திருச்சியில் உதயநிதி.. 'மனநிறைவாக இருக்கு'.. நெகிழ்ந்து போய் அன்பில் மகேஷை டேக் செய்து ட்வீட்
திருச்சி: திருச்சியில் உள்ள ஒரு மேல்நிலை பள்ளிக்கு திடீரென சென்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், காலை சிற்றுண்டி திட்டத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார். அப்போது காலை உணவை மாணவர்களுடன் சேர்ந்து சாப்பிட்டார். அப்போது மாணவர்கள் அவரிடம் காலை உணவு சிறப்பாக இருப்பதாக கூறியதால் நெகிழ்ந்து போனார்.
விளையாட்டு துறை அமைச்சரும், சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், அடிக்கடி பள்ளிகளுக்கு சென்று காலை உணவு திட்டம் குறித்து ஆய்வு செய்து வருகிறார்கள்.

எந்த மாவட்டத்திற்கு சென்றாலும், அங்கு திடீரென ஏதாவது ஒரு அரசு பள்ளிக்கு செல்வார். அங்கு காலை உணவு திட்டம் எப்படி செயல்படுத்துகிறார்கள் என்பதை நேரடியாக ஆய்வு செய்வார். இப்படி செய்வதை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாடிக்கையாக வைத்துள்ளார்.
அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் பல்வேறு அரசு பணிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார். இன்று காலை திடீரென திருச்சி சையது முர்துஷா மேல்நிலைப் பள்ளிக்கு சென்றார். அங்கு காலை உணவு ரெடியாகிவிட்டதா என்பதை பார்த்த உதயநிதி, சமையல் எப்படி செய்யப்படுகிறது, சமையல் தரம் குறித்து ஆய்வு செய்தார்.
அத்துடன் அங்கு மாணவர்களுடன் காலை உணவை ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டார். அப்போது மாணவர்களிடம் உதயநிதி காலை உணவு எப்படி இருக்கிறது என்று கேட்டார். அதற்கு மாணர்கள் காலை உணவு சிறப்பாக இருப்பதாக கூறியிருக்கிறார்கள. இதைகேட்டு அமைச்சர் உதயநிதி நெகிழ்ந்து போனார்.

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கொண்டு வந்துள்ள இந்த காலை உணவு திட்டம் அரசு பள்ளிகளில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பல ஏழை மாணவர்கள் அரசு பள்ளிகளில் காலை உணவு சாப்பிடுகிறார்கள்.தற்போதைய நிலையில் தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை மற்றும் மதியம் உணவுகள் வழங்கப்படுகின்றன.
இதுதவிர மாணவர்கள் பள்ளிக்கு வந்து படிக்க வேண்டும் என்பதற்காக, இலவச சைக்கிள், புத்தகம், நோட்டுகள் என அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது.12ம் வகுப்பு வரை தமிழ்நாட்டில் இலவசமாக அரசு பள்ளிகளில் கல்வி வழங்கப்படுகிறது. படிக்க வரும் மாணவர்கள் பசியுடன் இருக்கக்கூடாது என்பதற்காகவே காலை மற்றும் மதியம் உணவுகள் வழங்கப்படுகிறது,
இந்நிலையில் திருச்சியில் ஆய்வு செய்தது குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில், "மாணவர்களின் பள்ளி வருகையை அதிகரித்து, உடல்நலத்துடன் கூடிய கல்வியை உறுதி செய்ய, நம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செயல்படுத்தி வரும் கனவு திட்டங்களில் ஒன்றான காலை சிற்றுண்டித் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து, திருச்சி அரசு சையது முர்துஷா மேல்நிலைப் பள்ளியில் இன்று ஆய்வு செய்தோம்.

அங்கு வழங்கப்படும் உணவை மாணவச் செல்வங்களுடன் அமர்ந்து சாப்பிட்ட போது, பள்ளியிலேயே வழங்கப்படும் காலை உணவு சிறப்பாக இருக்கிறது என மாணவர்கள் கூறியது மன நிறைவையும், மகிழ்ச்சியையும் தந்தது. பசி நீக்கி அறிவு புகட்டும் இத்திட்டம் அனைவருக்குமான கல்வியை உறுதி செய்யும்!" இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications