ஸ்டாலினின் எதிர்ப்பால் காங். கூட்டணி திட்டத்தையே கைவிட்டது திமுக
சென்னை: காங்கிரஸ்- தேமுதிக உடனான கூட்டணிக்கான அறிகுறியும் இல்லை.. சூழ்நிலையும் இல்லை என்று திமுக தலைவர் கருணாநிதியை அறிவிக்க வைத்தது மு.க. ஸ்டாலினின் திட்டவட்டமான காங்கிரஸ் எதிர்ப்பு நிலைதான் என்று கூறப்படுகிறது.
ஈழத் தமிழர் பிரச்சனையில் மத்திய அரசில் இருந்து வெளியேற வேண்டும்; காங்கிரஸ் கட்சியுடனான உறவை துண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தியவர் மு.க .ஸ்டாலின். அவரது கோரிக்கையை ஏற்றுக் கொண்டதாலேயே மத்திய அரசில் இருந்து திமுகவும் வெளியேறியது.
ஆனால் இதை அப்போதே மு.க. அழகிரி எதிர்த்தார். அதனாலேயே மிக தாமதமாக தனியாக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததுடன் மு.க. ஸ்டாலினை கடுப்பேற்றும் வகையில் காங்கிரஸ் தலைவர்களை தனித்தனியே சந்தித்தும் பேசி வந்தார். இந்த நிலையில் டிசம்பர் மாதம் 15-ந் தேதி திமுக பொதுக் குழுக் கூட்டம் கூட்டப்பட்டது.

பொதுக்குழு பிரகடனம்
அதில் வழக்கம் போல கூட்டணி குறித்த முடிவு எடுக்கும் அதிகாரம், கட்சித் தலைவர் மற்றும் பொதுச்செயலருக்குத்தான் வழங்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட வாய்ப்பிருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் பொதுக்குழுவில் பேசிய ஸ்டாலின் ஆதரவாளர்கள் அத்தனை பேரும் காங்கிரஸுடன் கூட்டணியே கூடாது என்று ஒருமித்த குரலில் வலியுறுத்தினர். இதனால் திமுக பொதுக்குழுவும் முன் எப்போதும் இல்லாத வகையில் 'காங்கிரஸ், பாஜகவுடன்" கூட்டணி கிடையாது என்று பிரகடனம் செய்தது.

ஸ்டாலின் உறுதி
பொதுக்குழு பிரகடனத்தை கெட்டியாகப் பிடித்துக் கொண்ட மு.க. ஸ்டாலின் எந்த சூழலிலும் காங்கிரஸ்- திமுக கூட்டணி வந்துவிடக் கூடாது என்பதில் மிக உறுதியாக இருக்கிறார். இதனாலேயே கனிமொழி முயற்சியால் சென்னை வந்து கருணாநிதியை குலாம்நபி ஆசாத் சந்தித்ததை கூட ஸ்டாலின் விரும்பவில்லை. அதனால்தான் அப்போதும்கூட பொதுக்குழுவில் எடுத்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை.. காங்கிரஸுடன் கூட்டணியே இல்லை என்று திட்டவட்டமாக ஸ்டாலின் கூறினார்.

போராடிய மூவர் அணி
பொதுக்குழு முடிவெடுத்தால் என்ன? நினைத்ததை சாதிப்போம் என்கிற வகையில் ஸ்டாலினுக்கு எதிரான கனிமொழி, தயாநிதி மாறன், அழகிரி தரப்பு காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணிக்கு பகீரத முயற்சிகளை மேற்கொண்டது. இந்த நிலையில்தான் ஸ்பெக்ட்ரம் டேப் வெளியானது.

திருமா- ராகுல் சந்திப்பு
ஸ்பெக்ட்ரம் டேப் வெளியான நிலையில் கனிமொழிதான் ராகுல் காந்தியை சந்திக்குமாறு திருமாவளவனை அனுப்பியதாக கூறப்படுகிறது.. இதனைத் தொடர்ந்துதான் காங்கிரஸ்- திமுக கூட்டணி அமையக் கூடும் என்று செய்திகள் வெளியாகின.

சோனியா- கனிமொழி சந்திப்பு
இதன் உச்சமாக சோனியாவையும் கனிமொழி சந்திக்க திமுக- காங்கிரஸ் கூட்டணி அமைந்துவிட்டது.. வீரப்ப மொய்லி அல்லது அந்தோணி சென்னை வருகிறார்கள் என்று தகவல்கள் ரெக்கை கட்டி பறந்தன.

கொந்தளித்த ஸ்டாலின்
இப்படியான செய்திகள் வெளியானதை மு.க. ஸ்டாலின் சகிக்கவில்லை.. காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியே கிடையாது என்று பொதுக்குழு முடிவெடுத்த பின்னர் அந்த முடிவை மீறி எப்படி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைப்பீர்கள்? என்ன சொல்லி காங்கிரஸ் கட்சிக்கு வாக்கு கேட்பீர்கள்? தேர்தல் பிரசாரத்துக்கு மாநிலம் முழுவதும் செல்வது நானல்லவா? எதைச் சொல்லி வாக்கு கேட்க முடியும்? என்று ஸ்டாலின் மிகவும் கொந்தளித்துள்ளார்.

பிரசாரத்துக்கு போக முடியாது
திமுக- காங்கிரஸ் கூட்டணி அமைந்தால் அந்த கூட்டணிக்கு காரணமானவர்களை வைத்தே தேர்தல் பிரசாரம் செய்யுங்கள்.. என்னைவிட்டு விடுங்கள் என்றும் ஸ்டாலின் எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது.

கருணாநிதி முற்றுப்புள்ளி
ஸ்டாலினின் இந்த யதார்த்தமான கோபத்தை புரிந்து கொண்டவராகத்தான் கருணாநிதியும், திமுக- காங்கிரஸ் கூட்டணிக்கான சூழ்நிலையோ அறிகுறியோ இல்லை என்று கூறி அந்த பேச்சுகளுக்கே முற்றுப் புள்ளி வைத்துவிட்டார் என்கின்றன அறிவாலய வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications