ஆம்பூர் மக்களின் அன்னை தெரேசா.. மிஸ்ஸியம்மா மறைவால் சோகத்தில் மூழ்கிய கிராமங்கள்
திருப்பத்தூர்: ஆம்பூர் மக்களின் ஆரோக்கிய வாழ்க்கைக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட மிஸ்ஸியம்மாவின் பிரிவை தாங்க முடியாமல் பல கிராமங்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளன.
ஆம்பூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள அடித்தட்டு மக்களை ஆழ்ந்த துயரத்தில் தள்ளியிருக்கிறது மிஸ்ஸியம்மாவின் பிரிவு. பலரும் தங்கள் குடும்பத்தில் ஒருவரை இழந்துவிட்ட கவலையில் சிக்கத் தவிக்கின்றனர். யார் இந்த மிஸ்ஸியம்மா? அவரை ஏன் இந்த ஊர் மக்கள் இந்தளவுக்கு நேசித்தனர்?

ஆம்பூர் பகுதி மக்களின் 'அன்னை தெரேசா’ தான் இந்த மிஸ்ஸியம்மா. இவரது உண்மையான பெயர் அலிஸ் பிராயர். இவர் ஒரு அமெரிக்கப்பெண்மணி. இந்தியாவிலுள்ள ஏழை மக்களுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டு சேவை செய்வதற்காகவே இந்தியா வந்த அவர், தமிழ்நாட்டில் மிகவும் பின் தங்கி இருந்த ஆம்பூரை தேர்வு சேர்ந்து அங்கேயே தங்கினார்.
இந்தியா எவாஞ்சலிகல் லூத்தரன் சர்ச் மூலம் ஏழை எளிய மக்களைத் தாக்கி வந்த கொள்ளை நோயான, காலரா, அம்மை, போலியோ, குறைப் பிரசவம் ஆகிய நோய்களை ஒழிக்க இவரே ஜீப்பை ஓட்டிக் கொண்டு ஊர் ஊராகச் சாலை வசதிகள் கூட இல்லாத மண் பாதைகள் வழியே பயணித்து மக்களின் நலனின் ஈடுபட்டார்.
இப்படிக் கடந்த 50 ஆண்டுகாலமாகச் சேவை செய்துவந்த இந்த அன்னை 87வயதில் தனது மக்கள் பணியை முடித்துக் கொண்டு இந்த உலகைவிட்டுப் பிரிந்து சென்றிருக்கிறார். ஆகவேதான் இந்த அமெரிக்க அன்னையைத் திருப்பத்தூர் மற்றும் ஆம்பூர் சுற்று வட்டார மக்கள் அன்புடன் 'மிஸ்ஸியம்மா’ என்று அன்பாக அழைத்து ஆறுதல் அடைந்தனர். தமிழ்நாட்டில் சேவை செய்வதற்காக இந்தியா வந்த மிஸ்ஸியம்மா திரும்பத் தனது சொந்த நாடான அமெரிக்காவுக்கு திரும்பவே இல்லை. 75 வயதான அவர், ஆம்பூரில் உள்ள பெதஸ்தா மருத்துவமனையில் தனியாகப் பகுதி நேரமாகச் சேவை செய்து வருகிறார்.
இவரது தந்தை ரிச்சர் ஹென்றி 1925 ஆம் ஆண்டுக்கு முன்னதாக கப்பல் மார்க்கமாகப் பயணித்து நாகர்கோவிலில் குடியேறினார். இவருக்கு 4ஆவது குழந்தையாக 1938இல் நாகர்கோவிலில் பிறந்தார் ஆலிஸ். இளம்வயதில் கொடைக்கானலில் பள்ளிக்கல்வியைப் பெற்றார். இவர் டாக்டர் படிக்க வேண்டும் என்பதற்காக மீண்டும் அமெரிக்கா திரும்பியது இவரது குடும்பம்.
மாணவியாக அமெரிக்காவுக்குச் சென்ற இவர், மறுபடியும் 1968இல் இந்தியாவுக்கு வந்தார். அது தமிழ்நாட்டு மக்களுடன் அவர் எந்தளவுக்கு ரத்தமும் சதையுமாக இருந்தார் என்பதை உணர்வுப்பூர்வமாக உணர்த்தியது. ஒரு நாள் கூட ஓய்வு இல்லாமல் தள்ளாத வயதிலும் ஜீப் எடுத்துக் கொண்டு வலம் வந்த இந்த வசந்த மகள் கடந்த 2017ஆம் ஆண்டு உடல் ரீதியாக பெரும் தடையைச் சந்தித்தார்.
ஆடி, ஓடி வேலை செய்தவர் அவர் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி சேவையை தொடர வேண்டி இருந்தது. மிஸ்ஸியம்மாவின் இறுதிக் காலங்களில் அவருக்கு ஓட்டுநராகவும் உதவியாளராகவும் இருந்த 47 வயது நிரம்பிய ஜான் கவாஸ்கர், “மிஸ்ஸியம்மாவின் மரணம் எங்கள் வாழ்க்கையில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்திவிட்டது” என்று கண்கலங்கியபடி சொல்கிறார்.
மிஸ்ஸியம்மாவுக்கு 75 வயது இருக்கும் போது அவர் ஒரு பேட்டி அளித்திருந்தார். அதில், “கடந்த 40 வருடங்களுக்குப் பின் இந்தியா பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. நான் 45 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவைவிட்டு இந்தியாவுக்குக் குடியேறினேன். நான் என் பணிகளைச் செய்ய ஆம்பூரைத் தேர்வு செய்தேன். அந்த ஊர் நான்கு முனையங்களைக் கொண்டுள்ளது.
ஒரு சாலை வழியாகப் பெங்களூருக்குப் போகலாம். மற்றொரு பாதை சென்னையுடன் இணைந்துள்ளது. ஆம்பூரைச் சுற்றியுள்ள வட்டாரங்களில் போலியோ தடுப்பு ஊசி போடுவது, குடும்பக் கட்டுப்பாட்டைப் பற்றி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது எனப் பல சேவைகளைச் செய்தேன். மேலும் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளை அடையாளம் கண்டு அவர்களின் உடல்நலத்தை மேம்படுத்தும் பணிகளைச் செய்தேன்” என விளக்கம் அளித்திருந்தார்.
எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல், ஏழை மக்களின் முன்னேற்றம் ஒன்று தன் லட்சியம் என வாழ்ந்து வந்த இவர் ஆம்பூர் வட்டார மக்களுக்கு வேண்டுமானால் மிஸ்ஸியம்மாவாக இருக்கலாம். இந்தியாவைப் பொறுத்தவரை இவர் வெளிச்சத்திற்கு இன்னொரு அன்னை தெரேசாதான்.












Click it and Unblock the Notifications