இந்தியாவின் பொருளாதாரத்தை சீரழித்தவர் ப.சிதம்பரம்: சென்னை கூட்டத்தில் நரேந்திர மோடி தாக்கு
சென்னை: நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்தது "மறுவாக்கு எண்ணிக்கை" அமைச்சரான நிதி அமைச்சர் ப.சிதம்பரம்தான் என்று சென்னையில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கடுமையாக தாக்கியுள்ளர்.
சென்னையில் நடைபெற்று வரும் பொதுக்கூட்டத்தில் நரேந்திர மோடி பேசியதாவது:
2014- தேர்தலில் மக்கள் எண்ணம் ஓட்டம் எப்படி என்பதை வெளிப்படுத்துகிறது இன்றைய கூட்டம். தேர்தல் முடிவுகள் எப்படி? அலை எங்கே வீசுகிறது என்பதை வெளிப்படுத்துகிறது இன்றைய மக்கள் கூட்டம்.

கடந்த 10 ஆண்டுகால ஐமு கூட்டணி ஆட்சியைப் போல் முன்னெப்போதும் பிரச்சனைகளை எதிர்கொண்டது இல்லை. அரசு என்பது ஏழைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகத்தான் இருக்க வேண்டும்.
ஆனால் சுதந்திரத்துப் பிந்தைய அரசாங்கங்கள் ஏழைகளுக்கு என்ன செய்து இருக்கின்றன? தேர்தலின் போதுதான் ஏழை ஏழை என அவர்கள் ஜெபம் செய்கின்றனர்
ஏழ்மை என்பது ஒருவரது மனோநிலை என்கிறார் ஒரு அரசியல் கட்சித் தலைவர்.. ஏழைகளை ஏளனம் செய்கிற அப்படியான கட்சிகள் ஆட்சியில் இருந்தால் நன்மை கிடைக்காது.
மீனவர் பிரச்சனைக்கு மத்திய அரசுதான் காரணம்
மத்திய அரசுக்கு ஏழைகள் மீது அக்கறை இருந்தால் தமிழக மீனவர்களுக்கு பிரச்சனை நடந்திருக்காது, தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் அவதிப்படுகின்றனர். குஜராத் மீனவர்கள் பாகிஸ்தான் சிறையில் அவதிப்படுகின்றனர்.

