சவப்பெட்டி ஓபிஎஸ், வகுப்புவாத ஓநாய்கள்.... ஐடி ரெய்டு பற்றி நாஞ்சில் சம்பத்
அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை சோதனைகள் நடத்தப்பட்டதற்கு தினகரன் கோஷ்டியைச் சேர்ந்த நாஞ்சில் சம்பத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார் உள்ளிட்டோர் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டதற்கு அதிமுக(அம்மா) அணியின் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நாஞ்சில் சம்பத் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் , சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் நடிகர் சரத்குமார் , காஞ்சி மாவட்ட செயலாளர் சிட்லப்பாக்கம் இராஜேந்திரன் ஆகியோரின் வீடுகளிலும் , அலுவலகங்களிலும் நடத்தப்பட்ட வருமானவரித்துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கையின் இரண்டாவது கட்டம். கழக வெற்றிச் சின்னம் இரட்டை இலையை முடக்கி கழகத்தின் பெயரை உச்சரிக்க தடை விதித்த சக்திகள் இப்போது வீடு புகுந்து சோதனை நடத்துவது என்பது அருவருக்கத் தகுந்தது.
நடிகர் சரத்குமாரை மருத்துவ பரிசோதனைக்கு அனுமதிக்காமலும் , அமைச்சர் விஜயபாஸ்கர் மகனை பள்ளிக்குச் செல்ல அனுமதிக்காமலும் வன்மையாக நடந்துக் கொண்ட வருமானவரித்துறை அதிகாரிகள் மீது நமக்கு எந்த கோபமும் இல்லை. இப்படி ஈனத்தனமாக நடந்து கொள்வதற்கு அவர்களை ஏவி விட்டவர்கள் மீதுதான் நமக்கு கோபம்,

கரும்பு கொல்லைக்குள் காட்டெருமை
நந்தவனத்துக்குள் நாய் நுழைந்தது மாதிரி, கரும்பு கொல்லைக்குள் காட்டெருமை நுழைந்தது மாதிரி, சூரியோதயத்திற்கு முன்னமே சோதனை என்கிற பெயரில் வீடு புகுந்ததை மறக்கவும் முடியாது மன்னிக்கவும் முடியாது. துணை பொதுச் செயலாளர் பண்பாளர் டிடிவி தினகரனை சந்தித்த பாவத்திற்காக சரத்குமார் வீட்டில் சோதனை என்றால் சவப்பெட்டி பன்னீர் செல்வத்தை சந்தித்த ஜிகே வாசன் வீட்டிற்கும் சோதனை போய் இருக்க வேண்டாமா?

ஆகாயத்தை அழுக்காக்க முடியாது
சவப்பெட்டியில் அம்மாவின் சடல மாதிரியை வைத்து தேசியக்கொடியை அவமதித்ததற்கு ஏதேனும் தண்டனை உண்டா? வருமானவரி சோதனை என்ற பெயரில் அதிமுக என்னும் ஆகாயத்தை ஒரு காலும் அழுக்காக்க முடியாது,

வகுப்புவாத ஓநாய்கள்
இன்னும் வருகிற நாட்களில் இவர்கள் என்னென்ன செய்வார்கள் என்பதை நாம் யூகிக்காமல் இல்லை. தேசத்தையே காவிமயமாக்கத் துடிக்கின்ற வகுப்புவாத ஓநாய்களைக் கண்டு அச்சப்பட நாங்கள் ஒன்றும் கோழைகள் அல்ல.

வெம்பமாட்டோம்
ஆண்டவனையே கேள்வி கேட்க தொடங்கிய திராவிட இயக்கத்தின் நீட்சியாக இருக்கின்ற அதிமுக இதை சந்திக்க வேண்டிய முறையில் சந்திக்கும். ஒரு யுத்த காலத்தில் நாங்கள் களத்தில் நிற்கிற பொழுது இப்படி சோதனை நடத்துவதால் நாங்கள் வேதனை அடைந்து வெம்பி விடுவோம் என எதிர்பார்க்கிறார்கள்.

ஈரோட்டு வெடிமருந்து
அண்ணா மூட்டிய அனல் இன்னும் அணையவில்லை, அன்னை முலைப்பால் ஈரம் இன்னும் குறையவில்லை, ஈரோட்டு வெடிமருந்து இன்னும் தீரவில்லை. இமயமே ஆச்சரியப்பட்ட இமைப்பொழுதும் எங்கள் நெஞ்சில் நீங்காமல் இருக்கின்ற அம்மாவின் தொண்டர்களின் வைராக்கியத்திற்கு பஞ்சம் ஒன்றும் ஏற்பட்டு விடவில்லை.

கனவில் கல்லெறிவோம்
அரைக்க அரைக்க மணக்கும் சந்தனமாய் அறுக்க அறுக்க ஒளி வீசும் வைரமாய் , உதைக்க உதைக்க உயரும் பந்தாய் நாங்கள் உயர உயர பறப்போம். மதவாத சக்திகளை இந்த மண்ணில் கால் ஊன்ற துடிக்கின்ற அவர்களின் கனவில் தொடர்ந்து கல்லெறிவோம், தமிழ்நாடு ஒரு காலும் தலை கவிழாது என்பதை தொடர்ந்து நிரூபிப்போம்.
இவ்வாறு நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications