வரிவசூல் செய்யப்போன இடத்தில்.. குளித்து கொண்டிருந்த பெண்ணை வீடியோ எடுத்த நகராட்சி அதிகாரி சஸ்பெண்ட்
தென்காசி: தென்காசி மாவட்டம், செங்கோட்டை நகராட்சியில் வரி வசூல் செய்யப்போன இடத்தில் வீட்டில் குளித்துக் கொண்டிருந்த பெண்ணை செல்போனில் வீடியோ எடுத்த நகராட்சி அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லை, பாலியல் சீண்டல், பாலியல் வன்கொடுமை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குழந்தைகள் முதல் மூதாட்டிகள் வரை பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாள்தோறும் அரங்கேறி வருகின்றன. வீடு, பள்ளிகள், கல்லூரிகள், பொது இடங்கள் என அனைத்துப் பகுதிகளும் பெண்களுக்கு பாதுகாப்பற்றதாக மாறி வருகிறது.

இந்நிலையில், தென்காசி மாவட்டம், செங்கோட்டை நகராட்சியில் வரி வசூல் செய்யப்போன இடத்தில் வீட்டில் குளித்துக் கொண்டிருந்த பெண்ணை நகராட்சி அதிகாரி செல்போனில் வீடியோ எடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம், செங்கோட்டை நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் உள்ள வீடுகளில் வரி வசூல் செய்யும் பணிகளை நகராட்சி ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர். நகராட்சி வரி வசூல் பணி மேற்பார்வையாளராக ஓவர்சீயர் அனந்தராமகிருஷ்ணன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவருடைய தலைமையில் நகராட்சி ஊழியர்கள் வரி வசூல் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், வீடுகளில் நிலுவையில் உள்ள வரியை வசூலிப்பதற்காக அனந்தராமகிருஷ்ணன் தலைமையிலான ஊழியர்கள் மேலூர் பகுதிக்குச் சென்றுள்ளனர். அப்போது, அங்குள்ள ஒரு வீட்டில் வசூல் செய்ய சென்றபோது அந்த வீட்டின் பெண் குளித்துக் கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி குளித்துக் கொண்டிருந்த பெண்ணை அனந்தராமகிருஷ்ணன் தனது செல்போனில் வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது.
இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பெண் கூச்சலிட்டு அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். உடனடியாக அனந்தராமகிருஷ்ணன் உள்ளிட்ட ஊழியர்கள் அங்கிருந்து திரும்பிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து அப்பெண் செங்கோட்டை நகராட்சி ஆணையாளர் புனிதனிடம் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின்பேரில், ஆணையாளர் விசாரணை மேற்கொண்டு அனந்த ராமகிருஷ்ணனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
வரி வசூல் செய்யப்போன இடத்தில் வீட்டில் குளித்துக் கொண்டிருந்த பெண்ணை செல்போனில் வீடியோ எடுத்த அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications