நீண்ட இடைவெளிக்குப் பிறகு களை கட்டுகிறது தமிழக அரசியல்.. கருணாநிதி பிறந்த நாள்.. தலைவர்கள் வருகை!
சென்னை: ஜெயலலிதா மரணம், கருணாநிதி சுகவீனம்.. இந்த இரண்டுமே தமிழக அரசியலை புரட்டிப் போட்டு விட்டது. கிட்டத்தட்ட தமிழக அரசியல் நீர்த்துப் போனது போன்ற ஒரு சூழல். யார் யாரோ அரசியல் செய்கிறார்கள்.. என்னென்னவோ நடக்கிறது. இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழக அரசியல் களம், கருணாநிதி பிறந்த நாளையொட்டி களை கட்டப் போகிறது.
தலைவர்கள் என்றால் கருணாநிதி, ஜெயலலிதா என்று வரும்போதுதான் அதற்கு ஒரு முறுக்கு கிடைக்கிறது என்பது உண்மைதான். அவர்கள் இல்லாத தமிழக அரசியல் மிகப் பெரிய வெற்றிடம் என்பதை கடந்த சில மாதங்களாக தமிழகம் பார்த்து வருகிறது.
திமுக தலைவர் கருணாநிதியின் 94வது பிறந்த நாளையொட்டி தமிழக அரசியல் மீண்டும் லைம்லைட்டுக்குத் திரும்புகிறது. அகில இந்தியத் தலைவர்கள் பலரும் சென்னை வரவுள்ளனர்.

ஜூன் 3
திமுக தலைவர் கருணாநிதியின் 94வது பிறந்த நாள் ஜூன் 3ம் தேதி கொண்டாடப்படுகிறது. நலிவுற்ற நிலையில் வீட்டில் ஓய்வு மற்றும் சிகிச்சையில் இருந்து வரும் கருணாநிதி தற்போது குணமடைந்து வருகிறார். அவரது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடவுள்ளது திமுக.

பல கட்சிகளின் சங்கமம்
பல்வேறு கட்சிகளின் தலைவர்களுக்கும் பிறந்த நாளையொட்டி அழைப்பு கொடுத்து வருகிறது திமுக. தேசியத் தலைவர்களையும் அழைக்கிறார்கள். லாலு வருகிறார், நிதீஷ் குமார வருகிறார். மேலும் பல தலைவர்களும் வரவுள்ளனர்.

திமுகவினர் உற்சாகம்
கருணாநிதியின் சுகவீனத்தால் தொய்வடைந்துள்ள திமுகவுக்கும், திமுகவினருக்கும் இந்த பிறந்த நாள் விழா ஒரு பூஸ்ட் போல வந்துள்ளது. இதனால் கருணாநிதி பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாட திமுகவினரும் தயாராகி விட்டனர்.

அரசியலுக்கும் உற்சாகம்தான்
தமிழகத்தில் இப்போது தலைவர்கள் என்று வலம் வரும் பலரையும் பார்த்தால் தலைவர் என்று கூறுவதற்கே சற்று யோசனையாகத்தான் உள்ளது. கருணாநிதி, ஜெயலலிதா போன்ற ஜாம்பவான்களைப் பார்த்த மக்களுக்கு இவர்கள் இருவரும் இல்லாத அரசியல் களம் நிச்சயம் பெரும் ஏமாற்றம்தான். அதில் கருணாநிதி திரும்ப வருவது தமிழக அரசியல் களத்திற்குமே கூட சற்று உற்சாகமான விஷயம்தான்.












Click it and Unblock the Notifications