விஜயபாஸ்கர் மட்டும் வாய் திறந்தால்.. பெரும் பதட்டத்தில் அமைச்சர்கள்.. தினகரனிடம் புலம்பித் தவிப்பு!
விஜயபாஸ்கரைப் பொறுத்தவரையில், மற்றவர்களையும் காட்டிக் கொடுப்பதற்கும் அவர் தயங்க மாட்டார் என்ற எண்ணம் அமைச்சர்கள் மத்தியில் வலம் வருகிறது.
சென்னை: வருமான வரித்துறையின் விசாரணையை எதிர்கொண்டு வருகிறார் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். ' ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா முதற்கொண்டு அமைச்சர்களின் அனைத்து பரிவர்த்தனைகளையும் அறிந்தவர் விஜயபாஸ்கர்.
'தங்களைப் பற்றி எதையும் சொல்லிவிடக் கூடாது' என்ற அச்சம் அமைச்சர்களை வாட்டி வருகிறது' என்கின்றனர் தலைமைச் செயலக வட்டாரத்தில்.
ஆர்.கே.நகர் தொகுதியில் அ.தி.மு.க அம்மா அணி சார்பில் பணப்பட்டுவாடா நடப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில், கடந்த 7ம் தேதி சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டது.
இந்த ரெய்டின்போது ரூ.89 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டதற்கான ஆதாரம் உள்பட பல்வேறு ஆவணங்களைக் கைப்பற்றியது வருமான வரித்துறை. கூடவே, எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி, சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் ஆகியோர் வீடுகளிலும் ரெய்டு நடந்தது. நேற்று சரத்குமார் மனைவி ராதிகாவின் ராடான் மீடியா நிறுவனத்திலும் வருமானவரித்துறை சோதனை நடைபெற்றது.

அமைச்சர்களுக்கு உறக்கமில்லை
" விஜயபாஸ்கர் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களுக்கு, உரிய ஆதாரத்தை அளிக்குமாறு அதிகாரிகள் கேட்டுள்ளனர். இதையடுத்து, மூன்று நாட்கள் அவகாசம் கேட்டார். இன்னும் ஓரிரு நாட்களில் வருமானவரித்துறை அலுவலகத்தில் ஆஜராக இருக்கிறார் விஜயபாஸ்கர். நேற்று முன்தினம் அவரிடம் விசாரணை நடத்தப்படுகிறது என்ற செய்தியைப் பார்த்ததில் இருந்து அமைச்சர்கள் பலருக்கு உறக்கமில்லை.

மாட்டிக்கொடுத்தால்
ஏனென்றால், விஜயபாஸ்கரைப் பொறுத்தவரையில், மற்றவர்களையும் காட்டிக் கொடுப்பதற்கும் அவர் தயங்க மாட்டார் என்ற எண்ணம் அமைச்சர்கள் மத்தியில் வலம் வருகிறது. சேகர் ரெட்டி விவகாரம் பெரிதானபோது, கேபினட்டில் கோலோச்சும் ஐந்து அமைச்சர்களை வளைப்பார்கள் என்ற பேச்சு அடிபட்டது. ஆனால், மத்திய அரசு நடவடிக்கைகளை வேகப்படுத்தவில்லை. ' அவர்கள் சொல்வதை நாம் கேட்கிறோம். நம்மிடம் வர மாட்டார்கள்' என அமைச்சர்கள் இயல்பாக இருந்தனர். அதுவே, வினையாகிப் போய்விட்டது.

கணக்கு வழக்கு
ஆர்.கே.நகரைப் பொறுத்தவரையில், ஓ.எஸ்.மணியன், செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன் உள்பட ஒவ்வொரு அமைச்சர்களுக்கும் தலா முப்பதாயிரம் வாக்காளர்கள் வரையில் ஒதுக்கப்பட்டிருந்தனர். இந்த வாக்காளர்களை தொப்பி சின்னத்தை நோக்கிக் கொண்டு வருவதுதான் முக்கிய அசைண்மென்ட். இந்தப் பணிக்காக அமைச்சர்களின் உதவியாளர்கள் உள்பட பலருக்கும் தொகைகளைப் பிரித்து வழங்கியிருந்தனர். இதற்கான கணக்குகளைத்தான் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

யாருக்கு, எவ்வளவு பங்கு
' எந்த அமைச்சர், எப்போது பணத்தை வாங்கினார்?' என்பது குறித்த அனைத்து தகவல்களும் விஜயபாஸ்கருக்குத் தெரியும். ' வரி ஏய்ப்பின் மூலம் பதுக்கப்பட்ட இந்தப் பணத்தை எந்த வகையில் கொண்டு சென்றார்கள்? இந்தப் பணத்தில் எந்தெந்த அமைச்சர்களுக்கு பங்கு இருக்கிறது? கார்டன் கணக்கு எவ்வளவு?' என்ற கணக்கெல்லாம், அவர் மூலமாகத்தான் நடந்து வந்தது.

தினகரன் ஆறுதல்
வருமான வரித்துறை விசாரணையில் இந்த விவரங்கள் சொல்லப்பட்டால், அமைச்சர்கள் பலரும் சிக்குவதற்கு வாய்ப்பு இருக்கிறது. விசாரணை விவரங்களைத் தெரிந்து கொள்ளவும் அவர்கள் அச்சப்படுகின்றனர். ' எதற்கும் பயப்பட வேண்டாம். பார்த்துக் கொள்ளலாம்' என தினகரன் தரப்பில் இருந்து ஆறுதல் மட்டுமே சொல்லப்பட்டிருக்கிறது" என்றார் விரிவாக.












Click it and Unblock the Notifications