நடிகர் சங்க விவகாரம்: சரத்குமாருக்கு சீமான் பாராட்டு!
திருச்சி: நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் நல்ல உழைப்பாளி. அவர் நிறைய நல்ல காரியங்களை சிறப்பாக சங்கத்திற்காக செய்துள்ளார் என்று பாராட்டியுள்ளார் இயக்குநரும் நாம் தமிழர் கட்சித் தலைவருமான சீமான்.
கடந்த மே 24ஆம் தேதி நாம் தமிழர் கட்சி சார்பில், திருச்சியில் இன எழுச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட 40 பேர் மீது எடமலைப்பட்டி புதூர் காவல்நிலையத்தில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் ஜாமீன் பெற்ற சீமான் உள்ளிட்ட 40 பேர், நீதிமன்ற உத்தரவுப்படி திருச்சி நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட்டனர்.
நீதிமன்ற நடவடிக்கைகள் முடிந்து வெளியில் வந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அவரிடம் நடிகர் சங்க தேர்தல் குறித்து கருத்து கேட்டபோது, "தென்னக நடிகர் சங்க தேர்தலை பொறுத்தவரை, முதலாவதாக அந்த சங்கத்தின் பெயரையே மாற்ற வேண்டும். கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் தனியாக சங்கங்கள் செயல்படுகிறது. ஆனால் இங்குள்ள சங்கம் மட்டும் தென்னக நடிகர்கள் சங்கம் எனும் பெயரில் உள்ளது.
மற்ற மாநிலங்களில் தமிழக நடிகர்கள் உறுப்பினர்களாக சேரலாமே ஒழிய தேர்தலில் போட்டியிட முடியாது. தமிழகத்தை பொறுத்தவரை நடிகர் சங்கத்தில் சரத்குமார் நல்ல உழைப்பாளி. அவர் நிறைய நல்ல காரியங்களை சிறப்பாக சங்கத்திற்காக செய்துள்ளார். தற்போது கட்டடம் கட்டுவதில்தான் பிரச்னை.
மேலும் நாடக நடிகர்களை சங்கத்தில் இருந்து நீக்க நினைப்பது தவறு. காரணம் நாடக நடிகர்களாக இருந்தவர்கள்தான் கொடிகட்டி பறந்த ஊர் இது. உதாரணமாக சிவாஜி, எம்.ஆர்.ராதா உள்ளிட்டவர்களைச் சொல்லலாம். ராதாரவி நாடக நடிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அந்த ஓட்டு அவருக்கு போகும் என்பதால் நாடக நடிகர்களை நீக்கலாம் என்று சிலர் நினைக்கலாம். அது தவறு," என்றார் சீமான்.












Click it and Unblock the Notifications