கூர்க் ரிசார்ட்டில் இருந்து எஸ்கேப்பான பழனியப்பன் இனி ரிலாஸ்க்... கிடைத்தது முன்ஜாமீன்!
தினகரன் ஆதரவு எம்எல்ஏவான பழனியப்பனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது.
சென்னை: தினகரன் ஆதரவு எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான பழனியப்பனுக்கு முன்ஜாமீன் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாமக்கல்லை சேர்ந்த ஒப்பந்ததாரர் சுப்பிரமணியம். இவர் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் ஆதரவாளர் ஆவார். இதனால் மருத்துவம் தொடர்பான அரசு ஒப்பந்தங்கள் சுப்பிரமணியத்துக்கு கிடைத்தது.
இந்நிலையில் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகித்ததாக அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அதேவேளையில் சுப்பிரமணியத்தின் வீட்டிலும் ரெய்டு நடந்தது.

தற்கொலை
இந்நிலையில் நாமக்கல்லில் உள்ள பண்ணை வீட்டில் சுப்பிரமணியன் தற்கொலை செய்து கொண்டார். அப்போது அவர் அருகே இருந்த கடிதத்தையும் போலீஸார் கைப்பற்றினர். இருப்பினும் சுப்பிரமணியன் மரணத்தில் சந்தேகம் எழுந்ததால் சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

சிபிசிஐடி சம்மன்
சுப்பிரமணியன் எழுதி வைத்த தற்கொலை கடிதத்தில் எம்எல்ஏ பழனியப்பனின் பெயரும் இடம்பெற்றிருந்தது. இதனால் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. தற்போது மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று பழனியப்பனுக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியது.

கூர்க் சென்ற போலீஸ்
எனினும் அவர் கூர்க் ரிசார்டில் இருந்ததால் அங்கு சென்ற சிபிசிஐடி போலீஸார் பழனியப்பனை கைது செய்யக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி பழனியப்பன் கடந்த 13-ஆம் தேதி மனு தாக்கல் செய்தார்.

முன்ஜாமீன்
அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, சுப்பிரமணியன் தற்கொலை கடிதம் கிடைத்த பிறகும் அது ஏன் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது?. சிபிசிஐடிக்கு இந்த வழக்கை தவிர வேறு வழக்கு இல்லையா? என்று சரமாரியாக கேள்விகளை எழுப்பிவிட்டு பழனியப்பனுக்கு முன்ஜாமீன் வழங்கினார்.

வைப்புத் தொகை
அதில் இருநபர் உத்தரவாதமும், ரூ.10,000 வைப்புத் தொகையும் வழங்க வேண்டும் செலுத்தவும் ஆணை பிறப்பித்துள்ளார். மற்றொரு கான்டிராக்டர் தென்னரசுவுக்கும் முன்ஜாமீன் வழங்கப்பட்டது.












Click it and Unblock the Notifications