'அண்ணனுக்கு ஸ்ட்ராங்கா ஒரு டீ....' 'நமக்கு நாமே' பாணியில் களைகட்டிய முக ஸ்டாலின் பிரசாரம்
பெரம்பலூர்: சட்டசபை தேர்தலுக்காக மேடைகளில் பேசிவந்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் இன்று திடீரென பெரம்பலூரில் 'நமக்கு நாமே' பாணியில் வீதிகளில் இறங்கி வாக்கு சேகரிக்க பிரசாரம் களைகட்டியது.
திமுக வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்து வருகிறார் மு.க.ஸ்டாலின். மேடைகளில் ஏறியும் வேனில் நின்றபடியுமான வழக்கமான பிரசார பாணியைத்தான் ஸ்டாலின் கடைபிடித்து வந்தார்.
பெரம்பலூரில் இன்று பிரசாரம் செய்த மு.க.ஸ்டாலின் திடீரென வீதிகளில் இறங்கி நடந்தபடியே வாக்கு சேகரித்தார். இதனை சற்றும் எதிர்பாராத பொதுமக்கள் ஆராவாரம் செய்தனர். தொண்டர்களும் உற்சாகமடைந்தனர்.

டீ கடை விஜயம்
பின்னர் தம்முடைய நமக்கு நாமே பாணியில் டீ கடைக்கு சென்று அமர்ந்து வேட்பாளர்களுடன் ஹாயா ஒரு டீ சாப்பிட்டு கொண்டே வாக்கு சேகரித்தார். அதேபோல் ஷேர் ஆட்டோக்களில் பயணித்தவர்களிடமும் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

ஆரத்தழுவிய பெரியவர்கள்
சில இஸ்லாமிய பெரியவர்கள் ஸ்டாலினை ஆரத் தழுவி அன்பை வெளிப்படுத்தினர். ஸ்டாலினின் வேக நடைக்கு ஈடுகொடுக்க முடியாமல் திமுக வேட்பாளர்கள் ரொம்பவே திணறித்தான் போனார்கள்.

அதிர்ச்சியான ஸ்டாலின்
இதன் பின்னர் பொதுக்கூட்ட மேடை ஏறிய ஸ்டாலினை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் திமுக தொண்டர் ஒருவர் மிக உயரமான மரத்தில் ஏறி பிரமாண்ட திமுக கொடியை பறக்கவிட்டுக் கொண்டிருந்தார். அதைப் பார்த்த ஸ்டாலின், அந்த தோழருக்கு அனைவரும் வாழ்த்துகளை தெரிவியுங்கள்.. நீங்களும் உடனே கீழே இறங்கி வந்துவிடுங்கள்; அப்போதுதான் நான் பேசத் தொடங்குவேன் என்று கூறினார். பின்னர் அந்த தொண்டரும் கீழே இறங்கிவிட்டார்.

ஜெ.க்கு பதிலடி
இக்கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், திமுக தேர்தல் அறிக்கையில் பூரண மதுவிலக்கு என்ற வார்த்தையே இல்லையே என ஜெயலலிதா கேள்வி எழுப்பியிருக்கிறார். மதுவிலக்கு சட்டம் கொண்டுவருவோம் என்றாலே பூரண மதுவிலக்கு என்றுதான் அர்த்தம் என பதிலளித்தார்.












Click it and Unblock the Notifications