கடல்சார் வாணிப தினம்… இழுவை கப்பல்களின் அணிவகுப்பு: ரசித்த பொது மக்கள்
நெல்லை: தூத்துக்குடி துறைமுகத்தில் 52வது தேசிய கடல்சார் வாணிப தினம் கொண்டாடப்பட்டதை முன்னி்ட்டு நடைபெற்ற இழுவை கப்பல்கள் அணிவகுப்பினை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 5ஆம் தேதி தேசிய கடல்சார் வாணிப தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 52வது தேசிய கடல்சார் வாணிப தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் உள்ள மாலுமிகள் நினைவிடத்தில் வ.உ.சி சிதம்பரனார் துறைமுக பொறுப்பு கழக துணை தலைவர் நடராஜன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் தூத்துக்குடி துறைமுக தளத்தில் தேசிய கடல் சார் வாணிப தினம் கொண்டாடப்பட்டது. இதற்காக தூத்துக்குடி துறைமுகத்தில் இழுவை படகுகள் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தன. இதனை பொதுமக்கள் பார்த்து வியந்தனர். பின்னர் துறைமுக சபையில் உள்ள வழிகாட்டி படகுகளான முசல், நல்லதண்ணி மற்றும் இழுவை கப்பல்களான திருவள்ளுவர், தூத்துக்குடி, ஓசியன் என்டர், ஓசியன் பிரேவ் ஆகியவை கடலில் அணிவகுத்து வந்தன. துறைமுக சபை துணை தலைவர் நடராஜன் இழுவை கப்பல்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர் கப்பல்களில் ஏற்படும் தீ விபத்துகளின் போது எப்படி தீயை அணைத்து எப்படி மீட்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை விளக்கும் வகையில் இழுவை கப்பல்களில் இருந்து தண்ணீர் பீய்ச்சி அடித்து காண்பிக்கப்பட்டது.
இதன்பின் இழுவை கப்பல்களான தூத்துக்குடி சார்பில் சாகச நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த இழுவை கப்பல் செய்த சாகச நிகழ்ச்சிகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர். பின்னர் துறைமுக சபை சார்பாக சிறுவர், சிறுமியருக்கு பல்வேறு போட்டிகள் வைக்கப்பட்டன. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கடல்சார் வாணிப விழாவை முன்னிட்டு துறைமுகத்தை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications