இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் குடிநீரை விற்கும் அவலம் உள்ளது: மு.க.ஸ்டாலின்
திருவள்ளூர்: குடிநீரை மக்களுக்கு இலவசமாக வழங்காமல், விற்கக்கூடிய அவலம் இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் உள்ளது என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார். செம்பரம்பாக்கம் ஏரியை திறந்து மக்கள் வசிக்கும் பகுதியில் வெள்ளத்தை திருப்பி விட்டார் ஜெயலலிதா என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
அரசியல் களம் பரபரப்படைந்துள்ள இந்த சூழ்நிலையில் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார் மு.க.ஸ்டாலின். திருவள்ளூர் தொகுதி திமுக வேட்பாளர் வி.ஜி.ராஜேந்திரன், திருத்தணி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஏ.ஜி.சிதம்பரம் ஆகியோரை ஆதரித்து திருவள்ளூரில் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.
திருவள்ளூரின் மையப்பகுதியான திருத்தணி நெடுஞ்சாலை தொடக்கத்தில் உள்ள காமராஜர் சிலை அருகே இப்பிரசாரம் நடைபெற்றது. பிரசாரத்தின்போது அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
தினசரி போக்குவரத்து நெரிசலை சீராக்கும் காவல் துறையினர், இந்தப் பிரசாரத்தின்போது போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையில் பிரசாரம் மேற்கொள்ள ஏற்பாடு செய்யவில்லை என காவல் துறையினர் மீது அதிருப்தி அடைந்தனர்.

கொடுமைகள் அனுபவித்தோம்
கும்மிடிப்பூண்டி சட்டசபைத் தொகுதி மக்கள் தேமுதிக வேட்பாளர் சி.எச்.சேகரை ஆதரித்து கும்மிடிப்பூண்டியில் சனிக்கிழமை பிரச்சாரம் செய்த மு.க.ஸ்டாலின், கடந்த 5ஆண்டுகளாக தமிழக சட்டசபையில் நானும், கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ சி.எச்.சேகரும் பல கொடுமைகளை அனுபவித்தோம்.
என்றார்.

சொல்லாததை செய்த ஜெ
தமிழக முதல்வர் தான் சொல்லாததையும் செய்துள்ளோம் என்கிறார். ஆம், அவர் சொல்லாததையும் செய்துள்ளார். அது வீதிக்கு வீதி டாஸ்மாக் கடைகளைத் திறந்ததும், செம்பரம்பாக்கம் ஏரியை திறந்து மக்கள் வசிக்கும் பகுதியில் வெள்ளத்தை திருப்பி விட்டதும் மட்டுமே ஆகும்.

திமுக தேர்தல் அறிக்கை
தற்போதைய திமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி, ஆவின் பால் விலை 7 ரூபாய் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரிதும் பயனடைவர். அதுபோல் 2 மாதத்துக்கு ஒரு முறை மின்சார யூனிட் அளவுப்படி அதிக மின் கட்டணம் செலுத்தி வந்த மக்கள் இனி மாதத்துக்கு ஒருமுறை மின் கட்டணம் செலுத்துவதால் அவர்களுக்கு 200 ரூபாய் முதல் 2,000ஆயிரம் ரூபாய் வரை மின் கட்டணம் குறைய உள்ளது.

குடிநீர் விற்பனை
கடந்த 5 ஆண்டு அதிமுக ஆட்சியில் தாமரைப்பாக்கம் கூட்டுச் சாலையில் பேருந்து நிலையம் அமைக்கப்படுவது, அனைவருக்கும் 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவது போன்ற அதிமுகவின் தேர்தல் அறிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. குடிநீரை இலவசமாக தருவோம் என்று அறிவித்து, கும்மிடிப்பூண்டியில் செயல்படும் அம்மா குடிநீர் தொழிற்சாலை மூலம் 10 ரூபாய்க்கு குடிநீர் விற்கப்படுகிறது. குடிநீரை விற்கும் மாநிலம் இந்தியாவிலேயே தமிழ்நாடு மட்டுமே என்றார்.

எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை
பொன்னேரி (தனி) சட்டசபைத் தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் கே.பரிமளத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்த மு.க.ஸ்டாலின்,
மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் திமுக எம்எல்ஏக்கள் சரியாக மக்கள் பணி ஆற்றவில்லை எனில் அவர்கள் மீது, கருணாநிதியின் அனுமதியுடன் நான் உடனடியாக நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

வண்டலூர் பேருந்து நிலையம்
செங்கல்பட்டு தொகுதி திமுக வேட்பாளர் வரலட்சுமி மதுசூதனனை ஆதரித்து கூடுவாஞ்சேரி பகுதியில் சனிக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட ஸ்டாலின், சென்னையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைச் சமாளிக்க வண்டலூரில் புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்படும், என்று ஜெயலலிதா உறுதியளித்தார். ஆனால், செய்தாரா? என்று கேட்டார்.

பாலாறு குடிநீர்
திமுக ஆட்சிக்கு வந்தால், வண்டலூர் அருகே துணை நகரம் அமைக்கப்படும். புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்படும். காட்டாங்கொளத்தூர், சிங்கப்பெருமாள் கோயில், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி ஆகிய பகுதி மக்களுக்கு பாலாற்றில் இருந்து குடிநீர் வசதி செய்து தரப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications