையில்லை என்றார் அமைச்சர் ஜெயக்குமார்.

ஒருவேளை டிரம்ப்பை சந்திப்பாரோ
ஜெயக்குமார் சொல்வதும் உண்மைதான். டிரம்ப், கிம்மைத் தவிர எல்லோரையும் வரிசையாக சந்தித்துக் கொண்டேதான் இருக்கிறார் கமல். சொல்ல முடியாது, ஜெயக்குமார் சொன்னதை சவாலாக எடுத்துக்கொண்டு டிரம்ப்பைப் போய்ப் பார்த்தாலும் பார்க்கலாம் கமல்.. செய்யக் கூடியவர்தான் இந்த சபாஷ் நாயுடு!












Click it and Unblock the Notifications