• search

காவிரி: தமிழக அமைச்சரவையைக் கூட்டி பிரதமரைக் கண்டிக்க ஸ்டாலின் வலியுறுத்தல்

By Mathi
FOLLOW ONEINDIA TAMIL ON
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
   காவிரி விவகாரம் தொடர்பாக திமுக அவசர செயற்குழு கூட்டம்!

   சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததால் தமிழக அமைச்சரவையைக் கூட்டி பிரதமர் மோடிக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

   இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கை:

   காவிரி மேலாண்மை வாரியத்தை உச்ச நீதிமன்றம் அறிவித்த ஆறுவார காலக்கெடுவிற்குள் அமைக்காமல், மத்திய பா.ஜ.க. அரசு தமிழ்நாட்டிற்கு மாபெரும் துரோகம் இழைத்துவிட்டது. அந்த மத்திய பா.ஜ.க. அரசின் கண் அசைவுக்கு ஏற்ப, பாராளுமன்றத்தில் ஒரு "கண்ணாமூச்சி" கண்துடைப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தி, இங்குள்ள அதிமுக அரசும் மத்திய பா.ஜ.க. அரசுக்கு அழுத்தம் கொடுக்காமல், தமிழ்நாட்டிற்கு இரட்டிப்புத் துரோகம் செய்துவிட்டது.

   தீர்ப்பு வெளிவந்த சில தினங்களிலேயே, "ஆறுவார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியாது", என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கூறியதை, அதிமுக அரசு வாய்மூடி மவுனியாக வேடிக்கை பார்த்தது. "காவிரி மேலாண்மை வாரியம் என்ற வார்த்தை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் இல்லை", என்று மத்திய நீர் வளத்துறை செயலாளரே பச்சைப்பொய் சொன்னபோதும், அதை இங்குள்ள அதிமுக அரசு தட்டிக் கேட்கவில்லை. "அமைச்சரும், செயலாளரும் ஏன் உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு முரணாகப் பேசுகிறார்கள்?", என்று கேள்வி எழுப்பி எதிர்ப்புத் தெரிவிக்க துணிச்சலின்றி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தூங்கிக் கொண்டிருந்தார்.

   கொட்டி கவிழ்த்த அதிமுக அரசு

   கொட்டி கவிழ்த்த அதிமுக அரசு

   வேண்டா வெறுப்பாக ஒரு அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்டினாலும், பிரதான எதிர் கட்சி என்றமுறையில் தி.மு.க. ஏற்படுத்திக் கொடுத்த "தமிழக ஒற்றுமையை" அதிமுக அரசு கொட்டிக் கவிழ்த்துவிட்டது. அனைத்து கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட மூன்று தீர்மானங்களை நிறைவேற்ற முடியாமல் படுதோல்வி அடைந்துவிட்டது இந்த அரசு. பிரதமரை சந்திக்க அனைத்து கட்சி குழுவினை அழைத்துச் செல்ல வேண்டும் என்ற தீர்மானத்தை பிசுபிசுக்க வைக்கும் வகையில், முதலமைச்சரிடம், "நீர் வளத்துறை அமைச்சரை சந்தியுங்கள்", என்று பிரதமர் கூறிய பிறகும்கூட, அமைச்சர் சந்திப்பிற்காக காத்திருந்து, பிறகு அதுவும் இல்லை என்றநிலையில் அதிகாரிகள் கூட்டத்துடன் கலைந்து விட்டது.

   இளிச்சவாயன் என நினைப்பு

   இளிச்சவாயன் என நினைப்பு

   காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அழுத்தம் கொடுப்பதில், அதிமுக அரசின் ஏனோதானோ என்ற முயற்சி, நெஞ்சில் வேதனைத் தீ போல் பாய்கிறது. சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சிறப்புத் தீர்மானத்தினைக் கூட நிறைவேற்றி வைக்க மத்திய பா.ஜ.க. அரசுக்கு அழுத்தம் கொடுக்க வக்கில்லாத இந்த அரசின் அமைச்சர்கள், "காலக்கெடு முடிந்த பிறகே, அடுத்தகட்ட முடிவு எடுக்க முடியும்", என்று தாமதப்படுத்தும் வகையில் ஏதேதோ பேசிக்கொண்டிருக்க, "காவிரி மேலாண்மை வாரியம் உச்ச நீதிமன்ற காலக்கெடுவிற்குள் அமைக்கப்படும்", என்று பா.ஜ.க.வின் மாநில தலைவர்களும் பேசி, தமிழக மக்களை நம்பவைத்து கழுத்தறுத்து இருப்பது, "இளிச்சவாயன் தமிழன். அவனை என்ன வேண்டுமானாலும் சொல்லி ஏமாற்றலாம்", என்ற மேலாதிக்கப்போக்கை வெளிப்படுத்துகிறது.

   மத்திய அரசை கண்டிக்க திராணி இல்லை

   மத்திய அரசை கண்டிக்க திராணி இல்லை

   இன்னும் கூட, "நாங்கள்தான் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்போம்", என்று மாநில பா.ஜ.க. தலைவர்கள் மக்களை ஏமாற்றி வருவதைக் கொஞ்சமும் சகித்துக்கொள்ள முடியவில்லை. உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கடைசி நாள் நேற்றுடன் முடிந்தது. தமிழகமே பதற்றத்துடன் ஒவ்வொரு நிமிடத்தையும் எண்ணிக் கொண்டிருந்தது. ஆனால், பிரதமர் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதித்து, காவிரி மேலாண்மை வாரியம் குறித்து ஒரு ஆலோசனை கூட நடத்தப்படவில்லை. தமிழ்நாட்டு முதலமைச்சருக்கோ, அமைச்சரவையைக் கூட்டி உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறிவிட்ட மத்திய அரசைக் கண்டித்து ஒரு தீர்மானத்தைக் கூட நிறைவேற்றத் திராணியில்லை.

   அப்போதே அவமதிப்பு வழக்கு

   அப்போதே அவமதிப்பு வழக்கு

   மத்திய பா.ஜ.க. அரசு உச்ச நீதிமன்ற தீர்ப்பையே அலட்சியப்படுத்தி, ஆணவப்போக்கில் செயல்படுகிறது என்றால், மாநிலத்தில் உள்ள அதிமுக அரசோ மத்திய அரசைத் தட்டிக்கேட்க முடியாமல், அடிமை அரசாகக் காலம் கழிக்கிறது. இந்த ஆணவத்தனத்திற்கும், அடிமைத்தனத்திற்கும் இடையில் காவிரி மேலாண்மை வாரியம் மாட்டிக் கொண்டு தவிக்கிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக மத்திய நீர் வளத்துறை அமைச்சரும், மத்திய நீர்வளத்துறைச் செயலாளரும் பேசிய நேரத்திலேயே அதிமுக அரசு உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தால், இந்நேரம் காவிரி மேலாண்மை வாரியம் நிச்சயம் அமைந்திருக்கும். ஆனால், முதல் முறையாக அல்ல, இரண்டு முறை உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விஷயத்தில் மத்திய பா.ஜ.க. அரசும், அதிமுக அரசும் "இணை பிரியாத கூட்டாளிகளாக" செயல்பட்டு, தமிழ்நாட்டிற்கு துரோகத்தை இழைத்து இருப்பதற்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

   பிரதமர் மோடியை கண்டிக்க வேண்டும்

   பிரதமர் மோடியை கண்டிக்க வேண்டும்

   இப்போதாவது தமிழக அமைச்சரவையை உடனடியாக கூட்டி, உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறியிருக்கின்ற மத்திய அரசையும், காவிரி மேலாண்மை வாரியம் குறித்து வாயே திறக்காத பிரதமரையும் கண்டித்து கண்டனத் தீர்மானத்தை நிறைவேற்றிட வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கேட்டுக் கொள்கிறேன். உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தும் அதேவேளையில், ஊழல் வழக்குகளில் இருந்து தப்பிக்கவேண்டும் என்ற ஒரே நோக்கத்தில், தமிழ்நாட்டு உரிமைகளை காவு கொடுத்துவிட்டு, பா.ஜ.க.விற்கு கர்நாடக தேர்தல் லாபத்தை ஏற்படுத்தி, எல்லா வகையிலும் உதவுவதற்காக மட்டும் "ஓவர் டைம்" உழைப்பதை கைவிட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

   இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

   பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

   English summary
   DMK Working President MK Stalin has condemned to Centre and Tamilnadu govt on the Cauvery Management Board issue.

   நாள் முழுவதும் oneindia
   செய்திகளை உடனுக்குடன் பெற

   We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more