எறும்புகள் சாகிறது என்பதற்காக யானை நடக்காமல் இருக்குமா? நாஞ்சில் சம்பத்தின் இன்னொரு எசகுபிசகு பேட்டி
சென்னை: சமீபகாலமாக நெட்டிசன்களால் அதிக கேலிக்கு உட்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கிறார் அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத். இதற்கு காரணம், அவர் எந்த ஒரு பிரச்சினையையும் சீரியசாக எடுத்துக்கொள்வதில்லை என்பதுதான்.
இன்று காலை புதிய தலைமுறை செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியின்போது, வெள்ளம் பாதித்த நிலையிலும், அதிமுக பொதுக்குழு கூட்டம் கோலாகலமாக நடைபெற்றதே என்ற கேள்விக்கு, சாவு வீட்டுக்காக கல்யாணங்கள் நடக்காமலா இருக்கிறது என்று அலட்சியமாக பதில் சொன்னார் நாஞ்சில் சம்பத்.

இந்நிலையில், இன்று இரவு 10 மணிக்கு தந்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள, கேள்விக்கு என்ன பதில் நிகழ்ச்சிக்காக, ரங்கராஜ் பாண்டே கேள்விகளுக்கு, நாஞ்சில் சம்பத் பதில் கொடுத்துள்ளார்.
அதன் ப்ரமோ வீடியோ அத்தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டு வருகிறது. இந்த டிவியிலும், நாஞ்சில் கூறிய பதில்கள் சர்ச்சைக்குறியதாக உள்ளது.
பெருவெள்ளம் பாதித்த சென்னையில் தெருவெல்லாம் தோரணம் நியாயமா..? பதிலளிக்கிறார் நாஞ்சில் சம்பத்.. "கேள்விக்கென்ன பதில்" - இன்று இரவு 10 மணிக்கு..#KelvikkennaBathil #NanjilSampath #ADMK
Posted by Thanthi TV on Friday, January 1, 2016
பெருவெள்ளம் புரட்டி போட்ட பிறகு பொதுக்குழு கூட்டம் கோலாகலமாக, கொண்டாட்டமாக நடக்கும்போது சரியா என்ற விமர்சனம் முன்வைக்கப்படுகிறதே என்று ரங்கராஜ் பாண்டே கேள்வி எழுப்பிய காட்சியும், அதையடுத்து நாஞ்சில் சம்பத், "எறும்புகள் சாகிறது என்பதற்காக யானை நடக்காம இருக்க முடியுமா" என்று பதில் சொல்லும் காட்சியும் காண்பிக்கப்படுகிறது. இதே கேள்விக்கான பதில்தான் அதுவா என்பது இரவு நிகழ்ச்சி பார்க்கும்போதுதான் தெரியும் என்றாலும், இக்கேள்விக்கு இப்பதிலைத்தான் அவர் அளித்திருப்பார் என்ற எண்ணத்தில் நெட்டிசன்கள் இப்போதே ட்ரோல் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.
வெள்ளத்தில் உயிரிழந்த 500 பேரை ஏன் கண்டுகொள்ளவில்லை, அதிமுக பொதுக்குழுவில் அதுதொடர்பாக ஏன் தீர்மானம் நிறைவேற்றவில்லை? என்ற கேள்விக்கு, தேவையில்லை, நிறைவேற்றவில்லை என்று நாஞ்சில் பதிலளிப்பது போல காட்சி ஒளிபரப்பாகிறது.
ஸ்டாலினின் நமக்கு நாமே பிரச்சார கூட்டம் குறித்து, கேட்ட கேள்விக்கு, பதிலளித்த நாஞ்சில் சம்பத், நாவை அதிகமாக சுழற்றியுள்ளார். "ஸ்டாலின் மக்களிடம் பிரச்சினைகளை கேட்கிறார். ஆனால், அதற்கான தீர்வுகள் சொல்ல தெரியவில்லை. திருமணமாகவில்லை என்று ஒரு பெண் குறை கூறினால், ஆட்சிக்கு வந்ததும், திருமணம் செய்து வைக்கிறேன் என்கிறார். குழந்தையில்லை என்று ஒரு பெண் கூறினால், ஆட்சிக்கு வந்ததும் செய்கிறேன் என்கிறார்". இவ்வாறு நாஞ்சில் சம்பத் சர்ச்சைக்குறிய வகையில் பேட்டியளித்துள்ளார்.
இரவு 10 மணிக்காக கண்ணில் விளக்கெண்ணை ஊற்றி காத்திருக்கிறார்கள் நெட்டிசன்கள்.












Click it and Unblock the Notifications