ஜெயா டிவி, நமது எம்ஜிஆரை கைப்பற்றுவதாக கூறுவது மோசடி.. நாஞ்சில் சம்பத் கொதிப்பு
டிடிவி. தினகரனின் நியமனம் செல்லாது என்று சொல்வது முட்டாள் தனமானது என்று அதிமுக அம்மா அணியின் பேச்சாளரும் தினகரன் ஆதரவாளருமான நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
சென்னை : டிடிவி. தினகரனின் நியமனம் செல்லாது என்று முதல்வர் பழனிசாமி அணி சொல்வது அவர்களின் முட்டாள்தனத்தையே காட்டுகிறது என்று நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
சென்னை அடையாறில் டிடிவி. தினகரன் இல்லத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது : தினகரனின் நியமனமும் செல்லாது, அவர்களால் நியமிக்கப்பட்டவர்களின் நியமனமும் செல்லாது என்று சொல்வதை எப்படி ஏற்க முடியும். இளைஞர் இளம்பெண்கள் பாசறையில் இருந்து திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் குமார் நீக்கப்பட்டு அந்தப் பொறுப்பிற்கு கே.சி.விஜய் நியமிக்கப்பட்டு அவர் வந்து தினகரனை சந்தித்து வாழ்த்து பெற்று சென்றுவிட்டார்.

இது தான் எங்கள் கட்சியின் நடைமுறை, விஜய் தன்னுடைய பொறுப்பில் செயல்படத் தொடங்கிவிட்டார். இனிமேல் அதிகாரம் இவர் கைக்கு வந்தது. பொதுச்செயலாளர் நியமித்ததால் துணைப் பொதுச்செயலாளரான தினகரனுக்கே கட்சியில் நிர்வாகிகளை மாற்றும் அதிகாரம் உள்ளது.
நிலைமை இப்படி இருக்க தினகரனை கட்சியில் இருந்து நீக்க முடிவு செய்யும் எதிர் அணியின் செயல் முட்டாள்களின் சொர்க்கத்தில் இருக்கிறார்கள் என்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது. முதல்வர் பழனிசாமி அணி போட்டுள்ள 4 தீர்மானத்தில் தீர்மானமாக எதையும் சொல்லவில்லை. ஜெயா டிவி, நமது எம்ஜிஆர் தனியார் நிறுவனங்கள் இவற்றைக் கைப்பற்றுவேன் என்று சொல்வது மோசடி வேலை. இப்படி செய்தால் அன்று தினகரன் முதல்வர் பழனிசாமியை 420 என்று சொன்னதில் என்ன தவறு இருக்கிறது. என் வீட்டை முதல்வர் கைபற்ற முடியுமா? இது 420 இல்லையா? என்று சம்பத் கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications