தாஜ்மகாலை கட்டுனது யார்.. ஜெயலலிதா: இது மு.க. ஸ்டாலின் பேச்சு
ராமநாதபுரம்: நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசும் போது நகைச்சுவை உணர்வோடு பேசுவது தொண்டர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழகத்தில் திமுக பொதுக் கூட்டம், திமுக தலைவர் கருணாநிதி பேசுகின்றார் என்றால் அக்கட்சி நிர்வாகிகள் மட்டும் அல்லாது மற்ற கட்சி நிர்வாகிகளும், ஏன் தொண்டர்களும் அந்த கூட்டத்திற்கு சென்று அங்கு அவர்கள் என்ன பேசுகின்றார்கள் என்று பார்ப்பது உண்டு.
வெற்றி கொண்டான், தீப்பொறி ஆறுமுகம் ஆகியோர் மேடை ஏறிவிட்டால் திமுகவின் எதிரிகளை நாலா திசைகளில் வார்த்தை விளையாட்டுகளில் போட்டு பந்தாடிவிடுவர். அவர்கள் பேச்சு கடும் ஆபாசம் நிறைந்ததாக இருந்தாலும் திமுக தலைமை அவர்களை கண்டும் காணாமலே இருந்து வந்தது.

ஆனால் அவர்களுக்கு எதிர்மறையாக மிகவும் நாகரிகத்தடன், பழைய நினைவுகளோடும், பெரியார், அண்ணா பேச்சுகளை மையப்படுத்தியும் பேசி கூட்டத்தினரை கலகலப்பாக வைத்திருப்பவர் திமுக தலைவர் கருணாநிதி. மேலும், அரசியல் சிலேடை பேச்சுகளால் எதிர்க்கட்சியினரை உண்டு இல்லை என செய்துவிடும் மாய சக்தி படைத்தவர் கருணாநிதி.
ஆனால் கருணாநிதியின் வாரிசுகளான மு.க.ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி, எம்.பி. கனிமொழி ஆகியோரால் தங்களின் தந்தையை போன்று இலக்கிய நடையில் பேச முடியவில்லை.
குறிப்பாக, திமுகவின் அடுத்த வாரிசு என்று சுட்டிக் காட்டப்பட்ட மு.க.ஸ்டாலின் பேச்சும் இதுவரை சுமார் ரகம் என்ற அளவிலேயே இருந்து வந்தது.
ஆனால், தற்போது திமுக வேட்பாளர்களை ஆதரித்து மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுக்க சுற்றுப் பயணம் செய்து வருகின்றார். அப்போது பல இடங்களில் திமுக வேட்பாளர்களை ஆதிரித்து பேசும் போது தனது தந்தை கருணாநிதியின் பாணியை கையாண்டு வருகின்றார். புள்ளி விவரங்கள், முந்தைய நிகழ்வு, அரசியல் நையாண்டி, திமுகவின் சாதனை என பல முகங்களை மிகவும் லாவகமாக எடுத்து வைக்கின்றார்.
குறிப்பாக, மு.க.ஸ்டாலின் ராமநாதபுரத்தில் பேசும் போது ராமநாதபுரம் கூட்டு குடி நீர் திட்டம் கொண்டு வந்தது திமுக அரசு தான். அதற்கு கருணாநிதி தான் காரணம். திருச்சி முக்கொம்பில் இருந்து காவிரி நீரை ராமநாதபுரத்திற்கு பல கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் கொண்டு வந்தோம். இதற்கான திட்ட மதிப்பீடு, துவக்கவிழா நிகழ்ச்சி போன்றவைகளின் புகைப்பட ஆதாரம், வீடியோ ஆதாரம் ஆகியவை என்னிடம் உள்ளது.
ஆனால், இங்கே கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்த முதல்வர் ஜெயலலிதா ராமநாதபுரம் கூட்டு குடி நீர் திட்டம் கொண்டு வந்தது நான் தான் என பேசியுள்ளார். மன்னிக்கவும் படித்துள்ளார்.
விட்டால், தாஜ்மஹாலே நான் தான் கட்டினேன் என கூறினாலும் கூறுவார். ஏன் இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்ததே நான் தான் என கூறுனாலும் கூறுவார், ஏன் சுதந்திர இந்தியாவின் முதல் பிரமதர் நேருவை பிரதமர் ஆக்கியதே நான் தான் என கூறுவார் என நக்கல் நையாண்டி கலந்து பேசினார்.
மேலும், முதல்வர் ஜெயலலிதாவிற்கு மு.க.ஸ்டாலின் விடும் சவால் பேச்சு தொண்டர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. திமுக தலைவர் கருணாநிதி அளவு மேடைப் பேச்சு இல்லை என்றாலும் அந்த உயரத்தை எட்டிப்பிடிக்க மு.க.ஸ்டாலின் முயன்று வருவதை இந்த பேச்சுக்கள் உணர்த்தி வருகின்றது.












Click it and Unblock the Notifications