இப்படி மீனவர்கள் துயரப்பட காரணம் மத்தியில் இருக்கும் பலவீனமான அரசுதான். பலவீனமான மத்திய அரசின் பேச்சை உலகில் எந்த ஒரு நாடும் கேட்க தயாரில்லை.
பாகிஸ்தான், இலங்கை, மியான்மர், சீனா, வங்கதேசத்தால் நமக்கு பிரச்சனை வர பலவீனமான மத்திய அரசுதான் காரணம். மத்திய அரசு கையை கட்டிக் கொண்டு இருப்பதாலே 125 கோடி மக்களுக்கும் அண்டை நாடுகளால் பிரச்சனை வருகிறது.
அண்டை நாடுகளுடன் நல்லுறவு உருவாக வலிமை மிக்க மத்திய அரசு அவசியம். வலிமையான மத்திய அரசு அமைந்தால் அண்டை நாடுகள் நல்லுறவு நாடி வரும்.
தற்போதைய மத்திய அரசு அண்டைநாடுகளுடனான உறவை சீர்குலைத்துவிட்டது. நாட்டின் அனைத்து அரசியல் அமைப்புகளையும் மத்திய அரசு சீரழித்துவிட்டது.
அரசியல் அமைப்புகளின் புனிதத்தை, நேர்மையை பாதுகாக்காவிட்டால் நாட்டில் பதற்றம் உருவாகும். நாட்டின் ராஜ்பவன்கள் அனைத்தும் காங்கிரஸ் அலுவலகங்களாக்கப்பட்டுவிட்டன.
<center><iframe width="100%" height="360" src="//www.youtube.com/embed/WFsR8CNpOiI?feature=player_embedded" frameborder="0" allowfullscreen></iframe></center>
ராஜ்பவன்கள் -- காங்கிரஸ் பவன்கள்
மாநில அரசின் கோப்புகளில் கையெழுத்திட ஆளுநர்கள் மறுக்கின்றனர். வருமான வரி அலுவலகங்களை காங்கிரஸ் அரசு துஷ்பிரயோகம் செய்கிறது.
குஜராத்தில் முதலீடு செய்வோருக்கு வருமான வரித்துறை மூலம் மத்திய அரசு முட்டுக்கட்டை போடுகிறது. மகளிர், சிறுபான்மையினர் ஆணையங்களையும் கூட காங்கிரஸ் சீரழித்துவிட்டது.
சிபிஐ அமைப்பை தவறாக பயன்படுத்துகிறது மத்திய அரசு. அரசியல் காரணங்களுக்காக சிபிஐ பயன்படுத்தப்படுகிறது. அரசாங்கத்தை காப்பாற்ற, உருவாக்க சிபிஐ அமைப்பை பயன்படுத்துகின்றனர்..
உச்சநீதிமன்றத்தையும் அதன் தீர்ப்பையும் அவமதிக்கிறது மத்திய அரசு. உணவு தானியங்களை கொடுங்கள் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டால் மறுக்கிறது மத்திய அரசு.
வீணாகும் உணவுதானியங்களை ஏழைகளுக்கு கொடுக்க மறுத்து மதுபான தொழிலதிபர்களுக்கு கொடுக்கிறது. வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் நதிநீர் இணைப்பு திட்டத்தை முன்னெடுத்தார்,
கங்கை- காவிரி இணைக்க வாஜ்பாய் ஆட்சி திட்டம் வகுத்தது. ஆனால் நதிநீர் இணைப்பு தொடர்பாக உச்சநீதிமன்றம் கேட்டும் கமிட்டி அமைக்காமல் இருக்கிறது மத்திய அரசு.
திட்டக் கமிஷனுக்கான மரியாதையை காங்கிரஸ் அரசு காற்றில் பறக்க விட்டுவிட்டது. மத்திய அரசுக்கும் ராணுவத்துக்கும் இடையே பதற்ற சூழலை உருவாக்கிவிட்டது காங்கிரஸ் அரசு.
ராணுவத்தில் மதவாத சிந்தனையை காங்கிரஸ் அரசாங்கம் உருவாக்கி வைத்திருக்கிறது. மதரீதியாக ராணுவத்தில் கணக்கெடுத்தனர்.
அதேபோல் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் ராணுவத்துக்கும் இடையே கருத்து வேறுபாட்டை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.. நாடாளுமன்றத்தில் அமைச்சர் அறிக்கை தாக்கல் செய்தால் அதை ராணுவம் மறுக்கிற நிலை இருக்கிறது.
நாட்டை நாம் காப்பாற்ற காங்கிரஸ் அரசுக்கு விடை கொடுத்தாக வேண்டும். மத்திய- மாநில அரசுகளுக்கு இடையே மோதல், மாநிலங்களுக்கு இடையே மோதல் என்ற இந்த நிலைக்கு காங்கிரஸ் அரசுதான் காரணம்.

