வாணியம்பாடியில் பத்திரப்பதிவு செய்ய முடியாமல் தவித்த பெண்.. அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் விளக்கம்
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பத்தாப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி ஈஸ்வரி என்பவர் தனது இடத்தை பத்திரப்பதிவு செய்ய முடியாமல் தவிப்பதாக ஊடகங்களில் பேட்டி அளித்திருந்தார். இந்த செய்தி நேற்று ஊடகங்களில் வெளியான நிலையில், பத்திரப்பதிவு துறையின் அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வனின் கவனத்திற்கு போனது.. அவர் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதுடன், என்ன நடந்தது என்று விளக்கம் அளித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி கச்சேரி சாலையில் உள்ள அரசினர் தோட்டம் வளாகத்தில் அமைந்துள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்வதற்கு ஏராளமானோர் நாள்தோறும் வந்து செல்கின்றனர். இதில் இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக பத்திர பதிவுக்கு செல்லும் ஆவணங்கள் நிலுவையில் வைக்கப்பட்டு ஆவணங்களில் பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தும் அலைக்கழிக்கப்படுவதாகவும், குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பத்தாப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி ஈஸ்வரி (45), என்பவருக்கு சொந்தமான 1300 சதுர அடி கொண்ட இடத்தை கடந்த 2023ம் ஆண்டு வேறொரு நபருக்கு விற்பனை செய்துள்ளார்களாம். இதை தொடர்ந்து ஈஸ்வரி தற்போது அதே நபரிடம் வாங்கிய தொகையை கொடுத்துவிட்டு மீண்டும் அந்த இடத்தை தன்னுடைய பெயருக்கு பத்திரம் செய்வதற்காக கடந்த வாரம் சார்பதிவாளர் அலுவலகம் சென்றுள்ளார்.
ஆனால் சார் பதிவாளர் அலுவலகத்தில் ஆவணங்களில் திருத்தம் செய்ய வேண்டும் என சார்பதிவாளர் ஊழியர்கள் தொடர்ந்து இரண்டு வாரமாக அலைக்கழித்து வருவதாக குற்றம்சாட்டினார். அத்துடன் சார்பதிவாளர் அலுவலகம் நுழைவாயில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் மேலும் சார்பதிவாளர் அலுவலகத்தில் சார்பதிவாளர் சம்மதம் தெரிவித்தாலும் கூட அதற்கு கம்ப்யூட்டர் ஆபரேட்டர் மற்றும் ஹெட் கிளாக் சம்மதம் தெரிவிக்கவில்லை என ஈஸ்வரி குற்றச்சாட்டினார். இதுகுறித்து துறை சார்ந்த உயர் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்தார். இந்த செய்தி நேற்று வெளியான நிலையில், தமிழக பத்திரப்பதிவு மற்றும் வணிக வரித்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செலவன் நடந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார்,
அமைச்சர் லோகேஷ் தமிழ்செலவன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறுகையில், "மே 21, 2026 அன்று, பத்தப்பேட்டை கிராமத்தில் வசிக்கும் திருமதி ஈஸ்வரி அவர்கள், தற்காலிகப் பதிவு எண் TP/275117515/2026-இன் கீழ் ஒரு ஆவணத்தைப் பதிவுக்காகச் சமர்ப்பித்தார். இந்தத் தாக்கல், வாணியம்பாடி கிராமத்தில் உள்ள ஒரு சொத்து தொடர்பானதாகும். அந்தச் சொத்து முதலில் சர்வே எண் 52/1B2-இல் அமைந்திருந்தது; பின்னர் அது 52/1B2B எனப் பிரிக்கப்பட்டது.
முந்தைய உரிமைப் பத்திரமான ஆவண எண் 5876/2023-ஐ ஆய்வு செய்ததில், அந்தச் சொத்து முன்பு திரு. ஏ. மதன் குமாரால் திரு. சி. கார்த்திகேயனுக்கு விற்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இருப்பினும், அதனை உன்னிப்பாக ஆராய்ந்தபோது, மூல ஆவணத்தில் சர்வே எண் 52/1B2-இன் சொத்து விவரங்களில் பிழை இருப்பது கண்டறியப்பட்டது. அதில், 690 சதுர அடி பரப்பளவுள்ள இரண்டு சொத்துக்கள் விற்கப்பட்டதாகத் தவறாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், உண்மையில் அது 690 சதுர அடி பரப்பளவுள்ள ஒரே ஒரு நிலத் துண்டு மட்டுமே ஆகும்.
எனவே, சார் பதிவாளர் அவர்கள், விற்பனையாளரிடம் திருத்தப் பத்திரம் (rectification deed) சமர்ப்பிக்குமாறு கோரியுள்ளார். இந்நிலையில், திருமதி ஈஸ்வரி அவர்களுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கி, உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து அவருடைய பத்திரப் பதிவை நிறைவு செய்து வழங்குமாறு அரசு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன். பத்திரப் பதிவு துறையைப் பொறுத்தவரை, உரிய ஆவணங்களைச் சமர்ப்பிக்கும் பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் இன்றி, தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான அரசு செயல்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்" இவ்வாறு அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் கூறியுள்ளார்.














Click it and Unblock the Notifications