ஆட்சியில் அமர்ந்து வாரிச் சுருட்ட நினைத்தோரை அம்பலப்படுத்தியது தீர்ப்பு: நாஞ்சில் சம்பத்- Exclusive
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து வரலாற்று பழியைத் தேடிக்கொண்டார் சபாநாயகர் என நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
சென்னை: சபாநாயகர் 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்து வரலாற்று பழி தேடிக்கொண்டார் என அதிமுக அம்மா அணி செய்தி தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் விமர்சித்துள்ளார்.
தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து நமது ஒன் இந்தியா தமிழுக்கு நாஞ்சில் சம்பத் அளித்த சிறப்புப் பேட்டி:
தர்மத்தை நெரித்துத் தள்ளிவிடலாம், நீதியை ஆழக் குழி தோண்டி புதைத்து விடலாம் என்று கருதி இருந்தவர்களுக்கு சம்மட்டி அடி கொடுத்ததைப் போல, நீதிக்கு கவரி வீசுகிற வகையில் உயர்நீதிமன்றம் உன்னத தீர்ப்பைக் கொடுத்துள்ளது. தமிழக அரசியலின் ஸ்திரமற்ற அரசியல் சூழலுக்குகு காரணமானவர்கள் தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்பதை இந்த தீர்ப்பின் மூலம் தெளிவாக தமிழ்நாட்டு மக்கள் புரிந்துகொண்டார்கள்.

ஜனநாயகத்தை சிரச்சேதம்...
18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ததன் மூலம் ஜனநாயகத்தை சிரச்சேதம் செய்ய சட்டசபை சபாநாயகர் துணிந்திருக்கிறார். தமிழக முதல்வரும், ஆளுநரும் சபாநாயகரும் திட்டமிட்டு இந்த ஜனநாயக படுகொலையை நிகழ்த்திருக்கிறார்கள். ஆகாயத்தையும் சூறையாடுவதற்கு திட்டமிட்டுள்ள ஆதாயச் சூதாடிகள் அடிக்கிற கொள்ளைக்கு கணக்குமில்லை; கேள்வியுமில்லை.

நாற்காலிக்காக...
நாட்டு மக்களின் நலன்களையெல்லாம் புதைத்துவிட்டு, எப்படியாவது நாற்காலியில் உட்கார்ந்து விடுவதற்கு சட்டத்தின் சந்துபொந்துகளில் நுழைந்துகொண்டு, 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ததன் மூலம் வரலாற்றில் மிகப் பெரிய பழியை சபாநாயகர் தனபால் தேடிக்கொண்டார். சட்டசபைக்குமட்டும்தான் அவர் சபாநாயகர். சட்டசபைக்கு வெளியே உறுப்பினர்கள் மீது அதிகாரம் செலுத்த அவருக்கு உரிமை கிடையாது.

பச்சை துரோகிகளுக்கு...
நம்பிக்கை வாக்கெடுப்பு என்று சட்டசபயில் ஒரு தீர்மானம் வருமானால், அதன்மீது கொறடா உத்தரவு பிறப்பிக்க முடியுமே தவிர மற்ற நேரங்களில் கொறடாவுக்கு எந்த வேலையும் இல்லை. ஆனால் கட்சிக்கு துரோகம் செய்த பச்சை துரோகிகளுக்கு பவளமல்லி மலர்களைத் தூவி வரவேற்பு கொடுக்கிறார்கள். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்ட போது ஆட்சிக்கு எதிராக வாக்களித்தவர்களை பாதுகாக்கும் பேரவை தலைவர், ஆட்சிக்கு எதிராக எந்த குரலையும் எழுப்பாத சட்டப்பேரவை உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.

முதல்வர்தான் மாற்றப்பட வேண்டும்
முதலமைச்சர் மீது நாங்கள் நம்பிக்கை இழந்திருக்கிறோம், அளவுக்கு மீறி ஊழல் நடக்கிறது. அதனால் முதல்வரை மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோமே தவிர, ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும் என எங்கள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் சொல்லவில்லை. இதைத்தான் கவர்னரிடமும் நாங்கள் நேரடியாக சந்தித்துச் சொல்லியிருக்கிறோம்.

வரவேற்புக்குரிய தீர்ப்பு
ஆனால் எங்கள் கோரிக்கைதெல்லாம் நிராகரித்துவிட்டார்கள். ஆனால் ஆட்சியில் அமர்ந்து கொள்ளையடித்து வாரிச் சுருட்ட வேண்டும் என்று நினைத்தவர்களை உயர்நீதிமன்ற தீர்ப்பு அம்பலப்படுத்தியுள்ளது. உயர்நீதிமன்ற தீர்ப்பின் மூலம் தமிழ்நாட்டு மக்கள் பெரு நிம்மதி அடைந்துள்ளார்கள். தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் இந்த தீர்ப்பை வரவேற்கிறார்கள். இவ்வாறு நாஞ்சில் சம்பத் கூறினார்.












Click it and Unblock the Notifications