எங்கெங்கும் முரண்பாடு
ஆளும் கட்சிக்கும் அரசுக்கும் இடையே கூட மோதல் உருவாகி இருக்கிறது., நாட்டின் பிரதமர் தலைவராக இருக்கும் திட்டக் கமிஷனுக்கும் மத்திய அரசுக்கும் இடையேகூட முரண்பாடு இருக்கிறது.
அந்த திட்டக் கமிஷன் பரிந்துரையை மத்திய அமைச்சரவையே நிராகரிக்கிறது. அதேபோல் மத்திய அரசுக்கும் உச்சநீதிமன்றத்துக்கும் இடையே முரண்பாடு.
அதைவிட மத்திய அரசின் முடிவை ஆளும் கட்சி தலைவர் ஒருவர் கிழித்து எறிவது எங்கேயாவது நடந்தது உண்டா? இங்கே நடந்தது.
கூட்டாட்சி முறைக்கு எதிராக மாநிலங்களின் வளர்ச்சிகளுக்கு முட்டுக்கட்டை போடுகிறது காங். அரசு. வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் மாநில அரசுகளுக்கு மரியாதை அளிக்கப்பட்டது. கூட்டாட்சி முறையை மத்திய அரசு சீரழித்துக் கொண்டிருக்கிறது
மாநில கட்சிகளோடு இணைந்து காங்கிரஸ் ஊழல் செய்திருப்பதை தமிழகம் நன்கறியும். குஜராத்தில் இருந்து கொண்டு ஏமாளி, முட்டாள் என்றெல்லாம் விமர்சிக்கின்றனர்..
25 ஆண்டுகாலமாக குஜராத் மக்கள் யார் ஏமாற்றுக்காரர்கள் என்பதை அறிவார்கள். கடந்த மூன்று முறை உங்களை குஜராத் மக்கள் ஏற்கவில்லையே.. குஜராத் மக்களை ஏமாற்ற முயற்சிக்கிறீர்கள்- ஏமாற்ற முடியாது
அதேபோல் ஒட்டு மொத்த நாட்டு மக்களையும் ஏமாற்ற முயற்சிக்கிறீர்கள்- அது நடக்காது மத்திய அரசில் "மறுவாக்கு எண்ணிக்கை அமைச்சர்" என்று ஒருவர் இருக்கிறார்.
ப.சிதம்பரம் மீது தாக்கு
தேர்தலில் தோற்ற பின்னர் மறுவாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெற்றவர் அவர். தமக்குத்தான் கடவுள் முதலில் புத்தியை கொடுத்ததாக அவர் நினைக்கிறார்.. அவர் அகங்காரத்தின் உச்சத்தில் நின்று மிக மோசமாக விமர்சித்தாலும் மவுனமாக இருக்கிறேன்.
என்னதான் சகதி உயரே வந்தாலும் தாமரை அதனைவிட மேலே வரும். மோடிக்கு பொருளாதார அறிவு குறைவு என்று பேசுகிறார் ப.சிதம்பரம் எனக்கு போஸ்டர் ஸ்டாம்ப் அளவுதான் பொருளாதார அறிவு இருப்பதாக ப.சி. பேச்சு
காங்கிரஸ் அரசின் பிரதமர் பிரபல பொருளாதார நிபுணர்... நிதி அமைச்சரும் தம்மை பொருளாதார நிபுணராக நினைக்கிறார்.. தம்மைவிட யாரும் புத்திசாலி இல்லை என நினைக்கிறார் ப.சிதம்பரம்.
ப.சிதம்பரம் ஹார்வார்டு பல்கலைக் கழகத்தில் இருந்து வந்திருக்கலாம்.. ஆனால் நான் ஒரு ஹார்ட் ஒர்க்கர். வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8.6% ஆக இருந்தது.. ஆனால் 2012-13ல் பொருளாதார வளர்ச்சி 4.6% தான்..என்ன சாதித்திருக்கிறீர்கள்?
2001-ல் குஜராத்தில் மைனஸ் 4.8% ஆக இருந்தது பொருளாதார வளர்ச்சி. குறைவான பொருளாதார அறிவு கொண்ட எங்களால் இப்போது சாதிக்க முடிந்திருக்கிறதே?
2001-11,12 வரை நாட்டின் சராசரி வளர்ச்சி விகிதம் 7.6% . 2001-11,12 குஜராத்தின் வளர்ச்சி விகிதம் 10.1% . நாட்டின் தற்போதைய கடன் தொகை ரூ 50 லட்சம் கோடி என்பதுதான் உங்கள் பொருளாதார லட்சணமா?
நாட்டின் நிதிப் பற்றாக்குறை 3%க்கு கீழ் இருக்க வேண்டும் - ஆனால் நடப்பு நிதிப்பற்றாக்குறையோ 5.6%. நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்திருப்பது ப.சிதம்பரம் அவர்களே! நீங்கள்தான்
குஜராத்தில் குறைந்த அளவு வேலையின்மை- அதிக அளவு வளர்ச்சி என்ற நிலை உள்ளது. காங்கிரஸ் அரசிலோ வேலையில் இருப்பவர்கள் வேலையை இழக்கும் நிலை உருவாகி உள்ளது.
ப.சிதம்பரம் அவர்களே ஹார்வார்டில் இருந்து முன்னேற்றம் வராது- ஹார்ட் ஒர்க்கில் இருந்தே முன்னேற்றம் வரும் . மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சி அமைப்பதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்பதையே இந்த கூட்டம் வெளிப்படுத்துகிறது. முன்னேற்றம்- முன்னேற்றம்- முன்னேற்றம் என்பதே பாஜகவின் தாரக மந்திரம் என்றார் மோடி.
கூட்டணி கட்சிகள்
இக் கூட்டத்தில் பாஜகவின் மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் வரவேற்புரையாற்றினார். அக்கட்சி நிர்வாகிகள் வானதி ஸ்ரீனிவாசன், ஹெச். ராஜா, தமிழிசை சவுந்தராஜன், இல. கணேசன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.

மேலும் பாஜகவின் கூட்டணிக் கட்சித் தலைவர்களான மதிமுக துணை பொதுச்செயலர் மல்லை சத்யா, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் தலைவர் ஈஸ்வரன் மற்றும் இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர் ஆகியோரும் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பாஜக மற்றும் கூட்டணிக் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்,.












Click it and Unblock the Notifications